பொதுவாக, கிராமப்புறங்களில் கூட இரத்த சோகையால் பாதிக்கப்பட்டு இருப்பவர்களுக்கு சொல்லப்படும் அறிவுரை, ‘தினம் பேரிச்சம் பழம் சாப்பிடு, நல்லா இரத்தம் ஊறும்’ என்பதுதான். அந்தளவிற்கு பேரிச்சம் பழத்தின் மகிமை பரவி இருக்கிறது. உண்மையில் பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் உடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும் என்ற கூற்றில் எந்த அளவு உண்மை இருக்கிறது என்று இந்தப் பதிவில் காண்போம்.
முதலில் ஹீமோகுளோபின் என்றால் என்ன?: ஹீமோகுளோபின் என்பது ஒரு புரதம். இரத்த சிவப்பணுக்களின் மிகவும் அவசியமான ஒரு அங்கமாகும் இது. இரும்பு சத்தை பயன்படுத்திதான் நம் உடல் நுரையீரலில் இருந்து உடலின் அனைத்து பாகங்களுக்கும் ஆக்ஸிஜனை ஹீமோகுளோபின் எடுத்துச் செல்லும். மேலும், தசைகளுக்கு ஆக்ஸிஜனை வழங்கும் புரதமான மயோகுளோபினுக்கும் போதுமான இரும்பு சத்து தேவைப்படுகிறது
நான்கு முக்கியமான சத்துக்கள்: நம் உடலில் இரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிக்க உதவும் நான்கு முக்கியமான சத்துக்கள் இரும்பு, போலிக் அமிலம், வைட்டமின் பி12 மற்றும் புரதச்சத்து. இந்த நான்கும் சேர்ந்துதான் உடலில் தேவையான அளவு இரத்த செல்களை உற்பத்தி செய்கின்றன. வெறும் இரும்புச் சத்து மட்டும் இரத்த சோகையை சரி செய்யாது. எனவே, இரத்த சோகைக்கு இரும்புசத்து மட்டும் போதும் என்பது உண்மையல்ல.
இரத்த சோகை ஏன் வருகிறது?: பேரிச்சம் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் இரத்த சோகை சரியாகிவிடும் என்று நினைப்பது தவறாகும். முதலில் இரத்த சோகைக்கான காரணம் என்ன என்பதை கண்டுபிடிக்க வேண்டும். இரத்த சேதத்தினால் இரத்த சோகை வந்தால் பேரிச்சம் பழத்தினால் ஒன்றும் செய்ய முடியாது. அது இரும்பு சத்து குறைபாடு அல்ல. இந்த இரத்த சேதம் எதனால் வருகிறது என்றால் மூலநோய், அல்சர், மாதவிடாயின்போது ஏற்படும் அதிகப்படியான இரத்தப்போக்கு, குழந்தை பிறக்கும்போது இரத்தம் அதிகமாக வீணாவது, போன்றவற்றால் நிகழலாம். இந்த பிரச்னையை சரி செய்தால் மட்டுமே இரத்த இழப்பு நிற்கும்.
பேரிச்சையில் எத்தனை சதவீதம் இரும்புசத்து உள்ளது?: கருப்பு நிற பேரிச்சம் பழங்களில் மட்டுமே இரும்புச்சத்து உள்ளது. 100 கிராம் பேரிச்சையில் 0.3லிருந்து 10 மில்லி கிராம் வரை இரும்புச் சத்து இருக்கிறது. ஒரு ஆணிற்கு 13.5 முதல் 17.5 கிராம் வரை ஹீமோகுளோபினும், மாத விலக்காகும் பெண்ணிற்கு பதினான்கிலிருந்து 15 கிராம் வரையும் தேவை. இதன்படி பார்த்தால் சாதாரணமாக ஒரு மனிதன் ஒரு நாளைக்கு 100 கிராம் பேரிச்சம்பழம் சாப்பிட்டால் மட்டுமே தேவையான இரும்பு சத்து கிடைக்கும். ஆனால், 100 கிராம் பேரிச்சையில் 60 முதல் 65 கிராம் வரை சர்க்கரை சத்து உள்ளது. சர்க்கரை நோயாளிகள் கண்டிப்பாக பேரிச்சையை சாப்பிடக்கூடாது. பிறர் தினமும் இப்படி சாப்பிட்டு வந்தால் விரைவில் சர்க்கரை நோயாளிகளாக ஆவது உறுதி.
பீட்ரூட்டில் இரும்பு சத்து இருக்கா?: அதேபோல. பீட்ரூட் சாப்பிட்டால் இரத்தம் ஏறும் என்பதும் உண்மையல்ல. 100 கிராம் பீட்ரூட்டில் ஒரு மில்லி கிராம் இரும்புச் சத்து மட்டுமே உள்ளது. எனவே, இதை மிக மிக அதிக அளவில் எடுத்தால் மட்டுமே இரும்பு சத்து கிடைக்கும். 100 கிராம் முருங்கை இலையில் 4 மில்லி கிராம் இரும்பு சத்து நிறைந்துள்ளது. மேலும், இதில் வைட்டமின் சி நிறைந்து இருப்பதால், உடலுக்குத் தேவையான இரும்புச் சத்தை வழங்குகிறது. இரத்த சோகையைத் தடுக்கிறது. முருங்கைக் கீரையில் உள்ள ஆன்டி ஆக்சிடண்ட் உடல் பருமன், சர்க்கரை நோய், இரத்த சோகை, இருதய நோய்கள், ஆா்த்ரைட்டிஸ், கல்லீரல் நோய்கள், சரும நோய்கள், ஜீரணக் கோளாறு உள்ளிட்டவற்றைக் குணப்படுத்தும்.
ஹீமோகுளோபினை அதிகரிக்கும் உணவுகள்: வேர்க்கடலை, பழங்கள், பீன்ஸ், பச்சை இலை காய்கறிகள் மற்றும் தானியங்களில் ஃபோலிக் அமிலங்கள் கிடைக்கிறது. ஹீமோகுளோபின் உற்பத்திக்கு வைட்டமின் சி அவசியம். எலுமிச்சை, நெல்லிக்காய், ஆரஞ்சு, தக்காளி, முலாம்பழம் ஸ்ட்ராபெர்ரி போன்ற பழங்கள் மற்றும் மிளகு, கம்பு, கேழ்வரகு போன்ற சிறுதானியங்களை அன்றாடம் உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் இரத்த சோகை குறைபாட்டினை தடுக்கலாம்.