வண்ணங்களின் திருவிழாவான ஹோலி பண்டிகையில் மக்கள் ஒருவருக்கொருவர் விதவிதமான வண்ணங்களைப் பூசிக்கொண்டும் இனிப்புகளை வழங்கிக் கொண்டும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர். ஹோலி பண்டிகையின்போது பயன்படுத்தப்படும் பல வண்ணப் பொடிகள் சிலருக்கு சருமத்தில் அலர்ஜியை ஏற்படுத்துவதுண்டு. அலர்ஜி பிரச்னை உள்ளவர்கள் ரசாயனம் கலந்த செயற்கை வண்ணப் பொடிகளைப் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.
ஹோலி என்பது வண்ணங்களின் திருவிழா. ஹோலி பண்டிகை அன்று வண்ணப் பொடிகளை ஒருவர் மீது ஒருவர் தூவியும், கலர் தண்ணீரை ஒருவர் மீது ஒருவர் பீய்ச்சியடித்தும் தங்களது அன்பினை பரிமாறிக் கொள்வது வழக்கம். இது அன்பின் அடையாளமாகவும் சந்தோஷ மிகுதியாலும் செய்யப்படுவதாகும்.
முந்தைய காலங்களில் ரசாயன நிறங்கள் அல்லாமல் ஆர்கானிக் நிறம் கொண்டு தயாரிக்கப்பட்ட வண்ணப் பொடிகளை பயன்படுத்தியதால் தீங்கு எதுவும் நேராமல் இருந்தது. ஆனால், இப்போதோ ரசாயன நிறங்கள் பயன்படுத்துவதால் அவை கண்கள், சருமம், சுவாசக் குழாய்களை வெகுவாக பாதிக்கிறது.
இந்த வண்ணப் பொடிகள் கண்களில் படும்போது கண்களில் எரிச்சல் மிகுதியாகி கண்கள் இருந்து நீர் வடியத் தொடங்குகிறது. மேலும், அலர்ஜி பிரச்னை இருப்பவர்களுக்கு இந்த ரசாயன வண்ணப் பொடிகள் உடலில் படும்போது சருமத்தில் அரிப்பு, சருமம் தடித்து சிவந்து போதல் போன்ற பிரச்னைகளை எதிர்கொள்கிறார்கள்.
அது மட்டுமின்றி, ஆஸ்துமா, மூச்சுக் குழாய் அழற்சி போன்ற சுவாசக் கோளாறு உள்ளவர்கள் கடுமையான மூச்சுத் திணறல், இருமல் போன்ற பிரச்னைகளை எதிர்கொள்கிறார்கள். இவற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்வது நல்லது.
கண்களுக்கு கண்ணாடிகள் அல்லது சன் கிளாஸ்களை பயன்படுத்துவது நல்லது. அத்துடன் அந்த நேரங்களில் கண்களை தொடுவதையோ, கசக்குதையோ தவிர்த்தல் அவசியம்.
ஹோலி பண்டிகை கொண்டாடுவதற்கு முன்பு ஈரப்பதமூட்டும் கிரீம்களை பயன்படுத்துங்கள். ஆஸ்துமா, சுவாசப் பிரச்னை உள்ளவர்கள் ரசாயன வண்ணங்களான செயற்கை வண்ணங்களை பயன்படுத்துவதை முழுவதுமாக தவிர்த்து விடுதல் நல்லது. சிறு குழந்தைகளின் மீது இந்த ரசாயனக் கலவைகள் படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
சிலர் ரசாயன வண்ணங்களைக் கழுவ நெயில் பாலிஷ் ரிமூவரை பயன்படுத்துகிறார்கள். இது மிகவும் தவறான ஒன்று. இவை கடுமையான சரும எரிச்சலை ஏற்படுத்தும். அதேபோல், ஹோலி கொண்டாடி முடித்ததும் செயற்கை வண்ணங்களை போக்க ஃபேஸ் வாஷ் அல்லது சாதாரண சோப்பையே பயன்படுத்தலாம்.
சருமம் அல்லது முகத்தில், குறிப்பாக கண்களில் எரிச்சலோ, காயமோ ஏற்பட்டால் உடனடியாக நல்ல நீரில் பலமுறை கழுவி விடவும். சுய மருத்துவம் செய்து கொள்ளாமல் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.