கடந்த சில ஆண்டுகளாகவே புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது குறிப்பிட்ட வயதினர் மட்டுமின்றி, பிறந்த குழந்தை முதல் எல்லா வயதினரையும் பாதிக்கிறது. இதன் வரிசையில் கடந்த 30 ஆண்டுகளில் 50 வயதுக்கு உட்பட்டவர்கள் புற்று நோயால் பாதிக்கப்படுவது, 79 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக புற்றுநோய் குறித்த ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த 1990களில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்புகளின்படி, உலகெங்கிலும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 லட்சம் நபர்களாக இருந்தது. இதுவே 2019ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் 32 லட்சமாக அதிகரித்தது. இத்துடன். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறப்பவர்களின் எண்ணிக்கையும் சுமார் 28 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளது.
புற்றுநோய் அதிகரிப்பதன் காரணம் என்ன?
தற்போதைய காலகட்டத்தில் புற்றுநோய் அதிகரிப்பதற்கு காரணமாக மரபணு மாற்றங்கள், சிவப்பு இறைச்சி உட்கொள்ளுதல், புகைப்பழக்கம், மதுப்பழக்கம் மற்றும் குறைந்த ஊட்டச்சத்து எடுத்துக்கொள்வதே பிரதான காரணங்களாகச் சொல்லப்படுகிறது. இதனாலேயே 50 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது. 2022ல் மட்டும் சுமார் 14 லட்சம் புற்றுநோய் பாதிப்புகள் பதிவாகியுள்ள நிலையில், இது 2025ல் 15 லட்சத்தைத் தாண்டும் என கணிக்கப்பட்டுள்ளது.
2019ம் ஆண்டில் 50 வயதுக்கு உட்பட்டவர்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில், அதிகப்படியானவர்கள் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களாகவே உள்ளனர். 1990க்கு பிறகு ப்ரோஸ்டேட் மற்றும் மூச்சுக் குழாய் புற்றுநோய்கள் அதிகரித்துள்ளன. இதிலும் 40 வயதில் இருப்பவர்களை இத்தகைய புற்றுநோய் அதிகம் பாதித்துள்ளது.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோய்த் தடுப்பு மற்றும் முன்கூட்டியே நோயைக் கண்டறிதல் பிரதானத் தேவையாக உள்ளது. ஆரம்ப கட்டத்திலேயே புற்றுநோயைக் கண்டறிந்து, அவற்றுக்கு உரிய சிகிச்சை அளிப்பதற்கான தேவையை மருத்துவம் நிவர்த்தி செய்திருக்க வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். கடந்த 2019ல் இந்தியா உட்பட 200க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் உள்ள 29 வகையான புற்று நோய்களை ஆய்வு செய்து, ‘குளோபல் பர்டன் ஆஃப் டிசிஸ்’ என்ற அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
இதிலிருந்து கிடைத்த தரவுகளின் அடிப்படையில் சமீபத்திய ஆய்வு மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. எனவே, மக்கள் நல்ல ஆரோக்கியமான வாழ்க்கை முறையையும், உணவு பழக்கத்தையும் பின்பற்றி புற்றுநோய் பாதிப்புகளிலிருந்து காத்துக்கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.