Asafoetida
Asafoetida

தினமும் சிட்டிகை சேர்த்தால் போதும்... பலன்கள் பல தரும் பலே பெருங்காயம்!

Published on

பெருங்காயம் “ஃபெருலா ஃபொட்டிடா” அல்லது பங்கி என்ற செடியின் வேரிலிருக்கும் ஒரு விதமான பசையிலிருந்து கிடைக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? இது பெர்சியாவை (ஈரான்) பிறப்பிடமாகக் கொண்டது. ஈரான், துருக்கி, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் பயிரிடப்படுகிறது. இந்தச் செடியின் வேர் மிக அகலமாக இருக்கும். அழகான மஞ்சள் நிறமுள்ள மலர்களைக் கொண்டது. இச்செடியின் காம்பினுள், கெட்டியான அதிக உவர்ப்பு சுவை மனமுள்ள பால் இருக்கும்.

செடியின் பாலிருந்துதான் பெருங்காயம் கிடைக்கிறது. சிறிய மரம் அளவுக்கு வளர்ந்த உடனே தண்டையும், வேரையும் கீறிவிட்டு, அதில் வடியும் பிசினை எடுத்து பக்குவப்படுத்தி காய வைத்தால், அதுதான் பெருங்காயம்.

இதில், பால் பெருங்காயம், சிவப்பு பெருங்காயம் என்று இரண்டு வகை இருக்கிறது.

காரமும், கசப்பும் கொண்ட பெருங்காயத்தின் சுவை நரம்புகளைத் தூண்டி, சுவையை உண்டாக்கும் குணம் கொண்டது. இது, எளிதில் ஜீரணமாகி, மற்ற உணவுகளையும் சீக்கிரத்தில் செரிக்க வைக்கும். பெருங்காயத்தை நாம் பெரும்பாலும் சமையலில் நறுமணம் ஊட்டக்கூடிய பொருளாகவே பயன்படுத்துகிறோம். ஆனால் இதற்கென்று பல மருத்துவப் பயன்கள் உண்டு.

பெருங்காயம், சூட்டைத் தரக்கூடியது. உணவை செரிக்க வைக்கிறது, உணவின் சுவையை அதிகப்படுத்துகிறது. இது வயிறு உப்புச சிகிச்சைக்கு பயன்படுகிறது. குடற் புழுவகற்றியாகவும் பயன்படுகிறது.

பெருங்காயத்தில் புரதச்சத்து அதிகம் காணப்படுகிறது. மீன் போன்ற அசைவ உணவுகளைச் சாப்பிட்டு புரதத்தைப் பெற முடியாத சைவ உணவுப் பழக்கம் உள்ளவர்கள், தினசரி சமையலில் பெருங்காயத்தைச் சேர்த்துக் கொள்ளலாம்.

இதையும் படியுங்கள்:
பெருங்காயத்தின் 10 பெரும் பலன்கள்!
Asafoetida

நரம்புக் கோளாறுகளுக்கு பெருங்காயம் நல்ல மருந்தாக பயன்படுகிறது. சமையலில் பெருங்காயத்தை அதிகம் சேர்த்துக் கொண்டால் அது நரம்புகளையும், மூளையையும் இயல்பாக்கி பாதிப்புகளைத் தடுக்கும்.

பெருங்காயப் பொடியை வெறுமனே வாணலியில் போட்டு வறுத்து, வலி எடுக்கும் சொத்தைப் பல்குழியில் வைத்து கடித்துக் கொண்டால், பல்வலி நொடியில் பறந்துவிடும்.

ஆஸ்துமா தொந்தரவால் மூச்சுவிட முடியாமல் அவதிப்படுகிறவர்கள், பெருங்காயப் பொடியை அனலில் போட்டு, அந்தப் புகையை சுவாசித்தால் மூச்சுத் திணறல் தீரும். பெருங்காயம் வாயுக்கோளாறுக்கு மிகவும் பயன்படுகிறது. நரம்பு சம்பந்தமான தலைவலி மற்றும் நோய்களுக்கும் ஹிஸ்டீரியா மற்றும் இருமலுக்கும் மிகவும் பயன்படுகிறது.

பெருங்காயத்தில் உள்ள வேதிப்பொருள்கள் சுவாசமண்டலம் வழியாக மார்புசளியினை இருமல் மூலம் வெளியேற்றுகிறது. பெருங்காயம் மார்புவலி, மூச்சுக்குழல் அழற்சி, கக்குவான் ஆகியவற்றினை போக்க உதவுகிறது. மேலும் உயர் ரத்த அழுத்தத்தினை குறைத்து ரத்தத்தின் அடர்த்தியினை குறைக்கிறது.

தாய்லாந்து மற்றும் இந்தியா ஆகியவற்றில் இது செரிமான ஊக்கியாகப் பயன்படுகின்றது. பெருங்காயம் நாள்பட்ட மூச்சுக் குழாய் அழற்சி மற்றும் கக்குவானிருமல் ஆகியவற்றுக்கான சிகிச்சையில் பயன்படுத்துகிறது. பாரம்பரிய மருந்துகளில் நுண்ணுயிர்கொல்லியாக பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றது. அதே போன்று வாயுத் தொல்லையைக் குறைக்கின்றது.

'பலே பெருங்காயம்' என்று சொல்வதற்கான காரணம் இப்போது புரிகிறது அல்லவா?

logo
Kalki Online
kalkionline.com