
எங்கோ ஒரு மூலையில் இருந்து சிறிது வினாடிகள் காதில் ஒலித்த பாடலை (இசை) அன்றைய நாள் முழுக்க நம் மனதில் முணுமுணுத்த அனுபவம் பலபேருக்கு ஏற்பட்டு இருக்கும். இவ்வாறு அன்றாடம் கேட்கும் இசை, பெரும்பாலும் ஒரு பொழுதுபோக்காக மட்டுமே பார்க்கப்படுகிறது. ஆனால், தற்போது மூளையின் செயல்திறனை மேம்படுத்தும் சக்தி இந்த இசைக்கு உண்டு என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஐஐடி மண்டி சமீபத்தில் நடத்திய ஆய்வு ஒன்றில், மனித மூளையின் அசாதாரணமான திறன்களை மேம்படுத்துவதில் இந்திய பாரம்பரிய இசையின் குறிப்பிட்ட ராகங்கள் உதவும் எனக் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், இந்த ராகங்களால் மனித மூளை மற்றும் உணர்ச்சியில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன என்பது பற்றிய ஆய்வின் கண்டுபிடிப்புகள், Frontiers in Human Neuroscience இதழில் வெளியிடப்பட்டன.
இந்திய இசை, காலாச்சார மற்றும் பாரம்பரியத்தின் முக்கிய அம்சமாக உள்ளது. "இந்திய பாரம்பரிய இசையில் உள்ள ஒவ்வொரு ராகமும் குறிப்பிட்ட உணர்ச்சி நிலைகளை தூண்டும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது மனப்பதட்டத்திலிருந்து விடுபடவும், மனதில் ஏற்படும் குழப்பத்தில் இருந்து தெளிவு கிடைக்கவும், மகிழ்ச்சிக்கும் வழி வகுக்கிறது" என்று ஐஐடி மண்டியின் இயக்குநர் கூறியுள்ளார்.
40 பங்கேற்பாளர்களைக் கொண்டு, மேம்பட்ட EEG பகுப்பாய்வைப் பயன்படுத்தி இந்த ஆய்வுக்கு நடத்தப்பட்டது. குறிப்பிட்ட ராகங்களுக்கு ஏற்ப பங்கேற்பாளர்களின் மூளையின் செயல்பாட்டில் ஏற்படும் மாற்றங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்காணித்து ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளனர்.
இந்த ஆய்வானது, ராகங்கள் எவ்வாறு கவனத்தை மேம்படுத்தவும், உணர்ச்சிகளை நிர்வகிக்கவும், மன உறுதியைக் கொண்டுவரவும் உதவுகின்றன என அறிவியல் பூர்வமாக விளக்குகிறது.
குறிப்பாக, இனிமைக்குப் பெயர் பெற்ற 'ராக தர்பாரி' எனும் ராகம் கவனத்துடன் தொடர்புடையது. இது மனம் அலைபாய்வதைக் குறைக்க உதவுகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
'ராக ஜோகியா' எனும் ராகம் உணர்ச்சிக் கட்டுப்பாடுகளுடன் தொடர்புடையது என்றும் இது கவலை போன்ற உணர்வுகளை நிர்வகிக்க உதவும் என்றும் இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
இந்தக் கண்டுபிடிப்பானது, இசை உலகையும் அறிவியல் உலகையும் இணைக்கும் பாலமாக திகழுகிறது. மேலும், மன அழுத்தம் மற்றும் குழப்பம் அதிகரித்து வரும் தற்போதைய தலைமுறையினருக்கு, இசை ஒரு சிறந்த தீர்வாக கருதப்படுவதோடு, மன நலத்திற்கு ஆரோக்கியம் அளிக்கும் ஒன்றாகவும் விளங்குகிறது.