
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக, பருவநிலை மாற்றம் காரணமாக கடுமையான பனிமூட்டம் காணப்படுகிறது. அதோடு, கனமழை, அதிக காற்று, புயல் என மக்கள் அனுபவித்து வருகின்றனர். இந்த நிலையில், பொதுமக்கள் தங்களுடைய சருமத்தையும் ஆரோக்கியத்தையும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்.
முக்கியமாக குளிர்காலத்தில், சருமம் வறட்சியாக காணப்படும். அதற்கு என்ன காரணம் என்றால் குளிர்காலத்தில் சருமத்தில் எண்ணெய் பசை வறண்டு போய்விடும். மேலும் கொழுப்பு திரவங்கள் உறைந்து காணப்படும். ஆகையால் தான் சருமம் வறட்சியாகக் காணப்படுக்கிறது.
குளிர்காலத்தில் சுடு தண்ணீரில் குளிக்கலாமா?
பெரும்பாலும் மக்கள் குளிர்காலத்தில், சுடுதண்ணீரில் தான் குளிக்கின்றனர். ஆனால் அப்படி குளிக்க கூடாது. ஏனெனில், குளிர்காலத்தில் சுடுதண்ணீரில் குளிப்பதால், சருமத்தில் உள்ள மடிப்புகள் விரிவடைந்து, சுருங்க ஆரம்பிக்கும். எனவே 98.4% சதவீதம் டெம்பரேச்சர் உள்ள சாதாரண தண்ணீரிலே குளிக்கலாம்
சரும வறட்சி
சருமம் வறட்சியாக இருப்பதை தடுப்பதற்கு, குளிர்காலத்தில் அடிக்கடி சோப்பு பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். குளிப்பதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பு பாலாடையை கை, கால்களில் தடவி, பயத்தம் மாவு மற்றும் கடலை மாவு சேர்த்து சருமத்திற்கு பயன்படுத்தி குளிக்க வேண்டும். இதனால் சருமம் மென்மையாக மாறும். மேலும் தேங்காய்ப்பாலை சருமத்தில் தடவி குளித்தால் சருமம் மென்மையாக இருக்கும்.
உதடு வெடிப்பு
குளிர் காலத்தில், மற்றொரு முக்கியமான பிரச்னை என்னவென்றால், உதடு வெடிப்பு. இதை சரி செய்வதற்கு வீட்டிலேயே எளிமையாக கிடைக்கும் பசு வெண்ணெய் அல்லது பசு நெய்யை காலை மற்றும் இரவு நேரத்தில் உதட்டில் தடவினால் போதும்.
பாத வெடிப்பு
குளிர்காலத்தில் உதடு வெடிப்பு மட்டுமல்லாமல், பாதத்திலும் வெடிப்பு ஏற்படும். இதற்கு கிளிஞ்சல் பொடி மற்றும் வெண்ணெய் சேர்த்து காய்ச்சி வடிகட்டிய பேஸ்ட்டை பாத வெடிப்பில் தடவி வந்தால், குளிர்காலத்தில் ஏற்படும் பாத வெடிப்பிற்கு நல்ல தீர்வு கிடைக்கும்.
வைட்டமின்கள்
குளிர்காலத்தில் பொதுமக்கள் தங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள, வால்நட், பாதாம், பிளாக் சீட் (flaxseeds) விதை, பப்பாளி பழம், கேரட், மீன் வகைகளில் சங்கரா மீன், நெத்திலி மீன் ஆகியவற்றை சாப்பிட்டால் சருமத்திற்கு தேவையான அனைத்து வைட்டமின்களையும் இயற்கையாகவே பெற முடியும்.
மழைக்காலங்களில் முடிந்த அளவு வீட்டில் இருப்பதே நல்லது. அதிக தண்ணீர் தேங்கிய இடங்களுக்கு செல்வதை தவிர்த்து, ஆரோக்கியமான முறையில் குளிர்காலத்தை வென்றிடுங்கள்...