செவ்வாழையில் உள்ள செம்மையான பலன்கள் தெரியுமா?

Health Benefits of sevvazhai
Health Benefits of sevvazhaihttps://tamil.oneindia.com

யற்கையான முறையில் விளையும் வண்ணமயமான காய்கறிகள், பழங்கள் அனைத்துமே உடல் நலனுக்கு அபரிமிதமான பலன்களைத் தரும் என்பது அனைவரும் அறிந்ததே. அதில் ஒன்றுதான் செவ்வாழைப்பழம். இதில் பலவித மருத்துவ நன்மைகள் உள்ளன. முக்கியமாக, இது குழந்தையின்மை பிரச்னைக்கு தீர்வு தருகிறது என்கின்றனர்.

தற்காலத்தில் சத்தற்ற உணவுமுறை, அழுத்தம் தரும் பணிச்சுமை, ஒழுங்கு தவறிய நெறிகள் போன்ற பல காரணங்களால் ஆண், பெண் இருபாலரிடமும் மலட்டுத்தன்மை அதிகரித்து வருவதாக அறிகிறோம். இதனால் செயற்கை கருத்தரிப்பு சிகிச்சையை தேடிச் செல்லும் தம்பதியரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதற்குத் தீர்வைத் தருகிறது செவ்வாழை. தம்பதியர் தொடர்ந்து ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் செவ்வாழைப்பழம் சாப்பிட்டுவந்தால் குழந்தைப்பேறு நிச்சயம் என்கிறார்கள் பெரியவர்கள். ஆண்கள் தேனில் ஊற வைத்த பழத்தை காலையிலும், பெண்கள் இரவில் அப்படியே சாப்பிடுவதும் பலன் தரும். செவ்வாழை ஆற்றல் கொடுக்கும் பழம் மட்டுமல்லாமல், பெண்களின் கருப்பை மற்றும் மாதவிடாய் பிரச்னைக்கும் தீர்வு தருகிறது.

இந்தப் பழத்தில் பொட்டாசியம், கால்சியம், வைட்டமின் ஏ, வைட்டமின் பி6, வைட்டமின் சி, மெக்னீசியம், பீட்டா கரோட்டின், தையமின், போலிக் ஆசிட் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. இதில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடெண்ட் நிறைந்துள்ளதால் தினமும் ஒரு செவ்வாழை பழத்தினை உட்கொண்டால் முதுமை தோற்றம் தடுக்கப்பட்டு, இளமை தோற்றத்தைப் பெறலாம். மேலும், சருமமும் பொலிவு பெறும்.

அதேபோல், இதில் உள்ள வைட்டமின் ஏ  கண்களின் ஆரோக்கியத்துக்கு சிறந்ததாக உள்ளது. இது பார்வைக்  கோளாறு பாதிப்புகள் ஏற்படாமல் தடுத்து  பார்வைத் திறனை மேம்படுத்துகிறது. குறிப்பாக, மாலைக்கண் நோய் பாதிப்பிலிருந்து நிவாரணம் பெற தொடர்ந்து இந்தப் பழத்தைச் சாப்பிட்டு வரலாம். செவ்வாழையில் இரத்த அணுக்கள் மேம்பாட்டுக்குத் தேவையான இரும்பு சத்து, வைட்டமின் பி, உயர்தர பொட்டாசியம் போன்ற சத்துக்கள் உள்ளதால் இரத்த உற்பத்தி சீராக நடைபெற உதவுகிறது. இரத்த சோகை, இரத்தக் குறைபாடு போன்ற பாதிப்புகளை இது  தடுக்கிறது.

உடலுக்குத் தேவையான சத்துக்களின் அளவு செவ்வாழைப்பழத்தில் சரிவிகிதத்தில் உள்ளதால் இதை சாப்பிட்டவுடன்  தேவையான ஆற்றலை உடனடியாகப் பெறலாம். அதிக உடல் உழைப்பு உள்ளவர்கள் மற்றும் உடற்பயிற்சி செய்பவர்கள் இந்தப் பழத்தினை உண்டு எலும்புகளின் ஆரோக்கியத்தைப் பெருக்கி உடலுக்கு  வலுவைச் சேர்க்கலாம்.

இதையும் படியுங்கள்:
காஞ்சிபுரத்தில் அமைந்த நவகிரஹ தலங்கள்!
Health Benefits of sevvazhai

இதில் உள்ள பொட்டாசியம் சத்து, சிறுநீரகக் கற்கள், இரத்த அழுத்தம், இருதய நோய் பாதிப்புகள் போன்ற பிரச்னைகளில் இருந்து காக்கிறது. இதில் உள்ள 50 சதவிகித நார்ச்சத்து மலச்சிக்கல் போன்ற பிரச்னைகளுக்கு தீர்வாக அமைகிறது. தொற்று நோய் கிருமிகளை தடுக்கும் சக்தி செவ்வாழைப்பழத்திற்கு அதிகம் உண்டு. நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி செவ்வாழையை எடுத்துக் கொண்டால் நல்ல மாற்றம் தெரியும். இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் இரத்த அணுக்களின் அளவை சீராக பராமரிக்க உதவுவதுடன், சரும வியாதிகளுக்கும் சிறந்த நிவாரணியாக அமைகிறது.

வாழைப்பழங்களிலேயே அதிக சத்துக்கள் கொண்ட இந்த செவ்வாழைப் பழத்தை  நீரிழிவு பாதிப்பு உள்ளவர்களும் பயமின்றி  மருத்துவரின் ஆலோசனையின்படி அளவாக சாப்பிடலாம் என்றும், இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் சர்க்கரையை கட்டுக்குள் வைப்பதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன. இத்தனை சிறப்புமிக்க செவ்வாழை பழத்தினை அனைவரும் உண்டு உடல் ஆரோக்கியம் பெறலாமே!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com