நம்முடைய நகங்கள் வெறும் அழகுக்காக மட்டுமல்ல நம்முடைய ஆரோக்கியம் பற்றியும் பல தகவல்களை தரக்கூடியவை. நகங்களின் நிறம், அமைப்பு, வடிவம் ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்கள் பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளின் அறிகுறிகளாக இருக்கலாம். எனவே நம்முடைய நகங்களில் ஏற்படும் மாற்றங்களை கவனத்தில் கொள்வது மிகவும் முக்கியம். இந்தப் பதிவில் நகங்களில் ஏற்படும் 7 முக்கிய எச்சரிக்கை அறிகுறிகள் மற்றும் அவற்றின் மூலம் நம்முடைய ஆரோக்கியம் பற்றி அறியக்கூடிய தகவல்கள் பற்றி பார்க்கலாம்.
பலவீனமான நகங்கள்: உங்கள் நகங்கள் உடையக்கூடியதாகவோ பலவீனமாகவோ இருந்தால் அது பயோட்டின், இரும்பு அல்லது விட்டமின் பி12 போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் குறைபாட்டைக் குடிக்கலாம். மேலும் ரத்த சோகை அல்லது தைராய்டு கோளாறுகள் போன்ற நிலைமைகள் உள்ளவர்களுக்கும் நகங்கள் பலவீனமாக இருக்கும். எனவே உடனடியாக ஒரு சுகாதார நிபுணருடன் கலந்தாலோசித்து அதற்கான அடிப்படை காரணத்தைக் கண்டறியவும்.
மஞ்சள் அல்லது நிறம் மாறிய நகங்கள்: மஞ்சள் அல்லது நிறம் மாறிய நகங்கள் புஞ்சை தொற்றுக்கான அறிகுறியாக இருக்கலாம். இருப்பினும் தடிப்பு தோல் அழற்சி, நுரையீரல் நோய் மற்றும் தைராய்டு கோளாறுகள் போன்ற பிற சுகாதார நிலைமைகளாலும் இத்தகைய நிற மாற்றம் ஏற்படும்.
ஸ்பூன் வடிவ நகங்கள்: நன்றாக இருந்த நகங்கள் திடீரென குழிவானதாக அல்லது ஸ்பூன் வடிவத்திற்கு மாறினால் அது ரத்த சோகையின் அறிகுறி. Koilonychia என்று அழைக்கப்படும் இந்த நிலை சோர்வு, பலவீனம் மற்றும் வெளிர் சருமம் ஆகியவற்றுடன் சேர்ந்து ஏற்படும்.
நகங்களில் குழி அல்லது பள்ளங்கள்: நகத்தின் மேற்பரப்பில் சிறிய பள்ளங்கள், குழிகள் இருப்பது தோல் அழற்சியுடன் தொடர்புடையதாகும். குறிப்பாக சொரியாசிஸ், சரும பாதிப்பு உள்ளவர்களுக்கு இந்த அறிகுறி தென்படும். இத்தகைய மாற்றங்களை நீங்கள் கவனித்தால், உடனடியாக ஒரு தோல் மருத்துவரை அணுகுவது நல்லது.
வெள்ளை புள்ளிகள் அல்லது கோடுகள்: இது நீங்கள் நினைக்கும் அளவுக்கு அவ்வளவு மோசமான அறிகுறி அல்ல. சில சமயங்களில் நகத்தில் காயம் பட்டால் இத்தகைய மாற்றம் ஏற்படும். இருப்பினும் சில சந்தர்ப்பங்களில் அவை தொற்று, சிறுநீரக நோய் அல்லது துத்தநாக குறைபாடு போன்றவற்றைக் குறிக்கலாம்.
நகங்களில் கோடுகள்: நமது வயதுக்கு ஏற்ப நகங்களில் கோடுகள் ஏற்படுவது பொதுவான நிகழ்வாகும். இருப்பினும் அத்தகைய கோடுகளில் வலி போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை நாடுவது நல்லது.
நகம் எளிதாக பிரிவது: நகம் அதன் இடத்திலிருந்து பிரிந்து வருவதை Onycholysis என்பார்கள். அதிர்ச்சி, தொற்று, தைராய்டு கோளாறுகள் மற்றும் சில மருந்துகளின் பக்க விளைவினால் இது ஏற்படலாம்.
உங்கள் நகங்களில் இந்த எச்சரிக்கை அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் அனுபவித்தால், சரியான நோயறிதல் மற்றும் சிகிச்சைக்காக ஒரு மருத்துவரை அணுகுவது முக்கியம். இது உங்கள் உடல் நலம் பற்றிய புரிதலை ஏற்படுத்தி, நோயறிதலை துரிதப்படுத்தி விரைவில் சிகிச்சை பெற உதவும்.