மருத்துவமனைகளில் ICU பிரிவைப் பற்றி நம்மில் பலருக்குத் தெரியும். இதைத்தவிர இன்னும் பல உயிர் காக்கும் பிரிவுகள் அமைந்துள்ளன. அவற்றைப் பற்றி இப்பதிவில் நாம் தெரிந்து கொள்ளுவோம்.
மருத்துவமனைகளில் எக்ஸ்ரே, ஈசிஜி, ஸ்கேன் முதலானவை எடுக்கும் பிரிவு, பிசியோதெரபி பிரிவு, பார்மசி எனும் மருந்தகப் பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு, புறநோயாளிகள் பிரிவு, இரத்த பரிசோதனைப் பிரிவு என பல்வேறு பிரிவுகள் காணப்படும். மருத்துவமனைகளில் அமைந்துள்ள ஒரு முக்கியமான பிரிவு ஐ.சி.யு. Intensive Care Unit (ICU) என அழைக்கப்படும் தீவிர சிகிக்சைப் பிரிவு. உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு அழைத்து வரப்படும் நோயாளிகளை அனுமதித்து மருத்துவர்கள் மற்றும் பிற மருத்துவப் பணியாளர்கள் இணைந்து ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகளைக் காப்பாற்ற உதவும் ஒரு முக்கியப் பிரிவே ஐசியு ஆகும். இப்பிரிவில் தீவிர சிகிச்சை சிறப்பு மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் தவிர தொற்று பரவக்கூடும் என்ற அபாயத்தின் காரணமாக யாரையும் அனுமதிப்பதில்லை. உலகின் முதல் தீவிர சிகிச்சைப் பிரிவு 1953 ஆம் ஆண்டில் கோபன்ஹேகனில் உருவாக்கப்பட்டது. இந்தியாவின் முதல் ICU பிரிவானது தில்லியில் இர்வின் மருத்துவமனையில் பேராசிரியர் N.P.சிங்கால் என்பவரால் தோற்றுவிக்கப்பட்டது.
மருத்துவமனைகளில் ICU பிரிவைத் தவிர ICCU என்றொரு தீவிர சிகிச்சைப் பிரிவும் உள்ளது. தீவிர கரோனரி சிகிச்சைப் பிரிவு (Intensive Coronary Care Unit - ICCU ) என்பதை இது குறிக்கிறது. அதாவது தீவிர இருதய சிகிச்சைப் பிரிவு. மாரடைப்பு, இதயத் துடிப்பு குறைபாடு மற்றும் தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் சிகிச்சை தேவைப்படும் பல்வேறு இதய நோயாளிகளை கூடுதல் கவனம் செலுத்தி பராமரிப்பதில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவக்குழுவினர் இப்பிரிவில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் உயிரைக் காப்பார்கள்.
மருத்துவமனைகளில் ICU, ICCU தவிர NICU என்ற சிறப்பு சிகிச்சை வார்டும் உள்ளது. Neonatal Intensive Care Unit (NICU) என்பதன் சுருக்கமே என்.ஐ.சி.யு. ஆகும். குழந்தை பிறந்தது முதல் 28 நாட்கள் வரை அக்குழந்தை 'பச்சிளம் குழந்தை' என்று அழைக்கப்படுகிறது. புதிதாகப் பிறந்த குழந்தைகளின் தீவிர சிகிச்சைப் பிரிவு 'நியோநேட்டல் தீவிர சிகிச்சைப் பிரிவு' (NICU) என்று அழைக்கப்படுகிறது. நியோ என்றால் 'புதிய' மற்றும் நேட்டல் என்றால் 'பிறப்பு'. இந்த இரண்டு சொற்களும் கலந்து உருவானதே நியோனேட்டல் என்ற சொல் ஆகும். குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகள் மற்றும் மிகக் குறைந்த எடையோடு பிறக்கும் குழந்தைகள் முதலானோர் இந்த தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து பராமரிக்கப்படுவர்.
உலகின் முதல் நியோநேட்டல் தீவிர சிகிச்சைப் பிரிவு லூயிஸ் க்ளக் என்பவரால் அமெரிக்காவில் யேல் நியூ ஹேவன் மருத்துவமனையில் 1960 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. பச்சிளம் குழந்தை சிறப்பு மருத்துவர் நியோநேட்டாலஜிஸ்ட் (Neonatologist) என்று அழைக்கப்படுகிறார். என்.ஐ.சி.யு. பிரிவில் பச்சிளம் குழந்தை சிறப்பு மருத்துவர், செவிலியர்கள், சுவாச நிபுணர்கள் முதலானோர் பணியாற்றி பச்சிளம் குழந்தைக்குத் தேவையான தீவிர சிகிச்சைகளை மேற்கொள்ளுவார்கள்.
மருத்துவமனைகளில் PICU என்றொரு வார்டும் பராமரிக்கப்படுகிறது. Paediatric Intensive Care Unit (ICU) அதாவது குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவு. இப்பிரிவில் தீவிர சிகிச்சை தேவைப்படும் குழந்தைகள் அனுமதிக்கப்பட்டு உரிய சிகிச்சைகளை அளிக்கப்பட்டு காப்பாற்றப்படுகின்றனர்.