இன்றைய உலகம் அவசர அவசரமாக இயங்கிக்கொண்டு இருக்கிறது என்று நாமே ஒரு முடிவெடுத்து அதன்படி செயல்பட்டுக் கொண்டு இருக்கிறோம். எப்போதாவது நடக்கும் ஒருசில நிகழ்வுகளைத் தவிர. உலகம் வழக்கம் போலத்தான் இயங்கிக்கொண்டு இருக்கிறது. உலகில் வாழும் அனைத்து ஜீவராசிகளும் தங்கள் கடமைகளை மறக்காமல். மாற்றாமல் செய்துகொண்டு இருக்கின்றன. மனிதன் மட்டுமே, ‘அவசர அவசரமாக’ மாறி விட்டான் இயல்பிலிருந்து பரபரப்பாக.
அதற்கேற்றாற்போல, பயணிகள் ரயில்கள் தற்போது முன்பதிவில்லா விரைவு ரயில்களாக மாற்றப்பட்டுவிட்டன. அதிவிரைவு ரயில்கள், வந்தே பாரத் ரயில்களும் வந்துவிட்டன. 1970களில் மெயின் லைனில் அனைவருக்கும் விருப்பமான ரயிலாக இருந்தது 'செங்கோட்டை பாசஞ்சர்' ரயில். கிட்டத்தட்ட செல்லப்பிள்ளை என்றுகூட சொல்லலாம். சென்னை எழும்பூருக்கு அதிகாலை முதலாக வந்து சேரும் ரயில் அப்போது அதுதான். மயிலாடுதுறையில் மாலை 7 மணிக்கு அடுத்துவரும் எல்லா ரயில்களுக்கும் வழிவிட்டு பொறுமையாக சென்னை வந்து சேரும். அந்த காலகட்டங்களில் 60 கி.மீ. வேகத்தில் பயணிக்கும் விரைவு ரயில் அதுதான். அப்போது மீட்டர் கேஜ்தான் அதிகமாக இருந்தது. தற்போது மீட்டர் கேஜ் இல்லை, செங்கோட்டை பாசஞ்சரும் இல்லை.
தனியார் மற்றும் அரசு அலுவலகங்களில், ‘முன்பு போல இல்லை. இப்ப எல்லாமே மாறிடுச்சு’ என்ற டயலாக்கை யாராவது ஒரு மூத்த அதிகாரி தனக்குக் கீழே பணிபுரிபவர்களிடம் சொல்லிக்கொண்டே இருப்பார் வேலையை அவசரமாக முடிக்க. அவசரமாக முடிக்கப்படும் சாலைகள் மற்றும் பாலங்கள் பின்னர் ஒரு நாள் அசாதாரண நிலையை உருவாக்கி விடுகின்றன. இதுதான் இன்றைய நிலை. தேவையில்லாமல் அனைவருக்கும் யாராவது ஒருவர் டென்ஷன் ஏத்தி விட்டுவிடுவார்கள்.
வங்கிப் பணி இன்று இலக்கு நிர்ணயிக்கும் பணியாக மாறிவிட்டது. டெபாசிட், லோன், மியூச்சுவல் ஃபண்ட், கிரெடிட் கார்ட் என்று எல்லாவற்றிற்கும் டார்கெட் வைத்து விடுகிறார்கள். ஒவ்வொரு மேனேஜர்களும் அதை நிறைவேற்ற படாதபாடு படுகிறார்கள்.
இன்று அறிமுகமாகி, நாளை உடனே காதலிக்கத் தொடங்குபவர்களின் காதலும் எந்த அளவுக்கு உறுதியாக இருக்கும் என்று சொல்ல முடியாது. கண்டதும் காதல் இலக்கியங்களில் மட்டுமே சாத்தியம். தங்கள் பெண்ணுக்கு வரன் பார்ப்பவர்கள் எல்லா விஷயங்களையும் நன்றாக விசாரித்து தெரிந்துகொண்ட பிறகே திருமண ஏற்பாடு செய்வார்கள். அப்படிச் செய்யப்படும் சில கல்யாணங்கள் விவகாரத்தில் முடிவதற்குக் காரணமாக இருப்பது தம்பதிகள் தங்களுக்குள் இனி ஒத்துவராது என்ற தப்பான அவசர முடிவுகள் காரணமாக இருக்கும்.
ஒரு நாளைக்கு நமக்கு உள்ளது 24 மணி நேரம் மட்டுமே. இதில் 7 மணி நேரம் தூக்கம் போக, மீதி 17 மணி நேரத்தை சரியாக நிர்வாகம் பண்ண கற்றுக்கொண்டால் போதும், எல்லாவற்றையும் வேகமாகவும் பதற்றமில்லாமலும் செய்து முடிக்கலாம். தினசரி யோகா பயிற்சி செய்தால் உடலும் மனமும் வளமாக இருக்கும். நேர நிர்வாகம் தானாக உருவாகிவிடும். பத்மாசனம், வஜ்ராசனம் போன்ற அடிப்படை ஆசனங்களை தினசரி செய்தாலே உடலும் மனமும் எப்போதும் இயல்பான நிலையில் இருக்கும். வேலைகளை சரியாகவும் வேகமாகவும் செய்ய முடியும். அவசரம் என்றால் முழு ஈடுபாட்டுடன் வேகமாக செய்யப்படும் ஒரு செயல் என்று சொல்லலாம். அப்போது அதில் தவறு எதுவும் வராது.
ஞானப்பழம் பெற வேண்டும் என்பது நம் நோக்கமாக இருந்தால் விநாயகர் போல விரைவான, புத்திசாலித்தனமான முடிவு எடுக்க வேண்டும். அப்படிச் செய்ய ஆரம்பித்தால் அவசரம் எப்போதும் நமக்கு வரமாகவே இருக்கும்.