தசைச்சிதைவைக் கண்காணிக்கும் முதல் ஹெல்த் சென்சார் கண்டுபிடிப்பு!

தசைச்சிதைவைக் கண்காணிக்கும் முதல் ஹெல்த் சென்சார் கண்டுபிடிப்பு!

அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள், குறிப்பாக விண்வெளி வீரர்கள் எதிர்கொள்ளும் தசைச்சிதைவை கண்டறிந்து கண்காணிக்கக் கூடிய வகையிலான, அவர்கள் அணியக்கூடிய ஹெல்த் சென்சாரை உருவாக்கியுள்ளார்கள்.

பெரும்பாலானவர்களுக்கு எலும்பின் தசை எடைக் குறைவு, தசை வலுவிழப்பு மற்றும் தசைச்சிதைவு போன்ற விஷயங்கள் பல்வேறு காரணங்களுக்காக ஏற்படலாம். இது முதுமை மற்றும் நீரிழிவு நோயின் பக்க விளைவாகக் கூட இருக்கலாம். இதனால் பாதிக்கப்பட்ட நோயாளியின் தசையின் அளவு மற்றும் எந்த அளவு தசை சேதமடைந்துள்ளது என்பதைக் கண்டுபிடிக்க மருத்துவர்கள் தற்போது வரை MRI ஸ்கேனையே நம்பி வரும் நிலையில், அடிக்கடி பரிசோதனை செய்ய நேரம் செலவழிவது மட்டுமல்லாமல், மிகவும் விலை உயர்ந்ததாகவும் இது இருக்கிறது.

சமீபத்தில் இதுசார்ந்த புதிய ஆய்வுகளின் படி, MRI பயன்படுத்தி அடிக்கடி சோதிப்பதற்கு மாற்றாக, இ-திரெட்களால் செய்யப்பட்ட மின்காந்த சென்சாரை இதற்குப் பயன்படுத்தலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை சோதிப்பதற்கு ஓஹையோ யுனிவர்சிட்டி, ஒரு பெட்டியில் மாட்டிறைச்சியை நிரப்பி, அதில் ஏற்படும் தசை இழப்பை கண்காணிக்க இந்த புதிய சென்சாரை பயன்படுத்தியுள்ளார்கள். இதில் கிட்டத்தட்ட 51% தசை இழப்புவரை அது கண்காணித்துள்ளதாக ஆய்வு முடிவுகள் வெளிவந்துள்ளன. குறுகிய விண்வெளி பயணங்களில் விண்வெளி வீரர்கள் தசை எடை மற்றும் எலும்பு அடர்த்தியில் 20 சதவீதம் வரை இழப்பை சந்திக்கிறார்கள். "எங்கள் சென்சாரின் உதவியோடு, ஒரு நீண்ட பயணத்தில் இருக்கும் விண்வெளி வீரர் அல்லது வீட்டில் இருக்கும் நோயாளி, தங்கள் உடல் நிலையைக் கண்காணிக்க இந்த சென்சாரை பயன்படுத்தலாம்" என்று ஆய்வின் முதன்மை ஆசிரியரான 'ஆல்யன்னா ரைஸ்' கூறினார்.

மேலும் நோயாளிகளுக்கு அதிக கஷ்டத்தை கொடுக்காமல், தன் உடலில் ஏற்படும் மாற்றங்களை கண்டறிய இதை மருத்துவர்கள் தாராளமாகப் பயன்படுத்தலாம் என்றும் கூறினார். இரண்டு வட்ட வடிவிலான தகடுகளை பயன்படுத்தி, ஒன்று உடலில் ஏற்படும் மாற்றத்தை கண்டுபிடித்து மின் சிக்னலாக வெளியேற்றுவதற்காகவும் மற்றொன்று வெளியேற்றப்படும் சிக்னல்களை ரிசீவ் செய்யும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது.

இதை ஒரு முழு சாதனமாகக் கொண்டுவர சில ஆண்டுகள் ஆகலாம் என்றும், எதிர்காலத்தில் இதை செல்போன் செயலிகளோடு இணைத்து நேரடியாக மருத்துவர்கள் வீட்டிலிருந்தே தன் நோயாளிகளை கவனித்துக் கொள்ளும் வகையில் மேம்படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com