நம்ம ஊரு எந்த கிளைமேட்டில் இருக்கு? அப்படின்னு நம்மளாலயே கணிக்க முடியவில்லை, காலையில் வெயில் சுரீர்ன்னு அடிக்குது, திடீர்னு மதியத்துக்கு மேல மேகமூட்டமாக வந்துடுது. மாலை ஆயிட்டுனா மழை கொட்டோ கொட்டுன்னு கொட்டுது. ரெண்டு நாள் மழை பெய்யுது, இரண்டு நாள் கடும் வெயில் அடிக்குது, இதனால் நமது உடல் வெப்பநிலை பற்றி நாம் கவனம் கொள்வது இல்லை. மழைக்குப் பின்னர் வரும் கடும் வெயில், உடல் சூட்டை வேகமாக அதிகரிக்க வைக்கிறது. இதனால் உடலில் கொப்பளங்களும் சூட்டுக் கட்டிகளும் வருகின்றன வெயில் சார்ந்த பல நோய்கள் உடலுக்குள் வந்து சேர்கின்றன.
உடல் சூட்டின் தீமைகள்:
உடலின் வெப்பநிலையை எப்போதும் மிதமாக வைத்திருப்பது தான் உடலின் உறுப்புகளுக்கு நன்மை தரும். அதிக வெப்பம் உடலின் பல்வேறு உறுப்புகளை பாதிக்க கூடியது. வெப்பத்தினால் வாயினுள் கொப்பளங்கள் ஏற்படும் , கண் எரிச்சல் , கண் இமைகளில் கட்டி ஏற்படுதல் , கண் வலி, தலை வலி, உடல் வலி , சோர்வு , நீரிழப்பு , மூலம் போன்றவை ஏற்படும். இரவில் தூக்கமின்மை ஏற்படவும் கூடும் , இதனால் பகலில் எரிச்சல் உணர்வு ஏற்படும். உடல் சூட்டினை கவனிக்காமல் விட்டால் உள்ளுறுப்புகளை பாதிக்க தொடங்கும்.
முதல் தீர்வு தண்ணீர் :
உடல் சூட்டைக் குறைக்க பலரும் கோழிக் கறி சாப்பிடுவதை விடச் சொல்வார்கள். ஐயா , இது புரட்டாசி மாதம்யா , சிக்கன் சாப்பிடாமலே இந்த சூடு , சாப்பிட்டா எந்தளவுக்கோ. உண்மையில் சிக்கன் உடல் சூட்டை அதிகரிக்கும் என்பதில் ஐயம் வேண்டாம். உடல் சூட்டை தணிக்க முதல் ஆயுதமே தண்ணீர் தான். உடலுக்குள் தண்ணீர் தேவை எப்போதும் இருக்கும் , உடல் வெப்பத்தினால் அவை குறைந்து விடக் கூடும்.அதனால் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை தண்ணீர் குடியுங்கள் , அது போல சிறுநீரும் மணிக்கு ஒரு முறை வெளியேற்றி விடுங்கள். நீண்ட நேரம் தேக்கி வைக்கும் போது தான் மஞ்சள் நிறத்தில் மாறுகிறது , சில நேரம் சிறுநீர் பாதையில் எரிச்சலும் ஏற்படுகிறது.
தண்ணீரின் பயன்கள்:
அதிகமாக தண்ணீர் குடிப்பதால் உடல் வறண்டு விடாமல் இருக்கும். வெயில் காலத்தில் வியர்வை அதிகமாக வெளியேறுவதால் உடலில் உள்ள நீர் வியர்வையில் வெளியேறி விடும். உடலில் நீர் குறைந்தால் தலை வலி, தலை சுற்றல் ,மயக்கம் உள்ளிட்டவை ஏற்படும். சில சமயம் கோமா அல்லது ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட்டு உயிரிழப்பு கூட நேரக் கூடும். அதனால் எப்போதும் கவனமாக இருங்கள் , தண்ணீரின் அருமையை உணர்ந்து எப்போதும் கைவசம் தண்ணீர் பாட்டிலை வைத்திருங்கள்.
இரவில் ஒரு ஸ்பூன் வெந்தயத்தை தண்ணீரில் கலந்து வைத்து காலையில் பருகினால் சூட்டைக் குறைக்கும். சப்ஜா விதையை கூட இதே பாணியில் ஊற வைத்து குடித்தாலும் உடல் சூடு குறையும். அது போல வெட்டி வேர் அல்லது நன்னாரி வேரினை தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைத்து குடிக்கலாம். சில நேரம் சுவைக்காக விரும்பினால் சர்பத் போட்டுக் கூட குடிக்கலாம். நன்னாரி சர்பத் , இளநீர் சர்பத் , நுங்கு சர்பத் , பானகம் போன்றவை உடல் வெப்பம் தணிக்கும் அரு மருந்துகள். ஆனால் , அவற்றில் ஐஸ் கட்டிகளை போட்டு குடிக்க வேண்டாம்.
சூட்டினை குறைக்கும் உணவுகள்:
முதலில் சூட்டினை குறைப்பதில் தயிர் சாதம் முக்கிய பங்கு வகிக்கிறது. பழைய சாதமும் உடலினை குளுமைப் படுத்தும் . காரமில்லாத குழம்பு வகைகள் , பாரம்பரியமிக்க பூசணி , சுரைக்காய் , கீரை போன்றவையை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். தர்பூசணி பழம் , வெள்ளரிக்காய் , முலாம் பழம் , சாத்துக்குடி , ஆரஞ்சு , மாதுளை போன்ற நீர் சத்து மிகுந்த பழங்களை உட் கொள்ளுங்கள். சர்க்கரை சேர்க்காத தர்பூசணி ஜூஸை அடிக்கடி குடிக்கலாம்.இதில் கலோரிகளும் குறைவு தான்.
குளிர்விக்கும் உடைகள்:
எப்போதும் பருத்தி அல்லது மெலிதான லினன் ஆடைகளை அணியுங்கள்.ஜீன்ஸ் , டெனிம் , பாலியேஸ்டர் ஆடைகளை தவிர்த்து விடுங்கள். காட்டன் பேண்ட் மற்றும் காற்றோட்டம் உள்ள செருப்புகளை அணிந்து கொள்ளுங்கள். சுய தொழில் செய்பவராக இருந்தால் நமது பாரம்பரிய உடையான வேட்டி கட்டிக் கொள்ளலாம். மேற்கூறிய அனைத்தையும் கடைப் பிடித்தால் வெயில் காலத்தில் கூட குளுமையாக இருக்கலாம்.