

இந்த மார்ச் முதல் மே வரையிலான 2026 கோடைகாலம் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் வழக்கத்தைவிட வெப்பமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ளது. அதுவும் குறிப்பாக மார்ச் முதல் வாரத்தில் தொடங்கும் கோடையின் ஆரம்பம் (Early summer) தமிழ்நாடு எதிர்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஏப்ரல், மே வரை அதிகரித்துக்கொண்டே இருக்குமாம். எனவே, வரப்போகும் 4 முதல் 6 வாரங்கள் வரை கடுமையான வெப்பம் மற்றும் வறண்ட வானிலை காணப்படலாம் என்றும், அவ்வப்போது ஏற்படும் வெப்பச்சலனம் இடியுடன் கூடிய மழையைத் தரலாம் என்றும் அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.
குறிப்பாக, வட தமிழ்நாட்டில் அதிக எண்ணிக்கையிலான வெப்ப அலை நாட்கள் (heatwave days) இருக்கும் என்றும், பகல் நேர வெப்பநிலை இதுவரை பதிவான கோடைகால சராசரியை (seasonal average) விட கணிசமாக அதிகரிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைத் தாண்டி இந்தியாவின் பல பகுதிகளில் இதே நிலைமை நிகழக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாம் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகள்!:
தேவையான காற்றோட்டம் (Ventilation): வீடுகளின் அனைத்து அறைகளில் காற்றோட்டத்தை உறுதி செய்யுங்கள். நேரடியாக வரும் சூரிய ஒளியைத் தடுக்க சகிரீன்ஸ் (Curtains) அல்லது பிரதிபலிப்பு படலங்களை ஜன்னல்களில் பயன்படுத்தலாம். மின்விசிறிகளை (Ceiling fans) சுத்தம் செய்வது அல்லது தேவைப்பட்டால் புதிதாக மாற்றிக்கொள்ளலாம்.
நீர் சேமிப்பு: இந்தக் காலகட்டத்தில் ஏற்படும் அதிகரித்த நீர் தேவை மற்றும் பற்றாக்குறை வாய்ப்புகளால் எந்நேரமும் சுத்தமான குடிநீரை முன்கூட்டியே சேமித்து வைக்க முக்கியத்துவம் கொடுங்கள்.
நமக்கான மின்சார சேமிப்பு: வெளிப்புறங்களில் நிகழும் வெப்ப அலைகள் வீட்டின் மின்சார தேவையை அதிகரிக்கின்றன. அதனால் ஏற்படும் மின் தடைகளின்போது இன்வெர்ட்டர்கள் (Inverters) அல்லது நீங்கள் மேற்கொள்ளும் வேறேதேனும் தீர்வுகள் உதவலாம்.
சுகாதார பாதுகாப்பு (Health Safety): நீரிழப்பு மற்றும் வெப்பம் தொடர்பான நோய்களில் மாட்டிக்கொள்ளாமல் இருக்க குளுக்கோஸ் நீர், அதற்கான முதலுதவி பெட்டிகளைத் தயாராக வைத்திருங்கள்.
சுற்றுப்புறங்கள் மற்றும் சமூகத் தயார்நிலை:
பசுமை சூழல்: வீடுகளைச் சுற்றி மரங்களை முன்கூட்டியே நடுவது, சிறிய தோட்டங்களைப் பராமரிப்பது நம் சுற்றுப்புற வெப்பத்தைக் குறைத்து வீட்டின் உள்ளே காற்றின் தரத்தை மேம்படுத்தலாம்.
மழைநீர் சேகரிப்பு: வெப்பச்சலன மழை எதிர்பார்க்கப்படுவதால் மழைநீரைச் சேமித்து வைப்பது நீர் பற்றாக்குறையைக் குறைக்கும்.
கழிவு மேலாண்மை: வீட்டைச் சுற்றியுள்ள கழிவுகளை முறையாக அகற்றுவது, துர்நாற்றம், கொசு இனப்பெருக்கத்தைத் தடுக்கிறது. இது தேவையற்ற தொந்தரவைத் தடுக்கிறது.
மற்றவர்களையும் பாதுகாக்கலாம் (Community Cooling Spaces): முதியவர்கள், வெளிப்புற மக்கள் அல்லது தொழிலாளர்கள் போன்றவர்களை கோடைவெயிலின் உஷ்ணத்திலிருந்து காப்பாற்ற, உள்ளூர் மக்கள் மற்றும் சமூகங்கள் இணைந்து அவர்களுக்கான நிழலான பகுதிகள் அல்லது நீர் விநியோக மையங்களை அமைக்கலாம்.