சமீப காலமாக நமது உணவு முறையில் இயற்கை வழி பாரம்பரிய அரிசி வகைகளின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு பெருகி வருகிறது. பாஸ்ட் புட் கடைகளை விட, பாரம்பரிய முறையில் தயாரிக்கப்பட்ட நஞ்சில்லா உணவுகளைத் தரும் உணவகங்களுக்கும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.
மாப்பிள்ளை சம்பா, யானைக்கவுனி, கருப்பு கவுனி, பூங்கார், காட்டுயாணம், மூங்கில், கிச்சிலி சம்பா, தூயமல்லி போன்ற எண்ணற்ற அரிசி வகைகள் கேள்விப்பட்டு இருப்போம். இந்த வரிசையில் வரும் தமிழ் பாரம்பரிய அரிசி வகைகளில் ஒன்றுதான் கைவரச் சம்பா அரிசி. இதை கைவரிச் சம்பா என்றும் கூறுவர். இந்த தானியமணியின் மேல்புறத்தில் காணப்படும் வரிகளை மனித கைகளில் உள்ள ரேகை வரிகளுடன் ஒப்பிட்டும், பனை மரத்தின் கழித்துண்டுகளிலுள்ள நாராலான கோடுகளுடன் ஒப்பிட்டும், ‘கைவரிச் சம்பா’ என்ற பெயர் சூட்டப்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன. சுமார் 150 செ.மீ. உயரத்திற்கு வளரும் தன்மையுடைய இந்த நெற்பயிர், களிமண் நிலங்களில் பயிரிட ஏற்றதாக உள்ளது.
இந்த அரிசியில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர். இந்த அரிசியில் உள்ள அதிகமான செலினியம் குடல் பிரச்னைகளைத் தீர்க்கவும், குடலில் உருவாகும் புற்றுநோயைத் தடுக்கவும் உதவுகிறது. மேலும், இது இதய செயல்பாட்டை பலப்படுத்தும் செயலுக்கும் துணை புரிகிறது.
நாம் உண்ணும் உணவில் உள்ள சர்க்கரை இரத்தத்தில் கரையும் சதவீதத்தைக் குறிக்கும் கிளைசெமிக் எனப்படும் குறியீடு இதில் மிக மிகக் குறைவு. அதேபோல, மாவுச்சத்து குறைவாகவும் நார்ச்சத்துக்கள் அதிகமாகவும் இதில் உள்ளன. இதன் காரணமாக நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும், உடல் பருமனாக இருப்பவர்களுக்கு இதில் உள்ள நார்ச்சத்துகள் காரணமாக உடலின் வளர்சிதை மாற்றம் அதிகரித்து உடல் பருமன் குறையவும் இந்த கைவரச் சம்பா அரிசி சரியான தேர்வு எனலாம்.
ஆகவே, தினசரி உணவில் இந்த கைவரச் சம்பா அரிசியில் தயார் செய்த உணவை எடுத்துக்கொண்டால் வயிற்றுப் பிரச்னை மற்றும் நீரிழிவு பாதிப்புகளிலிருந்து தப்பிக்கலாம். குறிப்பாக, உடல் பருமனிலிருந்து விடுதலை பெற்று ஸ்லிம்மாக மாறலாம்.