கோடைக்காலங்களில் நாம் அதிகம் சாப்பிடும் ஒரு பழம் தர்பூசணி. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் இந்த தர்பூசணி, கோடைக்காலத்தில் கடைகளில் மலிவாகக் கிடைக்கும். அதேபோல், தர்பூசணிகளில் ஊசி மூலம் ரசாயனம் கலந்து விற்கப்படுபவையும் அதிகம்.
ரசாயனம் கலந்த தர்பூசணியால் ஏற்படும் பாதிப்புகள்:
ரசாயனம் கலந்து அடர்ந்த சிவப்பு நிறத்தில் விற்கப்படும் இந்த தர்பூசணிகளால் குழந்தைப் பருவ பிரச்சனைகள், தைராய்டு போன்ற பிரச்சனைகள் ஏற்படும். குறிப்பாக பாலூட்டிகளுக்கும் பெரிய பாதகமான விளைவுகளை தரும்.
அதேபோல், விரைவில் பழுக்க வைப்பதற்காக அந்தப் பழங்களில் சேர்க்கப்படும் கார்பைடும் அதிக பாதிப்புகளை தருகின்றன. அதாவது, தலைவலி, தோல் வெடிப்பு மற்றும் நுரையீரல் பாதிப்புகளையும் ஏற்படுத்துகின்றன. இது உடலின் நரம்பு மண்டலத்தை பாதிப்பதோடு மயக்கம், வலிப்பு மற்றும் கோமாவை தூண்டக் கூடியது.
இத்தகைய ரசாயனங்கள் கலக்கப்பட்ட பொருட்களை சாப்பிடுவது பெரும்பாலும் சிக்கல்களை ஏற்படுத்தும். ஆகையால், ரசாயனம் கலந்த தர்பூசணிகளை எப்படி கண்டுபிடிப்பது என்பதைப் பற்றி பார்ப்போம்.
1. தர்பூசணியின் மேற்பரப்பில் வெள்ளை அல்லது பழுப்பு நீரோ அல்லது நுரை போன்றோ வெளியேறினால் அதை வாங்கவே வேண்டாம். பார்ப்பதற்கு ஃப்ரெஷான பழமாக இருந்தால், ஒரு நாலைந்து நாட்களுக்கு அப்படியே வைத்துக்கொள்ளுங்கள். அது கெட்டுப்போகாமல், நுரை வெளியே வராமல் இருந்தால் அது ரசாயனம் பயன்படுத்தாத பழம் என்பதை உறுதி செய்துக்கொள்ளலாம்.
2. தர்பூசணியை இரண்டாக வெட்டி, அதன்மேல் டிஷ்யூ பேப்பரை சிறிது நேரம் வைக்கவும். அதில் சிவப்பு நிறம் படரவில்லை என்றால், அது நல்ல இயற்கையான பழம் என்பதை தெரிந்துக்கொள்ளலாம்.
3. அதேபோல், வெட்டிய தர்பூசணி பழங்களின் நடுவில் விரிசல், ஓட்டைகள் என ஏதாவது இருக்கிறதா என்பதைப் பாருங்கள். ஏனெனில், விரிசல்கள் இருந்தால், அது ரசாயனங்கள் கொண்டு பழுக்க வைக்கப்பட்ட தர்பூசணி என்பதை அறிந்துக்கொள்ளுங்கள். இயற்கையான தர்பூசணியில் விரிசல்கள், ஓட்டைகள் என எதுவும் இருக்காது.
4. தர்பூசணி அடர் பச்சையாக இருந்து, பழத்தின் உள் பகுதி வெள்ளையாக இருந்து, சுவை இனிப்பாக இருந்தால் அது சுவையூட்டி செலுத்தப்பட்ட பழம்.
5. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி தர்பூசணி பழத்தின் துண்டை வெட்டி அதில் போட்டு வையுங்கள். சிறிது நேரம் அப்படியே விட்டு விட்டு, அந்தத் தண்ணீரைப் பாருங்கள். அதில் சுவையூட்டி ஊசி செலுத்தப்பட்டிருந்தால், அந்தத் தண்ணீரின் நிறம் சிவப்பாக மாறி இருக்கும். இல்லை என்றால் அது நல்ல இயற்கையான பழம் என்பதை தெரிந்துகொள்ளலாம்.
இந்த ஐந்து வழிகளைப் பின்பற்றி இயற்கையான தர்பூசணிகளை வாங்கி ஆரோக்கியமாக இருங்கள்.