உள்ளுறுப்புகளை சுத்தம் செய்யும் கரிசலாங்கண்ணி!

Karisalankanni that cleans the internal organs
Karisalankanni that cleans the internal organs

நாம் சிறுவயதில் இருந்து கரிசலாங்கண்ணி என்றால் தலைமுடி நன்கு வளர்வதற்கு தேய்த்துக் கொள்ளும் ஒரு மூலிகை என்றுதான் நினைத்திருந்தோம். மேலும் கிராமப்புறங்களில் இதை தலைக்கு தேய்த்துக் குளிப்பதை அன்றாடம் காணலாம். ஆனால் கரிசலாங்கண்ணி ஒரு மருத்துவ மூலிகை செடி ஆகும். வெள்ளை, மஞ்சள், நீலம், சிவப்பு என பூக்களின் நிறங்களின் அடிப்படையில் நான்கு வகையான கரிசலாங்கண்ணி செடிகள் இருக்கின்றன. அவைகளால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இப்பதிவில் காண்போம்.

கரிசலாங்கண்ணியை வாரத்துக்கு இரண்டு நாள் சமையல் செய்து சாப்பிட்டாலும், இதன் சாற்றை 100 மில்லி அளவு சாப்பிட்டு வந்தாலும் உடலுக்கு எந்த நோயும் வராமல் நோய் எதிர்ப்பு தன்மை உண்டாகும். கரிசலாங்கண்ணியை எளிய முறைகளில் உபயோகித்தாலே பல நன்மைகளை அடையலாம். இதில் தங்கச்சத்து, இரும்பு சத்து, வைட்டமின்'அ' அதிகம் உள்ளன.

'பொன்னை எறிந்தாலும் பொடிக் கீரையை எறியக் கூடாது' என்பார்கள் நம் முன்னோர்கள் அவ்வளவு சிறப்பு வாய்ந்தது கரிசலாங்கண்ணிக் கீரை. நரம்பு மண்டலத்தில் உள்ள கபால நீரும், தொண்டையில் உள்ள கோழையும், சுவாசப்பையில் உள்ள சளியும், பித்தப்பையில் உள்ள கெட்ட பித்தத்தையும் கரிசலாங்கண்ணி வெளியேற்றும்.

எப்படி என்றால், கபால நீர் வெளியேறுவதால் நரம்பு மண்டலம் சுத்தமாகிறது. வழலை அகற்றப்படுவதால் தொண்டை சுத்தமாகிறது. கபம் வெளியேற்றப்படுவதால் சுவாசப்பை  சீராகிறது. பித்தம் வெளியேறுவதால் கல்லீரலும், பித்தப்பையும் சுத்தமாகிறது. மலம் வெளியேறுவதால் பெருங்குடல் சுத்தம் ஆகிறது. சிறுநீர் பிரிவதால் மூத்திரத்தாரை சுத்தமாகிறது. நரம்பு மண்டலம் சுத்தமானதால் பிட்யூட்டரி சுரப்பி, மூளை நன்றாக இயங்குகிறது. இப்படி உள்ளுறுப்புகளை சுத்தப்படுத்துகிற ஒரே மூலிகை கரிசலாங்கண்ணி தான் என்று சொன்னால் மிகையாகாது.

கரிசலாங்கண்ணியின் பயன்கள்:

  • குழந்தைகளுக்கு இரண்டு சொட்டு கரிசலாங் கண்ணிச்சாறுடன் எட்டு சொட்டு தேன் கலந்து கொடுத்தால் சளித்தொல்லை நீங்கிவிடும்.

  • கல்லீரல் செயல்பாட்டின் குறைவினால் ஏற்படும் ரத்த சோகை நோய்க்கு கரிசலாங்கண்ணி சாற்றை 100 மில்லி அளவு தினமும் சாப்பிட்டு வந்தால் ரத்த சோகை நீங்கிவிடும். ரத்தத்தில் உள்ள அமிலத்தன்மை சீராக செயல்படும்.

இதையும் படியுங்கள்:
நுரையீரலைப் பாதுகாக்கும் சிட்ரஸ் பழங்கள்!
Karisalankanni that cleans the internal organs
  • மஞ்சள் காமாலை முதல் அனைத்து வகையான காமாலை நோய்களுக்கும் மிக முக்கியமானது கரிசலாங்கண்ணி கீரை ஆகும்.

  • கரிசலாங்கண்ணி சூரணத்துடன் ஒரு பாகம் திப்பிலி சூரணம் சேர்த்து காலையும் மாலையும் ஒரு தேக்கரண்டி தேனில் குழைத்து ஒரு மாத காலம் சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமாவின் தொல்லை குறையும்.

  • சிறுநீரகம் பாதிப்படைந்து வெள்ளை, வெட்டை நோய் ஏற்பட்டால் இந்தநோய்க்கு கரிசலாங்கண்ணி தான் முதன்மையான மருந்தாகும். கரிசலாங்கண்ணி இலையை பறித்து சுத்தம் செய்து நன்றாக அரைத்து இரண்டு சுண்டைக்காய் அளவில் எடுத்து பாலில் கலந்து வடிகட்டி காலை, மாலை சாப்பிட வேண்டும். நோய் நீங்கிய பின் ஆறு மாதம் வரை எளிதில் செரிக்கும் உணவு சாப்பிட வேண்டும்.

  • கரிசலாங்கண்ணி, கருவேப்பிலை ஆகியவற்றில் ஒரு கைப்பிடி அளவு எடுத்து நன்றாகக் கழுவி, அதனுடன் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து அதை ஒரு டம்ளர் ஆகும் வரை வற்றவிட்டு வடிகட்டி அதனுடன் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து இரண்டு மாதங்கள் வரை தொடர்ந்து குடித்து வந்தால் ரத்த சோகை நோய் குணமாகும்.

  • கல்லீரல் கெட்டால் செரியாமை, வயிற்று வலி ,குடற்புண், காய்ச்சல், மஞ்சள் காமாலை, மலச்சிக்கல், ரத்தசோகை, ரத்த கொதிப்பு, இருதய நோய் எல்லாம் வருவதற்கு வாய்ப்பு உண்டு. இதற்கு கல்லீரல் சிறப்பாக இருக்க வேண்டும். கல்லீரல் சிறப்பாக இருப்பதற்கு கரிசலாங்கண்ணிக் கீரையை நாம் அவசியம் பயன்படுத்தியே ஆக வேண்டும். 'கரிசலாங்கண்ணிக் கீரையை பயன்படுத்துவோம்; உடலை பண்படுத்துவோம்!'

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com