இட்லி, தோசை மாவை மூன்று நாட்களுக்கு மேல் வைத்து பயன்படுத்தினால் ஏற்படும் ஆரோக்கியக் கேடுகள்!

இட்லி, தோசை மாவு
இட்லி, தோசை மாவு
Published on

முன்பெல்லாம் ஆட்டு உரலில் இட்லி, தோசைக்கு தினமும் மாவு அரைத்து பயன்படுத்துவது வழக்கத்தில் இருந்தது‌. கிரைண்டர், மிக்ஸியின் வருகைக்குப் பிறகு இட்லி, தோசைக்கு மாவு அரைத்து அதை ஒரு வாரம், பத்து நாட்கள் என்று ரெஃப்ரிஜிரேட்டரில் வைத்து பயன்படுத்துகிறார்கள். ஆனால், அது உடலுக்கு பல ஆரோக்கியக் கேடுகளை ஏற்படுத்தும் என்கிறார்கள் ஆயுர்வேத மருத்துவர்களும்  ஊட்டச்சத்து நிபுணர்களும். அது பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

பாக்டீரியா வளர்ச்சி: பொதுவாக, இட்லி மற்றும் தோசை மாவு நொதித்து வரும் தன்மையுடையது. அதில் பாக்டீரியாக்களின் வளர்ச்சி அதிகமாக இருக்கும். மாவு அரைத்து இரண்டு மூன்று நாட்களுக்குள் அதை பயன்படுத்தி விட வேண்டும். இல்லாவிட்டால் அதில் உள்ள பாக்டீரியாக்கள் நச்சுக்களை உருவாக்குகிறது. அதேபோல, ஒரே பாத்திரத்தில் மாவை வைத்திருக்கும்போது பாக்டீரியாக்களின் வளர்ச்சி அதிகமாக இருக்கும்.

அமா நச்சுகள்: ஆயுர்வேத மருத்துவத்தில், ‘அமா’ என்பது செரிக்கப்படாத உணவுத் துகள்கள், நச்சுகள் மற்றும் உடலில் சேரக்கூடிய பிற பொருள்களைக் குறிக்கிறது. புதிய இட்லி மாவு தூய்மையானது என்று கருதப்படுகிறது. அதேசமயம் பழைய மாவு நச்சாக மாறலாம். அமாவை உட்கொள்ளும் அபாயத்தை குறைக்க புதிய மாவை பயன்படுத்த வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரை செய்கிறார்கள்.

வீக்கம்: பொதுவாக, பலரும் இட்லி, தோசைக்கு மாவு அரைக்கும்போது வெந்தயத்தை சேர்த்து அரைப்பார்கள். இது மூன்று நாட்களுக்கு மேல் அதிகமாகும்போது உடலில் வீக்கத்திற்கு வழிவகுக்கும். இதய நோய் உள்ளவர்களுக்கு மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

செரிமானப் பிரச்னைகள்: பழைய மாவை உடல் ஜீரணிக்கக் கடினமாக இருக்கும். இது வாய்வு மற்றும் வயிற்று அசௌகரியம் போன்ற செரிமான பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். புதிய மாவை பயன்படுத்துவது செரிமான பிரச்னைகளின் அபாயத்தைக் குறைக்கிறது.

ஊட்டச்சத்துக் குறைதல்: அறை வெப்ப நிலையில் நீண்ட காலத்திற்கு வைக்கப்படும் மாவு அதன் ஊட்டச்சத்து மதிப்பை இழந்து ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் குறைவான நன்மையை தரும்.

புளித்த ஏப்பம்: இரண்டு மூன்று நாட்களுக்கு மேல் ஆன இட்லி, தோசை மாவை பயன்படுத்தும்போது அது புளித்த ஏப்பத்தை வரவழைக்கும். மற்றும் நெஞ்செரிச்சல், அசௌகரியம் போன்றவற்றையும் தரும்.

விரல் சோதனை: இட்லி, தோசை மாவை விரலால் மெதுவாக அழுத்தவும். அது மென்மையாகவும் பஞ்சு போலவும் இருந்தால் அது உபயோகிக்க ஏற்றது. அது கடினமானதாகவோ அல்லது உலர்ந்ததாகவோ இருந்தால் அது பழைய மாவு எனக் கருதி அதை உபயோகிக்கக் கூடாது.

இதையும் படியுங்கள்:
மனைவியிடம் கட்டாயம் தவிர்க்க வேண்டிய 5 விஷயங்கள் எவை தெரியுமா?
இட்லி, தோசை மாவு

இட்லி, தோசை மாவை அதிக வெப்பம், வெளிச்சம் அல்லது ஈரப்பதம் ஆகிய இடங்களில் வைத்தால் விரைவில் கெட்டுவிடும். எனவே, அவற்றை அலமாரி அல்லது ரெஃப்ரிஜிரேட்டர் போன்ற குளிர்ந்த இடத்தில் வைத்து சேமிக்கவும். மாவை நேரடியாக சூரிய ஒளி படும்படி அருகில் வைத்தால் விரைவில் புளித்து உபயோகிக்க ஏற்றதாக இருக்காது.

சேமிக்கும் முறை: மாவை ஒரே பாத்திரத்தில் சேமித்து வைக்காமல்  இரண்டு மூன்று பாத்திரங்களில் தனித்தனியாக எடுத்து காற்று போகாமல் பிரிட்ஜில் வைக்கலாம். இது பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஓரளவு தடுக்கிறது. உபயோகப்படுத்தும் முன்பு அதை வெளியே எடுத்து அறை வெப்ப நிலைக்கு வந்ததும் பயன்படுத்திவிட்டு, மீண்டும் உடனே உள்ளே வைத்து விட வேண்டும்.

எனவே, இட்லி, தோசை மாவை மூன்று நாட்களுக்கு மேல் யாரும் பயன்படுத்தக் கூடாது. அது தேவையில்லாத உடல்நலப் பிரச்னைகளை ஏற்படுத்தும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அடிக்கடி மாவு அரைப்பது  சிரமமான விஷயம்தான். ஆனால், ஆரோக்கியத்தை கருத்தில் கொள்ளும்போது  புதியதாக அரைத்து பயன்படுத்துவதே நல்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com