

அழும் குழந்தையைச் சமாதானப்படுத்தப் பெற்றோர்கள் கையில் எடுக்கும் முதல் ஆயுதம் பிஸ்கட் பாக்கெட் தான். டீக்கடைக்குச் சென்றால் கூட, நாம் டீ குடிக்கும்போது குழந்தைக்கு ஒரு கிரீம் பிஸ்கட்டை வாங்கிக் கொடுத்துவிட்டு நாம் நம் அரட்டையைத் தொடர்வோம். அந்த பிஸ்கட்டைப் பிரித்து, இரண்டு பிஸ்கட்டுகளுக்கு நடுவில் இருக்கும் கிரீமை மட்டும் நக்கிச் சாப்பிடும் குழந்தையின் அழகைப் பார்த்து நாம் ரசிக்கிறோம்.
ஆனால், அந்த அழகுக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் மிகப்பெரிய ஆபத்தை நாம் உணர்வதில்லை. நாம் அன்போடு ஊட்டுவது உணவல்ல, அது ஒரு மெல்லக் கொல்லும் நஞ்சு என்று சொன்னால் நம்புவது கடினம் தான். ஆம், கவர்ச்சியான பாக்கெட்டுகளில் விற்கப்படும் இந்த இனிப்புப் பண்டம் குழந்தைகளின் ஆரோக்கியத்தைச் சீர்குலைக்கும் முதல் எதிரியாகும்.
வெண்ணெய் அல்ல வனஸ்பதி!
விளம்பரங்களில் காட்டுவது போல, இந்த பிஸ்கட்டுகளுக்கு இடையில் இருப்பது பாலில் இருந்து எடுக்கப்பட்ட வெண்ணெய்யோ அல்லது பாலாடையோ கிடையாது. உண்மையில் அது வனஸ்பதி என்று சொல்லப்படும் மலிவான தாவர எண்ணெய் மற்றும் சர்க்கரைக் கலவை மட்டுமே.
டால்டா மற்றும் செயற்கை சுவையூட்டிகளைக் கலந்து, அதனுடன் கவர்ச்சியான நிறங்களைச் சேர்த்துத் தயாரிக்கப்படும் ஒரு ரசாயனக் கலவையே அந்த கிரீம். இதைச் சாப்பிடுவது நேரடியாகக் கெட்ட கொழுப்பை அள்ளிச் சாப்பிடுவதற்குச் சமம். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்குப் பாலுக்குப் பதிலாகக் கெமிக்கலை ஊட்டி வளர்க்கிறோம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
உடல் உறுப்புகளைச் சிதைக்கும் மைதா!
இந்த பிஸ்கட்டுகள் முழுக்க முழுக்க மைதா மாவினால் செய்யப்படுபவை. மைதா மாவு குடலில் ஒட்டிக்கொண்டு செரிமானக் கோளாறுகளை உண்டாக்கும். மேலும் இதில் உள்ள டிரான்ஸ் ஃபேட் எனப்படும் மோசமான கொழுப்பு வகை, பிஞ்சு குழந்தைகளின் ரத்தக் குழாய்களில் படிந்து, ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்களுக்கான அடித்தளத்தைச் சிறு வயதிலேயே அமைத்துவிடுகிறது. பள்ளி செல்லும் வயதிலேயே பல குழந்தைகளுக்குத் தொப்பை வருவதற்கு முக்கிய காரணம் இந்த கிரீம் பிஸ்கட்டுகள் தான்.
சுவைக்காகச் சேர்க்கப்படும் அதிகப்படியான சர்க்கரை, போதைப்பொருளைப் போல மூளையை அடிமையாக்கும் தன்மை கொண்டது. ஒரு முறை சாப்பிட்டால் மீண்டும் மீண்டும் சாப்பிடத் தூண்டும். இதனால் குழந்தைகள் காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்ற மற்ற சத்தான உணவுகளை வெறுக்கத் தொடங்குவார்கள்.
மேலும், பிஸ்கட் மாதக்கணக்கில் கெடாமல் இருக்கச் சேர்க்கப்படும் ஆபத்தான ரசாயனங்கள், குழந்தைகளின் மூளைச் செயல்பாட்டைப் பாதித்துக் கவனச் சிதறல் மற்றும் அதீத கோபத்தை உண்டாக்குகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. டீன் ஏஜ் பருவத்தில் வரும் ஹார்மோன் சமநிலையின்மை மற்றும் தைராய்டு பிரச்னைகளுக்கும் இதுவே மூலக்காரணமாக அமைகிறது.
மாற்று வழிகள்!
நாகரிகம் என்ற பெயரில் நம் பாரம்பரிய உணவுகளை மறந்துவிட்டு, இது போன்ற பாக்கெட் உணவுகளுக்கு அடிமையாகிவிட்டோம். பெற்றோர்கள் தங்கள் சோம்பேறித்தனத்தை விட்டுவிட்டு, குழந்தைகளுக்குக் கடலை மிட்டாய், எள்ளு உருண்டை அல்லது வீட்டில் செய்த பலகாரங்களைக் கொடுத்துப் பழக்க வேண்டும். ராகி மற்றும் கம்பு போன்ற சிறுதானியங்களில் செய்யப்பட்ட குக்கீஸ்களை வீட்டிலேயே தயாரித்துக் கொடுக்கலாம்.
(முக்கியக் குறிப்பு: இந்தக் கட்டுரை பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. சந்தையில் கிடைக்கும் பெரும்பாலான பிஸ்கட்கள் இதே போன்ற மூலப்பொருட்களைக் கொண்டே தயாரிக்கப்படுகின்றன. எனவே, பெற்றோர்கள் அதிக விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம்.
எந்தவொரு பிஸ்கட் அல்லது பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களை வாங்குவதற்கு முன்பும், அதன் பாக்கெட்டின் பின்னால் உள்ள Ingredients List முழுமையாகப் படியுங்கள். அதில் மைதா, சர்க்கரை,வனஸ்பதி, ரசாயனச் சுவையூட்டிகள் எந்த அளவில் உள்ளன என்பதைச் சரிபார்த்து வாங்குவதே புத்திசாலித்தனம்.)