சொரியாசிஸ் எனும் சரும நோயை கையாளுவது எப்படி?

உலக சொரியாசிஸ் தினம் அக்டோபர், 29
சொரியாசிஸ் எனும் சரும நோயை கையாளுவது எப்படி?

சொரியாசிஸ் (Psoriasis) என்பது, ‘சரும தடிப்பு நோய்’ என அறியப்படுகிறது. இந்த நோயைப் பற்றியும் அதன் சிகிச்சை தொடர்பான முக்கிய உண்மைகளை பொது மக்கள் அறிந்து கொள்ளவும், ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 29ம் தேதி, ‘உலக சொரியாசிஸ் தினம்’ அனுசரிக்கப்படுகிறது.

சொரியாசிஸ் என்பது ஒரு நாள்பட்ட, தீவிரமான அசாதாரண சரும நிலையாகும். இதில் நோயாளியின் சருமத்தில் சிவப்பு மற்றும் வெள்ளை செதில் திட்டுகள் உருவாகத் தொடங்குகின்றன. இந்தப் புள்ளிகள் பொதுவாக முழங்கைகள், முழங்கால்கள், உச்சந்தலையில் அல்லது கீழ் முதுகில் தோன்றும்.

சொரியாசிஸ் அறிகுறிகள்: சருமத்தில் சிவப்பு திட்டுகள் தோன்றுதல், வறண்ட, விரிசலான சருமம், சருமத்தில் கடுமையான அரிப்பு மற்றும் எரிச்சல், புண், காயங்கள், சீழ் நிறைந்த கொப்புளங்கள், துளையிடப்பட்ட, தடிமனான நகங்கள், அசாதாரண நக வளர்ச்சி, வீங்கிய, கடினமான மூட்டுகள், சருமத்தில் பொடுகு போன்ற வெடிப்புகள், காய்ச்சல், சளி போன்ற அறிகுறிகள் தென்படும்.

சொரியாசிஸ் பரவாமல் இருக்க சில யோசனைகள்: ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவக்கூடிய நோய் இல்லை இது. ஆனால், சொரியாசிஸ் வந்த ஒருவருக்கு தனது உடலில் மேலும் பல இடங்களில் பரவும்.

1. நல்ல ஆரோக்கியமான உணவை உண்ண வேண்டும். இதனால் உடலில் மேலும் பரவாமல் தடுக்கும். குளூட்டன் உள்ள உணவை குறைத்துக்கொள்ள வேண்டும். சேனைக்கிழங்கு, தக்காளி, உருளைக்கிழங்கு போன்றவற்றை குறைந்த அளவே எடுத்துக்கொள்ள வேண்டும். ஒமேகா3 உள்ள மீன் வகைகள், காய்கறிளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

2. நேரடியான சூரிய வெளிச்சத்தில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். வெளியில் செல்லும்போது சன் ஸ்கிரீன் போட்டுக் கொள்ளலாம்.

3. உடலில் இன்ஃபெக்ஷன், வெட்டுக்காயம் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அப்படி இருந்தால் அவற்றை உடனடியாக களிம்பு போட்டு சரி செய்துகொள்ள வேண்டும்.

4. ஒவ்வொரு நாளும் குளிப்பது, வீக்கமடைந்த சருமம் மற்றும் செதில்களை அகற்ற உதவுகிறது. குளியலில் எண்ணெய் மற்றும் உப்புகளைச் சேர்ப்பது அதிக நன்மை பயக்கும். சூடான நீர், கடினமான சோப்புகளின் பயன்பாடு கூடாது.

5. ஒவ்வொரு குளியலுக்குப் பிறகும் சருமத்தை ஈரப்பதமாக்குவது அவசியம். மாய்ஸரைஸ் கிரீம்களைப் பயன்படுத்துவது சருமத்தை ஈரப்பதமாகவும் மென்மையாகவும் வைத்திருக்க உதவும். சருமம் வறண்டு போகாமல் தடுப்பது செதில்கள் உருவாகாமல் தடுக்கும்.

6. புகை பிடித்தலையும் மது பழக்கத்தையும் அறவே கைவிட வேண்டும். மது அருந்துவது சொரியாசிஸ் அழற்சியின் சிகிச்சையில் பாதிப்பை உண்டாக்கும்.

7. மன அழுத்தம் இன்றி வாழ வேண்டும். திட்டமிட்டு செயல்களைச் செய்ய வேண்டும். பொழுதுபோக்கிற்கும், மனதை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளவும் நேரம் ஒதுக்க வேண்டும்.

8. ஏழு மணி நேர தூக்கம் அவசியம். உடல் எடை சரியாக இருக்க வேண்டும்.

9. மிகப் பிடித்தமான நபர்களுடன் நேரத்தை செலவழிக்கலாம். உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். யோகா, மெடிடேஷன், மூச்சுப் பயிற்சியும் செய்யலாம்.

10. பாதித்த பகுதிகளை போர்வையால் மூடிக்கொண்டு தூங்க வேண்டும். சருமத்தை சொரியக் கூடாது.

11. அதிக வெப்பமான அறையில் இருத்தல், அதிக  வெப்பமான வானிலை, ஈரப்பதம் குறைந்த காற்று, இந்த நோயை மேலும் மோசமாக்கும். இவற்றைத் தவிர்க்கவும்.

12. லித்தியம், உயர் இரத்த அழுத்த மருந்துகள், ஆண்டி மலேரியா மருந்துகள், அல்லது சில வாய்வழி அல்லது உட்செலுத்தப்பட்ட மருந்துகள் தடிப்பு சரும அழற்சிக்கு வழிவகுக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com