செவித்திறன் பாதிப்புகளும் நிவாரணமும்!

Deafness problem
Deafness problemhttps://dinasuvadu.com

னிதராகப் பிறந்த அனைவரும் ஐம்புலன்களில் சிறந்து விளங்க வேண்டும் என்று நினைப்பார்கள். பொதுவாக, கேட்கும் திறன் என்பது அனைவருக்கும் மிகவும் அவசியமான ஒன்று. ஆனால், சில காரணங்களால் ஏற்படும் உடல் நல பாதிப்புகளில் பொதுவான ஒன்றாக இருக்கிறது  செவித்திறன் பாதிப்பு  எனப்படும் காது கேளாமை பிரச்னை.

இந்த செவித்திறன் பாதிப்பு பிறந்த குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை வயது வித்தியாசம் இன்றி யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். செவித்திறன் இழப்பு ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. பெரியவர்களுக்கு வைரஸ் தொற்று, நோயெதிர்ப்பு சக்தி குறைபாடுகள், அளவுக்கு அதிகமான ஒலி, ஹெட்போன் பயன்பாடு போன்ற காரணங்களும் பிரசவ நேரத்தில் குழந்தையின் காதுக்கு இரத்த ஓட்டம் குறைதல், டௌன் சிண்ட்ரோம் எனப்படும் பிறவிக் குறைபாடுகள் ஆகியவையும் பெரும்பாலும் காரணங்களாகின்றன.

எதிர்பாராத விபத்துகளின் காரணமாக காதிலிருந்து மூளைக்கு செல்லக்கூடிய நரம்புகள் பாதிப்படைவது, காதில் இருக்கும் சிறிய எலும்புகள் நகர்தல், காது ஜவ்வு கிழிதல் போன்றவற்றாலும் செவித்திறன் பாதிக்கும் வாய்ப்புள்ளது என்கின்றனர் மருத்துவர்கள். மேலும், இயற்கை நிகழ்வான வயது முதிர்வு காரணமாகவும் நமக்கு கேட்கும் சக்தி குறையலாம்.

‘உங்களுக்குக் காது கேட்கவில்லை’ என்று பாதிக்கப்பட்டவரிடம் சொன்னால் நிச்சயம் அவர், ‘இல்லை எனக்குக் காதுகள் நன்றாகக் கேட்கிறது’ என்றுதான் பதில் சொல்வார். ஆனால், சில அறிகுறிகளை வைத்து அவருக்குக் காதுகளின் செவித்திறன் சரியாக உள்ளதா என்பதைக் கண்டறியலாம்.

எதிரில் பேசுபவரிடம் திரும்பத் திரும்ப ஒரே விஷயத்தை சொல்லச் சொல்வது, டிவி பார்க்கும்போது அதிக சத்தத்தில் வைத்துக் கேட்பது, அருகில் இருந்தால் கூட அதிக சத்தமாகப் பேசுவது, யாருடனும் பேசாமல் தனிமையில் ஒதுங்கி இருப்பது, காது கேட்காதபோது  ஒரு பக்கமாக தலையைத் திருப்பி கேட்பது போன்ற பல அறிகுறிகளால்  காது குறைபாடு உள்ளவர்களை கண்டறியலாம்.

இதையும் படியுங்கள்:
மரங்கள் சூழ வாழ்வதில் கிடைக்கும் நன்மைகளை அறிவோமா?
Deafness problem

இதுபோல் செவித்திறன் பிரச்னை இருந்தால் உடனடியாக தள்ளிப்போடாமல் மருத்துவரை அணுக வேண்டும். ஏனெனில், மருத்துவரை அணுகாமல் தாமதிக்கும் காலத்தில்  மேலும் கேட்கும் திறன் குறைந்து நிரந்தரமான செவித்திறன் இழப்பை கூட ஏற்படுத்திவிடும் வாய்ப்புகள் உண்டு என்கின்றனர் மருத்துவர்கள்.

குறிப்பாக, தற்போது இளைய வயதினர் ஹெட் போன் சாதனத்தை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் ஏற்படும் விளைவுகள் அதிகம். காது நரம்புகள் பாதிக்கப்பட்டு செவித்திறன் பாதிப்பு ஏற்படும். மேலும், நரம்புகள் சேதம் அடைந்து விட்டால் செவித்திறனை மீட்டெடுக்க முடியாது. இதை கவனத்தில் கொண்டு ஹெட்போன் பயன்பாட்டை இளைய தலைமுறைகள் குறைப்பது நல்லது என அறிவுறுத்துகின்றனர் காது நிபுணர்கள்.

செவித்திறன் பாதிப்பை சரிசெய்ய மருத்துவத்தில் பல வழிகள் உள்ளன. வயது முதிர்வினால் ஏற்படும் காது கேட்கும் பாதிப்புக்கு காது கேட்கும் கருவி பொருத்திக் கொள்ளலாம். பிறந்த குழந்தைகளுக்கு செவித்திறனில் பிரச்னை இருந்தால் காக்ளியர்  இம்பிளான்ட் அறுவை சிகிச்சை மூலம் பாதிப்பை சரிசெய்யலாம். இதுபோன்ற பல சிகிச்சை முறைகள் செவித்திறன் இழப்புக்கு உதவுகின்றன.

பிரச்னை உள்ளது எனத் தெரிந்தவுடன் தகுந்த மருத்துவர் மூலம் சிகிச்சை முறைகளை மேற்கொண்டு செவித்திறன் இழப்பிலிருந்து நாம் மீண்டு சந்தோஷமாக வாழலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com