மனம் ஒரு குரங்கா? அதை அடக்க முடியாதா?

மனம் ஒரு குரங்கா? அதை அடக்க முடியாதா?

‘மனம் ஒரு குரங்கு’ என்கிறார்கள். ஏனெனில், நொடிக்கொரு முறை அது தனது நிலையிலிருந்து மற்றொரு நிலைப்பாட்டுக்கு மாறுவதால்தான் அப்படிச் சொல்லி வைத்தார்கள் நமது முன்னோர்கள். மனதை குரங்கோடு ஒப்பிடும் நேரம், அதற்கான உதாரணத்தையும் பார்க்கலாம்.

ஒருவன் தனது நண்பன் பார்த்தசாரதியை பற்றி நினைக்கிறான். அந்த நண்பன் சிங்கப்பூரில் இருக்கிறான் அல்லவா? சிங்கப்பூரில் வேறு யாரெல்லாம் இருக்கிறார்கள்? ஓ… கோவிந்தராஜனும் கூட சிங்கப்பூரில்தான் இருக்கிறான்! கோவிந்தராஜன் பெரிய ரஜினிகாந்த் விசிறியாச்சே? சமீபத்துல வந்த ரஜினிகாந்தோட படம் ‘ஜெயிலர்’ படம்தான் இல்லயா? படத்தோட மியூசிக் பாட்டெல்லாம்‌ அருமையா இருந்ததே? அந்தப் படத்துக்கு அனிருத்தான் இசை இல்லையா? அனிருத் ஷாரூக்கானோட, ‘ஜவான்’ படத்துக்குக்கூட இசையமைச்சுருக்காரே! ஏ.ஆர்.ரகுமானை விட 10 கோடி ரூபாய் அதிகமா சம்பளம் வாங்கியிருக்கறதா சொன்னாங்களே? சமீபத்துல, ‘மாமன்னன்’ படத்துல, ‘நெஞ்சமே’னு ஒரு பாட்டு அருமையா போட்டுருக்காரே ரகுமான்? அந்தப் பாட்டை பாடினதுகூட விஜய் ஜேசுதாஸூம், சக்திஸ்ரீ கோபாலனும்தான் இல்லையா?

மேலே கண்டதில், பார்த்தசாரதி, சிங்கப்பூர், கோவிந்தராஜன், ரஜினி, ஜெயிலர், அனிருத், ஷாரூக்கான், ஜவான், 10 கோடி, ஏ.ஆர்.ரகுமான், மாமன்னன், நெஞ்சமே பாட்டு, விஜய் ஜேசுதாஸ், சக்திஸ்ரீ கோபாலன் என்று மனம் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்குத் தாவியது. இவ்வாறு தாவுவதால்தான், மனதை குரங்கு என்று அழைக்கின்றனர்.

இத்தகைய மனதை கட்டுக்குள் வைத்திருத்தல் என்பது எளிதன்று. பின்வரும் பாட்டில், ‘பாம்புடன் விளையாடலாம். சிங்கத்தின் மேல் சவாரி செய்யலாம். தண்ணீர் மீது நடக்கலாம். ஆனால், சிந்தையை அடக்கி சும்மா இருத்தல் மிக மிகக் கடினம்’ என்கிறார் தாயுமானவர்.

‘கந்துக மதக்கரியை வசமா நடத்தலாம்
கரடி வெம்புலி வாயையுங்
கட்டலாம் ஒரு சிங்க முதுகின்மேற் கொள்ளலாம்
கட்செவி யெடுத்தாட்டலாம்
வெந்தழலின் இரதம்வைத்து ஐந்து லோகத்தையும்
வேதித்து விற்றுண்ணலாம்
வேறொருவர் காணாமல் உலகத் துலவலாம்
சந்ததமும் இளமையோடிருக்கலாம் மற்றொரு
சரீரத்தி லும்புகுதலாம்
சலமேல் நடக்கலாம் கனல்மேல் இருக்கலாம்
தன்னிகரில் சித்திபெறலாம்
சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற
திறன் அரிது சத்தாகியென்
சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே
தேசோ மயானந்தமே’

- தாயுமானவர்.

இத்தகைய மனதினை கட்டுக்குள் வைத்திருக்க தியானம் பழக வேண்டும். தியானத்தின் மூலம், மனதை கட்டுக்குள் வைத்திருக்கலாம். இதனைப் பற்றி வேதாத்திரி மகரிஷி,

‘சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற சீர் அறியச் செய்த குருவே!
அந்த நிலை தனிலறிவு அசைவற்றிருக்கப் பெரும் ஆனந்தம் பொங்கு தங்கே!
இந்தப்பெரும் உலகமிசை எடுத்த பலபிறவிகளின் இறுதிப் பயன் ஆகிய
சந்ததமும் எனைமறவாத சாந்தவாழ்வளித்தோய் என்
சந்தோஷச் செய்தி இதுவே’
என்கிறார்.

தியானம் பயில்வோம்; மனதைக் கட்டுக்குள் வைத்திருப்போம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com