
தற்போது மருத்துவமனைகளில் சிறுநீரகம் தொடர்பான டயாலிசிஸ் சிகிச்சை பெறுவதற்காக வயது வித்தியாசமின்றி காத்திருக்கும் நிலை உள்ளது. அன்று வெகு சிலர் மட்டுமே உட்பட்டிருந்த நிலையில் இப்போது இது சகஜமாகி விட்டதை கண்டு மருத்துவர்களே எச்சரிக்கை தருகின்றனர். இந்த சிகிச்சை மற்றும் பாதுகாப்பு முறைகள் குறித்து இங்கு காண்போம்.
டயாலிசிஸ் என்பது இயந்திரத்தைப் பயன்படுத்தி இரத்தத்தை வடிகட்டி சுத்திகரிக்க செய்யும் ஒரு சிகிச்சை ஆகும். சிறுநீரகங்களால் இந்த செயல்பாடுகளை போதுமான அளவு செய்ய முடியாதபோது உடலில் இருந்து கழிவுப்பொருட்கள் மற்றும் அதிகப்படியான திரவங்களை அகற்ற உதவுகிறது.
80-90% க்கும் அதிகமான செயல்பாட்டை இழந்துவிடும் இறுதி நிலை சிறுநீரக நோய் (ESRD) உள்ளவர்களுக்கு டயாலிசிஸ் அவசியம் தேவைப்படுகிறது. மேலும் பல்வேறு காரணங்களால் திடீரென செயல்பாட்டை இழக்கும் AKI (Acute Kidney Injury) சிறுநீரகங்கள் உள்ளவர்களுக்கும் டயாலிசிஸ் தற்காலிகமாக தேவைப்படலாம்.
டயாலிசிஸ் வகைகள்:
ஹீமோடயாலிசிஸ் எனப்படுவது உடலுக்கு வெளியே இரத்தத்தை வடிகட்ட ஒரு இயந்திரத்தைப் பயன்படுத்துவதாகும். உடலில் இருந்து எடுக்கப்படும் இரத்தம் ஒரு டயாலிசர் வழியாக அனுப்பப்பட்டு கழிவுப்பொருட்கள் மற்றும் அதிகப்படியான திரவங்களை நீக்குகிறது.
மற்றோரு வகையான பெரிட்டோனியல் டயாலிசிஸ் வயிற்றின் புறணியை (பெரிட்டோனியம்) வடிகட்டியாகப் பயன்படுத்துகிறது. டயாலிசேட் எனப்படும் ஒரு கரைசல் வயிற்று குழிக்குள் செலுத்தப்படுகிறது, மேலும் கழிவுப்பொருட்கள் மற்றும் அதிகப்படியான திரவங்கள் கரைசலில் உறிஞ்சப்பட்டு, பின்னர் வெளியேற்றப்படுகின்றன.
நன்மைகள்:
டயாலிசிஸ் செய்வதால் நோயாளியின் சோர்வு, குமட்டல் மற்றும் மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகளைப் போக்க உதவும்; ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும். ஆபத்து தரும் ESRD அல்லது AKI நோய் உள்ள நபர்களின் ஆயுட்காலத்தை நீட்டிக்க உதவுகிறது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:
ஒருபோதும் சிறுநீரையோ, மலத்தையோ அடக்க முயற்சி செய்யாதீர்கள். தாகம் எடுக்கும் போது தவிர்க்காமல் தண்ணீர் குடிப்பது அவசியம்.
பசி இன்றி உணவை உட்கொள்வது தவறு. குறிப்பாக உணவை உமிழ்நீருடன் நிதானமாக மென்று சாப்பிடுவது நல்லது.
துரித உணவுகள், பாக்கெட்டில் அடைத்த ஸ்நாக்ஸ், கூல்டிரிங்க்ஸ், செயற்கை நிறமூட்டி உபயோகித்த உணவுகள் போன்றவற்றை தவிர்ப்பது அவசியம் .
மரபணு மாற்றம் செய்யப்பட்ட காய்கறி, பழங்கள் வாங்குவதை தவிர்த்து ரசாயனம் கலக்காத இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்ட உணவுகளை மட்டுமே உண்ணப் பழகுவது ஆரோக்கியம் தரும்.
வலி நிவாரணி மாத்திரைகளை தவிர்த்தல், உடல் கழிவுகளை சரியான முறையில் வெளியேற்றுதல், இவைகளுடன் டென்ஷன் இல்லாத சரிவிகித உணவு எடுப்பதன் மூலம் இது போன்ற பாதிப்புகளை தவிர்க்க முடியும்.
டயாலிசிஸில் பணம் மட்டுமல்ல, அமர்வுகளுக்கான (சிட்டிங்க்ஸ்) நேரம் , கடுமையான உணவுக்கட்டுப்பாடு மற்றும் உடல்நிலை மாற்றத்தை எதிர்கொள்ள மனவலிமை மற்றும் குடும்பத்தினர் ஆதரவு போன்ற பலவித சவால்கள் உள்ளன.
ஆனால் டயாலிசிஸ் சிகிச்சை எடுப்பவர்கள் வழக்கமான உடல் செயல்பாடுகளை மேற்கொள்வதால் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் மேம்படுத்த உதவும் என்கின்றனர் மருத்துவர்கள்.
எது எப்படி இருப்பினும் வந்தபின் வருந்தாமல் வருமுன், உணவு மற்றும் வாழ்க்கை முறைகளில் கவனம் செலுத்தினால் இது போன்ற வேதனை சிகிச்சைகளைத் தவிர்க்கலாம். மீறி பிரச்னை என்று வந்து விட்டால் உடன் மருத்துவ உதவி நாடுவது அவசியம்.