பழுப்பு அரிசி என்பது தூய்மை செய்யப்படாத பளபளப்பற்ற ஒரு அரிசி வகையாகும். நெல்லின் மேல் தோலை மட்டும் நீக்குவது மூலமாக இது உருவாக்கப்படுகிறது. இதில் சத்துக்கள் நிறைந்த தவிடு மற்றும் உள் அடுக்கு அப்படியே இருக்கும். வெள்ளை அரிசியுடன் ஒப்பிடுகையில் இதில் அதிக சத்துக்கள் உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஆனால். பெரும்பாலானவர்கள் வெள்ளை அரிசியையே விரும்பி உண்கின்றனர். பழுப்பு அரிசியில் சத்துக்கள் நிறைந்திருந்தாலும் அதன் மாறுபட்ட நிறம் காரணமாக அதை உண்பதில்லை. வெள்ளை அரிசிக்கு பதிலாக ஒரு ஆரோக்கியமான மாற்றாக பழுப்பு அரிசியைக் கூறலாம். ஆனால், இந்த இரண்டு அரிசிக்கும் இடையேயான வேறுபாடு அதை தயாரிக்கும் முறையிலேயே உள்ளது.
வெள்ளை அரிசியைப் பற்றி சொல்லப்போனால், இதை மிகவும் பதப்படுத்துகிறார்கள். அரிசிக்கு வேண்டுமான வெள்ளை நிறத்தை வரவழைக்க இது பாலிஷ் செய்யப்படுகிறது. இந்த செயல்முறையில் அரிசியின் மேல் தோல் மற்றும் ஊட்டச்சத்துக்கள் முற்றிலுமாக நீக்கப்படுகிறது. ஏனென்றால், நெல்லின் தோலிலேயே அதிக சத்துக்கள் உள்ளன. பழுப்பு அரிசியில் தோல் அகற்றப்படாமல் இருப்பதால் அதன் முழு சத்துக்களும் அப்படியே இருக்கும்.
பழுப்பு அரிசியில் மாங்கனீஸ் சத்து ஏராளமாக உள்ளது. இது நம்முடைய எலும்பை வலுப்படுத்தவும், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டவும் உதவுகிறது. பழுப்பு அரிசியில் அதிக நார்ச்சத்து நிறைந்துள்ளதால் உடல் எடை குறைப்புக்கு இது பெரிதும் உதவுகிறது. நார்ச்சத்து நம் வயிற்றுக்கு உணவு நிரம்பிய உணர்வைக் கொடுக்கும். இதன் காரணமாக அதிக உணவை எடுத்துக் கொள்ளாமல் குறைவாகவே உணவை உண்பதால் உடல் எடை கட்டுக்குள் வரும்.
பழுப்பு அரிசியில் நார்ச்சத்துக்கள் மட்டுமின்றி, பல வகையான சத்துக்களும் நிறைந்துள்ளதால், இதயம் தொடர்பான பிரச்னைகள் ஏற்படாமல் காக்கிறது. இதில் உள்ள லிக்னின் கலவை நமது இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதில் வெள்ளை அரிசியை விட, பழுப்பு அரிசியின் பங்கு அதிகம். வெள்ளை அரிசி சாதத்தை அதிகம் உண்பதால், இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. ஆனால், பழுப்பு அரிசியில் உள்ள சத்துக்கள் காரணமாக இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க முடியும்.
இத்தனை மருத்துவ குணங்கள் நிறைந்த பழுப்பு அரிசியை வாரம் இருமுறையாவது உணவில் சேர்த்துக் கொள்வது நல்லதாகும்.