முதியவர் அல்லது இளையவர் என்ற பாகுபாடின்றி, இன்றைய பரபரப்பான சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் நம் அனைவருக்கும் உள்ள பொதுவானதொரு பிரச்னை தூக்கமின்மை. அதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படலாம். இதற்குத் தீர்வாக படுத்தவுடன் தூக்கம் வர உதவும் ஓர் அருமையான பானம் நட்மெக் மில்க் (Nutmeg Milk).
ஜாதிக்காய் எனக் கூறப்படும் நட்மெக்கைத் துருவி, அதில் ஒரு சிட்டிகை எடுத்து சூடான பாலுடன் சேர்த்து, படுக்கைக்குச் செல்வதற்கு அரை மணி நேரம் முன்பு அருந்தினால் அது உடலை நன்கு தளர்வுறச் செய்து நல்ல தூக்கத்தை வரவழைக்க உதவும். இதனால் மனம் அமைதி பெறும்; உடலுக்கு இரவு முழுவதும் ஓய்வு கிடைக்கும்.
இந்தியர்களின் சமையல் அறையில் 'ஜெய்பால்' என்று அழைக்கப்படும் நட்மெக் மூளையின் செயல்பாடுகளில் பல அதிசயங்கள் புரியக்கூடியது. மனதிலுள்ள கவலைகளை நீக்கி, அமைதியான ஆழ்ந்த உறக்கத்தை வரவழைக்க உதவும் குணம் கொண்டது இது.
படுக்கைக்குச் செல்லும் முன் நட்மெக் மில்க் குடிப்பதால் செரிமானக் கோளாறுகள் நீங்கி, உடல் ஆரோக்கியம் பெறும். மைரிஸ்டிசின் (Myristicin) மற்றும் எலிமிசின் (Elemicin) போன்ற பயோ ஆக்டிவ் கூட்டுப்பொருட்கள் நட்மெக்கில் உள்ளன. மேலும் மாங்கனீஸ், காப்பர், மக்னீசியம், வைட்டமின் B6 போன்ற ஊட்டச் சத்துக்களும் இதில் அதிகம் உள்ளன. இவை 'தூக்கம் - விழிப்பு' என்ற சுழற்சி முறையில் முக்கிய பங்கேற்று சரியான நேரத்துக்கு தூக்கம் - விழிப்பு வரச் செய்ய உதவி புரிகின்றன. இந்தச் சத்துக்கள் மூளையின் நியூரோ டிரான்ஸ்மிட்டர்களின் பகுதியான கபா ரிசெப்டர் (GABA Receptor)களின் செயலை ஊக்குவித்து, உடலை தளர்வுறச் செய்து தூக்கம் வரும் நிலைக்கு இட்டுச் செல்லவும் உதவுகின்றன.
நட்மெக் மில்க் மூளையில் கபா ரிசெப்டர்களின் அளவை அதிகரிக்கச் செய்கிறது. இதனால் மனதிலுள்ள கவலைகள் மற்றும் தூக்கமின்மைக்கான அறிகுறிகள் மறைகின்றன; தரமான தூக்கம் கண்களைத் தழுவவும் செய்கிறது. மனதுக்கு அமைதி தந்து, சுலபமாக தூக்கத்தை வரவழைக்கும் குணம் கொண்டுள்ளதால் நட்மெக் மில்க் பிரபலமடைந்து வருவதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகிறார்கள்.