நீண்ட நேரம் நின்றாலோ, நடந்தாலோ அல்லது ஓடினாலோ குதிகாலில் ஏற்படும் வலி நம் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் ஒன்று. குதிகால் வலிக்கு பல காரணங்கள் இருக்கலாம். அதிக எடை, தவறான காலணி, திடீரென அதிக உடற்பயிற்சி செய்வது, பிளாட் ஃபுட் போன்றவை இதற்கு முக்கிய காரணங்கள். இந்த வலியை சரி செய்ய சில எளிய வழிகள் உள்ளன. இந்த பதிவில் அவை என்னென்ன என்பது பற்றி விரிவாகக் காண்போம்.
குதிகால் வலியின் அறிகுறிகள்:
நடக்கும்போது அல்லது ஓய்வெடுக்கும்போது கூட குதிகால் பகுதியில் அதிக வலி இருக்கும்.
காலையில் எழுந்தவுடன் நடந்தால் வலி உண்டாகும்.
நீண்ட நேரம் நின்றாலோ, நடந்தாலோ தாங்க முடியாத வலி ஏற்படும்.
குதிகால் பகுதியில் வீக்கம், கால் விரல்களை மேலே உயர்த்தும்போது வலி போன்றவை ஏற்படலாம்.
குதிகால் வலி நீங்க செய்ய வேண்டியவை:
குதிகால் வலி ஏற்பட்டவுடன் முதலில் நீங்கள் செய்ய வேண்டியது ஓய்வு எடுப்பதே. வலியுள்ள காலுக்கு போதிய அளவு ஓய்வு கொடுத்து அதிகமாக நடப்பதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக, கனமான பொருட்களை தூக்குவதைத் தவிர்க்கவும். ஓய்வு, காயமடைந்த திசுக்கள் குணமடைய உதவும்.
வீக்கத்தைக் குறைக்கவும், வலியை சரி செய்யவும் ஐஸ் பேக் பயன்படுத்துவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஒரு துணியில் ஐஸ் கட்டியை வைத்து வலியுள்ள இடத்தில் 20 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். இதை தினசரி செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.
குதிகால் தசைகளை ஆக்டிவேட் செய்யும் பயிற்சிகளை செய்ய வேண்டும். கால்களை சுவர் மீது ஊன்றி, கால் விரல்களை உங்களை நோக்கி இழுப்பது போன்ற பயிற்சிகளை செய்வது நிவாரணம் அளிக்கும். இதுபோன்ற பயிற்சிகளை ஒரு பிசியோதெரபிஸ்ட் ஆலோசனையின் பேரில் செய்வது நல்லது.
குதிகால் வலிக்கு முக்கிய காரணம் தவறான காலணிகள் அணிவதுதான். எனவே, குதிகால் வலியைத் தவிர்க்க மென்மையான காலணிகளை பயன்படுத்துங்கள். உயரமான காலணிகள் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
உடல் எடை அதிகமாக இருப்பவர்களுக்கு குதிகால் வலி ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். எனவே, ஆரோக்கியமான உணவு மற்றும் உடற்பயிற்சியின் மூலம் உடல் எடையைக் குறையுங்கள். இதனால் குதிகால் வலி குறையும் வாய்ப்புள்ளது.
இந்த எளிய வழிமுறைகளை பின்பற்றி குதிகால் வலியிலிருந்து நீங்கள் விரைவில் விடுபடலாம். இருப்பினும், வலி அதிகமாக நீடித்தால், மருத்துவரை அணுகி அதற்கான முறையான சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள்.