நம் உடல் நல பாதிப்புகளுக்குக் காரணமாக சாதாரண காய்ச்சலிலிருந்து கேன்சர் வரை எண்ணற்ற நோய்கள் இருந்தாலும் சில பாதிப்புகள் குறித்து நம்மிடையே இன்னும் விழிப்புணர்வு தேவை எனும் நிலையே உள்ளது. அந்த வகையில்,
சமீப காலமாக மிக நெருங்கிய ரத்த உறவுகளிடையே நடக்கும் திருமணங்களால் பிறக்கும் குழந்தைகள் ‘ஹீமோபீலியா’ எனும் நோய் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். தற்போது சேலம் அரசு மருத்துவமனையின் குழந்தைகள் மருத்துவத் துறையில் ஹீமோபிலியா நோய் தடுப்பு சிகிச்சை முறை துவங்கியுள்ளது. இந்த நோய் பாதிப்புகள் குறித்து அரசு மருத்துவர் ரவீந்திரனிடம் கேட்டபோது...
ஹீமோபீலியா பாதிப்பு என்றால் என்ன?
ஹீமோபீலியா என்பது ஒரு ரத்தப்போக்கு நோய். ரத்தம் உறையாது வெளியேறிக் கொண்டிருக்கும் நிலை. பெண்களைக் காட்டிலும் ஆண்களை அதிகமாக் தாக்கும் நோய். ஒரு சாதாரண மனிதருக்கு அடிபட்டாலோ, காயம் பட்டாலோ ரத்தம் வெளிவந்ததுமே உறைந்து, ரத்தம் வெளிவரும் துளைகள் மூடும். ஆனால், ஹீமோபீலியாவினால் பாதிக்கப்பட்டவருக்கு ரத்தம் உறையும் தன்மை சிறிதும் இருக்காது. காயப்பட்டால் ரத்தம் நிற்காமல் வந்துகொண்டே இருக்கும். சிகிச்சை எடுத்தால் மட்டுமே சரியாகும். மேலும், மூட்டு பாதிப்புகளை உண்டாக்கி விடுகிறது. சில நேரங்களில் மூளையில் ரத்தக் கசிவும் ஏற்பட்டு உயிருக்கே அபாயம் தரும் பாதிப்புகளை கூட ஏற்படுத்தும்... ஆகவேதான் இதைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தி வருகிறோம் .
ஹீமோபீலியாவின் அறிகுறிகள் என்ன?
பல் தேய்க்கும்போது ரத்தம் வருதல், சில குழந்தைகளுக்கு ஊசி போடுவதால் வீங்குதல், தூங்கும்போது புரண்டு படுப்பதால் வீக்கம் ஏற்படுவது போன்றவை பொதுவான பாதிப்புகளாகக் காணப்படும். சிறு கீறலோ, காயமோ ஏற்பட்டால்கூட ரத்தம் மிக அதிகமாக வெளியேறும். அப்படி வரக்கூடிய ரத்தம் உறையவும் செய்யாது. குழந்தைகளுக்கு சிறு வயதில் ஏதேனும் அடிபட்டு ரத்தம் நிற்காமல் இருந்தால் அவர்களை உடனே பரிசோதனைகளுக்கு உட்படுத்துகிறோம். மேலும், அந்தப் பரிசோதனைகள் மூலம் அவர்களுக்கு என்ன மாதிரியான பாதிப்புகள் உள்ளன என்பதை கண்டறிந்து அதற்கு ஏற்றவாறு சிகிச்சை அளிக்கும் வகையில் இன்று பல்வேறு நவீன வசதிகள் வந்துள்ளன.
இந்தப் பாதிப்புகள் ஏற்பட அடிப்படை காரணம் என்ன?
ஜீன்கள் எனப்படும் மரபணுக்களே பெரும்பாலும் முக்கிய காரணமாகிறது. நெருங்கிய உறவுகளில் திருமணம் செய்வதை நிச்சயம் தவிர்க்க வேண்டும். மனைவி அல்லது கணவருக்கு இந்த பாதிப்பு இருந்தால் நிச்சயம் அவர்களின் குழந்தையையும் பாதிக்க அதிக வாய்ப்புண்டு. நான்கில் மூன்று பேருக்கு மரபணு ரீதியாக மட்டுமே இந்தப் பாதிப்பு ஏற்படுகிறது என்பதால்தான் உறவுகளுக்குள் செய்யும் திருமணத்தை தவிர்க்க சொல்கிறோம்.
இதற்கான சிகிச்சை முறைகள் என்ன?
2008ம் ஆண்டுக்கு முன் வரை சேலத்தில் இவர்களுக்கு முழுமையான புது ரத்தம் செலுத்துதல் மட்டுமே சிகிச்சையாக இருந்து வந்தது. ரத்தத்தை பொதுவாக 35 நாட்கள் வரை சேமித்து உபயோகிக்கலாம். ஆனால், இவர்களைப் பொறுத்தவரை சேமித்த ரத்தம் உதவாது. சிலருக்கு ரத்தத்திலிருந்து பிரித்து எடுக்கப்படும் பிளாஸ்மா செலுத்த வேண்டியிருக்கும். 2013லிருந்துதான் சேலத்தில் இந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது.
எய்ட்ஸ் போன்ற நோய்கள் கண்டறியப்பட்ட பிறகு செலுத்தும் ரத்தத்தில் வேறு விளைவுகள் வரும் வாய்ப்பிருக்கும் என்பதால் மருந்து மாத்திரைகள் மற்றும் ஊசிகள் கொண்டு தற்போது சிகிச்சை அளிக்கப்படுகிறது. ரத்தம் வந்தபின் அதை நிறுத்த உதவும் ஆன் டிமாண்ட் (on demand) என்று சொல்லும் சிகிச்சை தரப்படுகிறது. தற்போது இன்னும் முன்னெச்சரிக்கையாக, ரத்தம் வராமல் தடுக்கும் வகையில் வாரம் இருமுறை ப்ரோபைல் ஆக்சிஸ் (prophylaxis) ஊசி போடும் சிகிச்சையைத் தற்போது சேலம் அரசு மருத்துவமனையில் துவங்கியுள்ளோம். இதற்காக தமிழ்நாடு முழுவதும் 150 இளம் வயதினரைத் தேர்ந்தெடுத்து இங்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சேலத்தில் 29 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இது விலை உயர்ந்த சிகிச்சை என்றாலும் இதனால் மூட்டு பாதிப்புகள் இன்றி அவர்களும் மற்றவர்களைப்போல் நீண்ட காலம் வாழ முடியும்.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளிநாடுகளில் மட்டுமே இதன் பாதிப்பு அதிகம் இருந்தது. ஆனால், சமீபமாக இந்தியாவிலும் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு இந்த பாதிப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது. பெரும்பாலான மக்கள் இப்படியான பாதிப்பு உள்ளதை தெரியாமலும் போதுமான விழிப்புணர்வு இல்லாமலும் உள்ளனர். தமிழ்நாட்டில் மட்டும் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 3000 பேர் உள்ளனர். சொந்தம் விட்டுப்போகக் கூடாது என்று நினைப்பவர்கள் இனியாவது சிந்திக்க வேண்டும்.