
இசை நம் வாழ்வில் ஒரு பிரிக்க முடியாத அங்கம். சந்தோஷமாக இருந்தாலும் சரி, சோகமாக இருந்தாலும் சரி, இசை நம் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாகத் திகழ்கிறது. சில பாடல்கள் நம்மை பழைய நினைவுகளுக்கு அழைத்துச் சென்று கண்ணீர் வரவழைக்கின்றன. இன்னும் சில பாடல்கள் வாழ்க்கையின் ஆழமான அர்த்தங்களை உணர்த்துகின்றன. ஆனால் ஏன் சிலர் எப்போதும் சோகப் பாடல்களுக்கு அடிமையாகிறார்கள்? சோகப் பாடல்களை கேட்பவர்கள் உண்மையிலேயே சோகமானவர்களா? வாங்க தெரிஞ்சுக்கலாம்.
நிபுணர்கள் கூறுவது என்னவென்றால், சோகப் பாடல்களை ரசிப்பதில் ஒரு அறிவியல் ஒளிந்துள்ளது. இத்தகைய பாடல்கள் நம் மனதில் உள்ள எதிர்மறை உணர்ச்சிகளை வெளியேற்ற உதவுகின்றன. நமது கஷ்டங்களை பிரதிபலிக்கும் வரிகள், நாம் தனிமையில் இல்லை என்ற ஆறுதலை தருகின்றன. இது ஒரு விதத்தில் நமக்கு மன அமைதியை கொடுக்கிறது. ஆச்சரியம் என்னவென்றால், சோகமாக இருப்பவர்கள் மட்டுமல்ல, சந்தோஷமாக இருப்பவர்களும் கூட இந்த சோகப் பாடல்களை விரும்பி கேட்கிறார்கள் என்பதுதான்.
சோகப் பாடல்கள் நம் வாழ்வின் கஷ்டங்களோடு ஒத்து போகும்போது, நமக்குள் ஒரு பிணைப்பு உருவாகிறது. நாம் பிரச்சனைகளில் சிக்கித் தவிக்கும்போது, நாம் மட்டும் தான் இப்படி கஷ்டப்படுகிறோமோ என்று எண்ணத் தோன்றும். ஆனால் சோகப் பாடல்கள், "இல்லை, நீ மட்டும் தனியாக இல்லை" என்று ஆறுதல் கூறுவது போல உணர்வு ஏற்படுகிறது. இந்த புரிதல் மனதிற்கு ஒரு விதமான நிம்மதியையும், பாசிடிவ் எண்ணங்களையும் தருகிறது. மேலும், இசை மனதை அமைதிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. இது மன அழுத்தத்தை குறைத்து, மனநிலையை சீராக்க உதவுகிறது என்று பல ஆய்வுகள் கூறுகின்றன.
சோகப் பாடல்கள் புரோலாக்டின் என்ற ஹார்மோன் சுரக்க காரணமாம். இந்த ஹார்மோன் உணர்ச்சிப்பூர்வமான வலியை குறைத்து மன அழுத்தத்தையும், துக்கத்தையும் போக்க உதவுகிறது. நீங்கள் மன வருத்தத்தில் இருக்கும்போது, இந்த ஹார்மோன் ஒரு அமைதியான உணர்வை உருவாக்க உதவுகிறது. சோகப் பாடல்கள் இந்த ஹார்மோனின் சுரப்பைத் தூண்டி மன அழுத்தத்தைக் குறைக்கின்றன.
மேலும் சோகப் பாடல்கள் நமது பழைய நினைவுகளை கிளறி மனதை லேசாக்குகின்றன. குறிப்பாக இனிமையான பள்ளி, கல்லூரி கால நினைவுகள், பழைய உறவுகள், மற்றும் வாழ்க்கையின் முக்கியமான தருணங்களுடன் தொடர்புடைய பாடல்கள் மனதை வருடிச் செல்கின்றன. இசை பதட்டத்தை குறைக்கிறது, கோபம், வருத்தம் போன்ற எதிர்மறை உணர்ச்சிகளை கட்டுப்படுத்துகிறது. சோகப் பாடல்களை கேட்கும்போது அழுகை வருவது இயற்கையானது தான். ஏனெனில் அழுகை என்பது உள்ளுக்குள் அடக்கி வைத்த உணர்ச்சிகளை வெளியேற்றும் ஒரு வடிகால் போன்றது.
எனவே, சோகப் பாடல்கள் வெறுமனே வருத்தத்தை தருவதோடு மட்டுமல்லாமல், மனதிற்கு பல நன்மைகளையும் வழங்குகின்றன. உண்மையில், சோகப் பாடல்கள் மன ஆரோக்கியத்திற்கு ஒரு சிறந்த மருந்து என்றே கூறலாம்.