
பூமி வெப்பமயமாதல் அதிகரிக்கும்போது, சுற்றுச் சூழல்களில் தொற்று நோய் பரவ காரணமாகும். பூஞ்சைகளின் அளவும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அப்படிப்பட்ட பூஞ்சைகளில் ஒன்றுதான் ஆஸ்பெர்கில்லஸ் பூஞ்சை. பூமியின் மண், தூசி மற்றும் அழுகிய இலைகளுக்கிடையில் தோன்றும் இந்தப் பூஞ்சை ஆரம்பத்தில் ஆபத்தில்லாததாகவே தோன்றுகிறது. போகப் போக சரியான வெப்பநிலை மற்றும் அதன் முக்கியத் தேவைகளும் நிறைவேறும் போது, அது மனிதர்களின் உள்ளும் புறமும் உள்ள திசுக்களை இரக்கமின்றி தின்று தீர்க்கும் அரக்கனாக மாறிவிடுகிறது.
ஆஸ்பெர்கில்லஸ்ஸின் வரலாறு: சுமார் முன்னூறுக்கும் மேற்பட்ட தாவர இனப்பூஞ்சை வகைகளின் கூட்டணியில் உண்டாவது இந்த ஆஸ்பெர்கில்லஸ். ஆஸ்பெர்கில்லோஸிஸ் எனப்படும் மனிதர்களுக்கு உண்டாகும் பல வகை நோய்களை உண்டாக்கக் காரணமாகிறது இந்த ஆஸ்பெர்கில்லஸ். தாவரக் கழிவுகள் குவிந்திருக்கும் ஈரப்பதமான இடங்கள், ஏர்கண்டிஷனரிலிருந்து நீர் வடியும் இடம் மற்றும் ஈரப்பதமுள்ள கட்டிடங்கள் போன்றவற்றில் சாதகமான வெப்பநிலை நிலவும்போது இந்தப் பூஞ்சை செழித்து வளர ஆரம்பிக்கிறது.
இதன் கண்ணுக்குப் புலப்படாத நுண்ணுயிர் விதைகள் காற்றில் பரவி மனிதர்கள் சுவாசிக்கும்போது உடலுக்குள் சென்று விடுகின்றன. நோயெதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளவர்களுக்கு இதனால் பாதிப்பு ஏற்படுவதில்லை. மற்றவர்களுக்கு, மரணம் வரை கொண்டு செல்லக்கூடிய கொடிய நோய் உண்டாக வழியாக உள்ளன. இந்தப் பூஞ்சை மற்ற பாலூட்டி விலங்குகள், பறவைகள், தேனீக்கள் மற்றும் பவளம் போன்றவைகளையும் பாதிப்படையச் செய்யும். நாள்பட்ட சுவாசப் பிரச்சினைகள் மற்றும் நுரையீரலில் கட்டி உருவாகவும் காரணமாகிறது ஆஸ்பெர்கில்லஸ்.
இம்மாதிரியான பாதிப்படைந்தவர்களுக்கு ஆன்டிஃபங்கல் மருந்துகள் கொடுக்கப்படுகின்றன அல்லது இது மேலும் பரவாமலிருக்க அறுவை சிகிச்சையும் பரிந்துரைக்கப்படுகிறது. நோயெதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் பாதிக்கப்படும்போது பத்துப் பேர்களில் எட்டுப் பேர் இறந்து விடுவதாக உலக சுகாதார அமைப்பின் (WHO) ஆராய்ச்சிப் பிரிவு கூறியுள்ளது.
பாதிப்படைந்திருப்போருக்கு உள்ள அறிகுறிகள்:
1. தொடர் இருமல் (சில நேரம் இரத்தம் உள்ளிட்ட)
2. நெஞ்சில் வலி
3. மூச்சு விடுவதில் சிரமம்
4. ஆன்டிபயாட்டிக்களுக்கு கட்டுப்படாத காய்ச்சல்
5. சோர்வு மற்றும் சக்தியின்மை
6. காரணமில்லாமல் எடை குறைதல்
7. முகத்தில் வலி அல்லது சைனஸ் போன்ற அழுத்தம்
பாதிப்படைய வாய்ப்புள்ளவர்கள் பட்டியல்:
லூகெமியா (Leukemia), லிம்போமா (Lymphoma) உள்ளவர்கள் மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்களுக்கு பாதிப்படைய அதிக வாய்ப்புள்ளது.
கீமோதெரப்பி அல்லது நீண்ட நாள் கார்டிகோஸ்டெராய்டு சிகிச்சையில் உள்ளவர்கள், ஆஸ்த்மா, சிஸ்ட்டிக் ஃபைப்ரோஸிஸ், திசுக்களில் சிதைவு போன்ற நுரையீரல் நோய்கள் உள்ளவர்கள், மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்க்கப்பட்டுள்ளவார்கள். இந்நோயின் பரவலைத் தடுக்கவும் சிகிச்சை முறையில் வளர்ச்சியடையவும் நாம் சந்திக்க வேண்டிய சவால்களைக் குறித்து உலக சுகாதார அமைப்பு கடுமையான எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.
முக்கிய அறிவிப்பு: இக்கட்டுரையில் உள்ள தகவல்கள், பல்வேறு செய்திகளின் தொகுப்பாக மட்டுமே வழங்கப்படுகின்றன. இவை மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகள் அல்ல. உடல்நலம் தொடர்பான எந்தவொரு சந்தேகத்துக்கும் பிரச்னைக்கும், அவசியம் மருத்துவரை/நிபுணரை அணுகவும்.