செர்ரி மரங்கள் இமயமலையில் இருந்து தோன்றியதாகக் கூறப்படுகிறது. இன்று உலகமெங்கும் காணப்படும் செர்ரி மரங்களில் பெரும்பாலானவை ஜப்பானை பூர்வீகமாகக் கொண்டவை. ஒவ்வொரு ஆண்டும் வசந்த காலத்தில், ‘செர்ரி ப்ளோசம்’ எனப்படும் பூக்களால் மிக அழகாகத் தோற்றமளிக்கும்.
செர்ரி பழங்கள் இதய ஆரோக்கியம் பெற உண்ண வேண்டிய அற்புதமான பழமாகும். இவற்றில் விதை உண்டு. நீரிழிவு நோய் உட்பட பல வகையான நோய்களை கட்டுப்படுத்த வல்லவை. புளிப்பும் இனிப்பும் கலந்த சுவையில் பல வைட்டமின்கள் நிறைந்த பழம் இது. இரும்பு சத்து, கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் நிறைந்த இப்பழம் எலும்பு உறுதிக்கு மிகவும் உதவும். இளமையான தோற்றமும் சரும மினுமினுப்பும் அதிகரிக்க வேண்டுமானால் செர்ரி பழங்களை சாப்பிடலாம்.
இப்பழத்தில் உள்ள ஃபிளவனாய்டுகள் செரிமானத்தை தூண்டும். இதில் உள்ள வைட்டமின் பி3 என்ற நியாசின் சத்து சரும சம்பந்தப்பட்ட பிரச்னைகளை தீர்க்கும். வறண்ட சருமம், சரும சுருக்கம் போன்றவற்றிற்கு செர்ரி பழம் மிகவும் நல்லது. செர்ரி பழத்தில் நிறைந்திருக்கும் வைட்டமின் ஈ சத்தானது கண் பார்வைத் திறனை அதிகரிக்க உதவும். இது நரம்புகளில் உண்டான இறுக்கத்தை தளர்த்தி, ஆழ்ந்த தூக்கத்திற்கு வழிவகுக்கும். மன அழுத்தத்தையும் குறைக்க உதவும் பழம் இது. செர்ரி பழங்களில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் கீல்வாதத்திற்கு உதவும். இதனை உட்கொள்வதால் யூரிக் அமிலத்தின் மிதமான அளவை பராமரிக்க உதவும்.
செர்ரி பழங்களைப் போன்றே பெர்ரி பழங்களும் சத்தானவை. இவை சிறிய அளவில் வட்ட வடிவில் இருக்கும். பல வண்ணங்களில் காணப்படும் இதுவும் இனிப்பு, புளிப்பு சுவையுடையவை. தினம் சில பெர்ரி பழங்களை சாப்பிடுவது இதயத்திற்கு நல்லது. சதை பற்றுள்ள இந்தப் பழம் சிறியதாகவும் மென்மையானதாகவும் இருக்கும். ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி, ராஸ்பெர்ரி, பிளாக்பெர்ரி, கிரான்பெர்ரி, கோஜிபெர்ரி, அகாய்பெர்ரி என பல வகைகள் உள்ளன. ராஸ்பெர்ரி பழங்கள் நார்ச்சத்து மிக்கவை.ப்ளூபெர்ரி வைட்டமின் கே நிறைந்தவை. இந்த பெர்ரி பழங்கள் செர்ரியை போல விதை கொண்டவை அல்ல. சதைப்பற்றுள்ள பழமாகும்.
அகாய்பெர்ரி அதிக ஆக்சிஜனேற்றங்களைக் கொண்டுள்ளது. பழச்சாறுகள், சாஸ் மற்றும் பேக்கரி பொருட்களில் இதற்கு முதலிடம் உண்டு. இது சிறந்த ஆக்சிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளது. இரத்த குளுக்கோஸ் அளவை குறைக்கும் ஆற்றல் கொண்டது. இதயத்தை பாதுகாக்கும் சிறந்த பழம் இது. கிரான்பெர்ரிகள் இருதயத்திற்கு மிகவும் நல்லது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை கொண்டது. வைட்டமின் சி, நார்ச்சத்து மற்றும் மாங்கனீஸ் சத்து நிரம்பியது. சிறுநீர்ப்பாதை நோய் தொற்றுக்களின் அபாயத்தை குறைக்கும் தன்மை கொண்டது. இவை சாஸ், ஜாம்கள், ஜெல்லிகள் தயாரிக்கப் பயன்படுகிறது.
பெர்ரி பழங்களில் உள்ள ஃபிளாவனாய்டுகள் பார்கின்சன் நோயை தடுக்க உதவுகிறது. ஆன்ட்டி ஆக்ஸிடன்ட் நிறைந்த பெர்ரி இதய நோய்களை தடுக்க உதவுகிறது. இருதய உறுப்புகளில் ஏற்படும் வீக்கத்தையும் குறைக்கின்றது.