உடல் இயக்கத்துக்கு நுண்ணூட்டச் சத்தான இரும்புச்சத்து கட்டாயம் தேவை. இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களில் இரும்பும் புரதமும் சேர்ந்து ஹீமோகுளோபின் என்ற பொருளாக மாறி உடலுக்குத் தேவையான ஆக்சிஜனை எடுத்துக் கொண்டு உடலின் அனைத்து திசுக்களுக்கும் அளிக்கிறது. தசைத்திசுக்கள், நரம்பு திசுக்கள் போன்ற ஒவ்வொரு வகைத் திசுவுக்கும் ஆக்சிஜன் கட்டாயம் தேவை. வளரும் குழந்தைகளுக்கும் வளர் இளம் பருவத்தினருக்கும் மற்றும் கர்ப்பிணி தாய்மார்களுக்கும் இரும்புச்சத்து அதிகம் தேவை. தினசரி உணவின் மூலம் சேரும் இரும்புச் சத்துடன், தேவைப்பட்டால் மாத்திரையாகவும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இரும்புச் சத்துக் குறைபாடு இரத்த சோகை நோயை ஏற்படுத்தும். இதனால் தோல், நகம், உதடு, நாக்கு, கண்கள் வெளுத்து களைப்பாக இருக்கும். தினசரி செய்து பழக்கப்பட்ட செயல்களை செய்ய முடியாமல் மலைப்பு ஏற்படும். எளிதில் உடல் சோர்வடையும். இரத்த சோகை அதிகம் ஆகும்போது மூச்சுத்திணறல் கூட ஏற்படும்.
சிறுவயதில் ஏற்படும் இரத்த சோகை முக்கியமாக இரும்புச்சத்து குறைபாட்டினால் ஏற்படுகிறது. இது வளரும் குழந்தைகளின் மூளையில் பல நீண்டகால, மாற்ற இயலாத பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. மூளையின் சில சிறப்பு செல்களில் (Oligodendrocytes and microglial cells) இரும்புச்சத்தானது பெரிடின் மற்றும் டிரான்ஸ்பெரின் என்ற நிலையில் சேமித்து வைக்கப்படுகிறது. மூளையில் வெள்ளை (White Matter) மற்றும் சாம்பல் நிறப் (Grey Matter) பகுதிகள் உள்ளன. இதில் இளம் கருப்பு பகுதிகளை உருவாக்குவது ஆலிகேடெண்ட்ரோசைட்ஸ் என்ற செல்கள். இந்த செல்களில் போதிய அளவு இரும்புச்சத்து இல்லாவிடில் இளம் கருப்பு பகுதிகள் உருவாக்குவதில் தாமதம் ஏற்படும். இதனால் குழந்தைகளின் வயதுக்கு ஏற்ற வளர்ச்சி பருவங்கள் தாமதமாகும். மற்றொரு வகை சிறப்பு செல்லான மைக்ரோக்ளையல் செல்கள் நரம்பு திசுக்களை ஒன்றுடன் ஒன்று இணைக்கின்றன. இவையும் போதிய இரும்புச்சத்து இருந்தால் மட்டுமே சிறப்பாக தனது பணியை செய்ய முடியும்.
ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் அதுவும் ஒரு வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் தினம் தினம் புதிதாக சிலவற்றைக் கற்பார்கள். சிறு குழந்தைகள் கற்றல் திறன், மூளையில் உள்ள டோபமின் மற்றும் ஓபியேட்கள் போன்ற உயிர் வேதிப்பொருட்களின் அளவைப் பொறுத்தது. இரண்டும் ஒரே அளவில் இருக்க வேண்டும். இரும்புச் சத்து குறைபாடு இருந்தால் டோபமின் செயல்பாடு குறைந்து, எண்டார்பின், என்செபலின் போன்ற ஒபியேட்களின் அளவு அதிகரிக்கிறது. டோபமின் குறைவதால் கற்றல் திறன் பாதிக்கப்படுகிறது.
மூளையின் செயல்பாடுகளுக்குத் தேவையான இரும்புச்சத்தில் 80 சதவிகிதம் வேகமாக வளரும் சிறு குழந்தைப் பருவத்திலேயே மூளையில் சேமிக்கப்படுகிறது. மூன்று மாதத்துக்கு மேலாக நீடிக்கும் லேசான இரத்த சோகை சிறு குழந்தையின் மூளை வளர்ச்சி மற்றும் உடல் திறன் வளர்ச்சியைப் பாதித்து விடுகிறது. இதனால் கவனமின்மையும் மறதியும் சேர்ந்து கொண்டு கற்றலில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது. விளையாட்டுத் திறன் குறைந்து குழந்தை எளிதாகக் களைப்பாகிவிடும். அதிக தூக்கம், காலையில் தூங்கி விழிக்கும்போது உடல் அசதி, படபடப்பு, எரிச்சல் தன்மை ஆகியவை ஏற்படும். இரத்த சோகை அதிகமாகும்போது உடலில் எதிர்ப்பு சக்தி குறைந்து விரைவில் நோய் தொற்றுகளுக்கு குழந்தைகள் ஆளாகி விடுவார்கள்.
இரும்புச்சத்து அதிகம் உள்ள பொருட்களை உணவுடன் எடுத்துக் கொள்ளாதது, மண், கல் போன்றவற்றைத் தின்பது போன்றவை இரத்த சோகைக்கு முக்கியக் காரணங்களாகும். இதனால் அடிக்கடி சளி, வயிற்றுப்போக்கு போன்றவை ஏற்படும். குழந்தைகளும் சோகையாகவே இருக்கும். முருங்கைக்கீரை, அகத்திக்கீரை, முளைக்கீரை, கருவேப்பிலை, பீட்ரூட் சுண்டைக்காய், பேரிச்சம்பழம், கொய்யா, ஆப்பிள், கருப்பு திராட்சை, வெல்லம், கேழ்வரகு போன்றவற்றில் இரும்பு சத்து அதிகம் உள்ளது. ஈரல் இறைச்சி போன்றவற்றிலும் இரும்பு சத்து உள்ளது. இவற்றில் ஏதாவது 2 - 3 பொருட்களை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
ஆறு மாதங்களுக்கு ஒரு முறை குடல் பூச்சிக்கு மருந்து கொடுக்க வேண்டும். இது அங்கன்வாடி மையங்களிலும், பள்ளிக்கூடங்களிலும் இலவசமாகத் தரப்படுகிறது. மருத்துவரின் அறிவுரைப்படி இரும்பு சத்து மாத்திரை அல்லது டானிக் எடுத்துக்கொள்ள வேண்டும். மொத்தம் மூன்று மாதங்கள் முழு முயற்சியுடன் தொடர்ந்து மருந்து சாப்பிட இரத்த சோகை நோயைக் குணப்படுத்தலாம்.