தண்ணீருக்கு பதில் பழரசம் குடித்தால் போதுமா?

தண்ணீருக்கு பதில் பழரசம் குடித்தால் போதுமா?

ருவருக்கு எவ்வளவு நீர் தேவை என்பது அவருடைய உடல்வாகு, அதாவது அந்நபர் குண்டானவரா ஒல்லியானவரா, அவருடைய உணவு, அவர் வசிக்கும் இடத்தின் உஷ்ண நிலை, அவருடைய வேலை ஆகியவற்றைப் பொறுத்தது. ஏதோ அபூர்வமாக, சில வேளைகளில் தேவைக்குக் குறைவாக நீர் குடிக்கும்போது, நம் உடல் அட்ஜஸ்ட் செய்துகொள்ளும். அதாவது, உடலிலுள்ள நீரின் அளவுக்கு ஏற்றவாறு, குறைந்த சிறுநீரை உற்பத்தி செய்து பணி ஆற்றும். ஆனால், உடலுக்குத் தேவையான அளவை விட குறைந்த நீர் குடிப்பதையே வழக்கமாக வைத்துக்கொண்டால், உடலுக்கு தீர்க்க முடியாத பல பிரச்னைகள் ஏற்படலாம். சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக இருந்தால் உடலின் நீர் அளவை சரியான அளவில் வைத்திருக்க முடியும். ஆனாலும், அதற்குத் தகுந்த நீர் கிடைக்காவிட்டால், சிறுநீரகங்கள் விரைவில் களைப்படைந்து விடுகின்றன.

தேவைக்குக் குறைந்த அளவு நீர் குடிக்கும்போது, உடலில் இருக்கும் நீர் மிக முக்கியமான வேலைகளுக்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, மற்ற வேலைகளுக்குத் தேவையான நீர் கிடைக்காமல் போய் விடுகிறது. எடுத்துக்காட்டாக, போதுமான அளவு நீர் இன்மையால் ஆகாரம் செரிப்பது தடைப்பட்டு, மலச்சிக்கல் ஏற்படலாம். உடல் வறண்டு காணப்படும்.

தினமும் ஒரு குறிப்பிட்ட அளவு நீர், சிறுநீரகங்களில் சென்றடைந்து சுழற்சி முறையில் மறுபடியும் வெளியே வர வேண்டும். இது, சிறுநீரகங்களிலிருந்து வெளியேற்றப்பட வேண்டிய பாக்டீரியாக்களை வெளியே தள்ளுவதற்கு மிகவும் முக்கியமானது. சரியான அளவு நீர் சிறுநீரகங்களுக்குள் செல்லாவிடில், இந்த பாக்டீரியாக்கள் வெளியேற்றப்படாமல் சிறுநீரகத்திலேயே தங்கி, சிறுநீர்க்குழாயில் தொற்றினை ஏற்படுத்தி, சிறுநீர் கழிக்கும்போதெல்லாம், எரிச்சலை உண்டாக்குவதோடு, முதுகு வலியையும் ஏற்படுத்தும்.

சில சமயம் வலி நிவாரணிகள், எரிச்சலை அடக்கும் மருந்துகள் வண்டலாக சிறுநீரகங்களில் தங்கி விடலாம். இப்படி வண்டலாகத் தங்கி விடும் மருந்துகள் தொடர்ந்து சிறுநீரகங்களில் இருந்தால், அங்குள்ள திசுக்களை நாசப்படுத்தும். எனவே, இம்மருந்துகளின் வண்டலை அவ்வப்போது வெளியேற்றுவதற்கும் நீர் தேவைப்படுகிறது. மேலும், சரியான அளவு நீர் இன்மையால் சிறுநீரகக்கற்கள் ஏற்பட்டு மேலும் தொந்தரவு ஏற்படலாம். அன்றாடம் நிறைய நீர் குடிப்பது, சிறுநீரகக்கற்கள் மற்றும் தொற்று ஏற்படாமல் தடுக்கிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

நாம் அன்றாடம் பழரசம், காப்பி, டீ என்று பல பானங்களைக் குடிக்கிறோம். இது போதாதா என்று உங்களுக்குத் தோன்றலாம். இவற்றிலிருந்தும் நம் உடலுக்கு நீர் கிடைக்கிறது. இதனாலேயே நாம் சரியான அளவு நீர் பருகாவிட்டாலும் உடலுக்குத் தேவையான அளவு நீர் கிடைத்துக்கொண்டிருக்கிறது. பழங்கள், காய்கறிகள் போன்றவற்றிலிருந்து கூட உடலுக்குத் தேவையான நீர் கிடைக்கிறது. ஒரு ஆணின் உடலில் சுமார் 65 சதவீதத்திலிருந்து 75 சதவீதமம் வரையும், பெண்ணின் உடலில் சுமார் 65 சதவீதமும் நீர் இருக்கிறது.

சரி, டீ, காப்பி, பால் போன்ற பானங்களிலிருந்து உடலுக்குத் தேவையான நீர் கிடைக்கும்போது, வெறும் நீர் குடிப்பதும் முக்கியம் என்று ஏன் கூறப்படுகிறது என்றால், பானங்கள் எவ்வளவு குடித்தாலும், வெறும் நீர் குடிக்காவிட்டால் உடலுக்குத் தேவையான நீர் கிடைக்காது. வெறும் நீர் குடிப்பதால் பல நன்மைகள் ஏற்படுகின்றன. தாகம் தணிக்கும் பானங்களில் செயற்கையான கலர், மணம் போன்றவை சேர்க்கப்படுகின்றன. ஆனால், வெறும் நீரில் இவை கிடையாது. டீ, காப்பி போன்றவற்றில் காஃபின், சர்க்கரை போன்றவை இருப்பதால் பற்கள் பாதிக்கப்படுகின்றன. ஆனால், வெறும் நீர் உடலுக்கு மிகவும் பாதுகாப்பானது.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com