கோடைக்காலத்தில் வெளிப்புறத்தில் உயரும் வெப்பநிலையில் நமது உடலில் நீரிழப்பு இல்லாமல் நீரோற்றமாக வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். உடல் சூட்டை சமநிலையில் வைத்திருக்க, தினசரி 3 லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். வெளிப்புறமாக இருந்து மட்டுமல்லாமல், உள்ளே இருந்தும், உடல் சூட்டை தணிக்க தண்ணீர் குடிப்பது உதவுகிறது. எந்த வகையான காலநிலையாக இருந்தாலும் குறிப்பாக, வெயில் காலங்களில் அதிகம் தண்ணீர் குடிப்பதால் உடலில் நீர்ச்சத்தினை தக்க வைத்துக்கொள்ளலாம்.
தினசரி 3 லிட்டர் தண்ணீர் குடிப்பதால் உடலில் நீரிழப்பு ஏற்படாமல் தவிர்ப்பதுடன், இரத்த அழுத்தத்தை சமநிலையில் வைத்திருக்கவும் உதவும். இது மயக்கம் வருதல், தலை சுற்றுதல் ஆகியவற்றையும் தடுக்கும். குடல் இயக்கத்திற்கு நன்றாக உதவும் செயல்பாடுகளுள் ஒன்று, அதிகம் தண்ணீர் குடிப்பது. உடலில் உள்ள டாக்ஸின் கழிவுகளை வியர்வை மற்றும் சிறுநீர் மூலம் வெளியேற்றுவதற்கு தண்ணீர் மிகவும் அவசியம். போதுமான தண்ணீரை குடிப்பது, சிறுநீரகங்கள் சிறப்பாக செயல்பட உதவுகிறது. உடல் சூடு அடைவதற்கு முக்கிய காரணமாக இருப்பது உடல் கழிவுகள் சரிவர வெளியேறாமல் இருப்பதுதான்.
உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் போதுமான தூக்கத்தில் இருக்கிறது. அது உடலின் நீரோற்றத்தை பாதுகாப்பதிலும் முக்கியமான பங்காற்றுகிறது. உங்கள் உணவின் முடிவில் அவசியம் தயிர் அல்லது மோர் இருக்க வேண்டும். இது நீரிழப்பு ஏற்படுவதை தடுப்பதுடன், உங்கள் வயிற்றில் இதமான சூழலை நிலவச்செய்து அதில் அமிலத்தன்மை சேர்வதையும் தடுக்க உதவுகிறது.
நீரிழப்பு ஏற்படுவதை தவிர்க்க பழங்களை எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள், வாழைப்பழம் சாப்பிடுவது நல்லது. குறிப்பாக, நீர் நிறைந்த பழங்களை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். தர்பூசணி, ஆரஞ்சு, தக்காளி சாலட் போன்றவை உடலில் நீரிழப்பு ஏற்படுவதை தடுப்பதுடன் நோய் தொற்றுகளிலிருந்து உங்களை பாதுகாக்கும். உங்களுக்கு உடல் வலிமையையும், ஊக்கத்தையும் வழங்கும்.
உடலை நீரோற்றமாக வைத்திருக்க அவ்வப்போது இளநீர், மோரில் உப்பு கலந்து சாப்பிட்டு வரலாம். எலுமிச்சை சாறு உப்பு சேர்த்து புதினா கலந்து சாப்பிடலாம். ஒரு கப் வெள்ளரிக்காய் துண்டுகளாக சாப்பிடலாம். சுரைக்காயை தயிரில் போட்டு சாப்பிடலாம். காலையில் நீராகாரம் அல்லது கஞ்சி, பழைய சோறு சாப்பிடலாம்.
நீங்கள் ஏசி அறையில் இருந்து வெளியே கிளம்புவதாக இருந்தால் உடனே வெளியேறி விடாதீர்கள். வெப்ப நிலையில் சட்டென்று மாறும் நிலையால் உடலில் நீரேற்றம் குறைந்து சோர்வு அதிகரிக்கும். இதனை தவிர்க்க ஏசி அறையிலிருந்து கிளம்பும் முன் 10 நிமிடங்கள் ஏசி யை ‘ஆப்’ செய்து விட்டு அந்த டெம்பரேச்சரில் இருந்து விட்டு பின்னர் வெளியே வாருங்கள்! மது பானங்கள், காபின் நிறைந்த காபி போன்ற பானங்கள் உடலுக்கு நீரோற்றத்தை சட்டென்று குறைக்கும் தன்மை உடையது. கோடை காலத்தில் இவற்றை அளவாக பயன்படுத்த வேண்டும். முடிந்தால் தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக கிரீன் டீ, லெமன் டீ குடிக்கலாம்.
உங்கள் உடலின் நீர்ச்சத்து சரியான அளவில் உள்ளதா? என்பதை உங்களின் சிறுநீரின் நிறத்தை வைத்தே தெரிந்து கொள்ளலாம். உங்கள் உடல் நீரேற்றமாக இருந்தால் உங்கள் சிறுநீர் தெளிவாக இருக்கும். மஞ்சள் கலந்து இருந்தால் அதற்கேற்ப அதிகம் தண்ணீர் குடியுங்கள். கோடை காலத்தில் வெறும் தண்ணீரை பருக சிலருக்கு போர் அடிக்கும். அந்த நேரத்தில் அதை ஆரோக்கியமான பானமாக மாற்றி எலுமிச்சை, கொத்தமல்லி, இஞ்சி கலந்து சாப்பிடலாம்.
காலையில் அல்லது மாலையில் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது கோடை காலத்தில் உங்களை சுறுசுறுப்பாக இருக்க உதவும். கோடை காலத்தில் சர்க்கரை, உப்பு, காரம் போன்றவற்றை சமையலில் அளவாகப் பயன்படுத்த வேண்டும். ஸ்நாக்ஸ் கொறிக்க சிப்ஸ்களுக்கு பதில் கொட்டை, பருப்பை சாப்பிட வேண்டும். சோடியம் கலந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது. அது உடலில் உள்ள நீர்ச்சத்தை வற்றச் செய்யும்.