PCOD பற்றி அறிவோமா?

PCOD பற்றி அறிவோமா?
Published on

PCOD என்றால் என்ன?

* ​P.C.O.D என்பது Polycystic ovarian disease என்பதன் சுருக்கம் ஆகும். சினைப்பையில் (Ovary) ஏற்படும் கட்டிகளால் உண்டாகும் நோய் இது ஆகும். இனப்பெருக்க வயதில் உள்ள பெண்களில் பத்திலிருந்து பதினைந்து சதவிகிதம் பேர் இந்நோயால் பாதிக்கப்படுகிறார்கள்.

* PCOD அறிகுறிகள் என்ன?

ந்த நோயால் பாதிக்கப்படும் பெண்ணின் உடல் எப்போதும்போல் இல்லாமல் சில மாற்றங்கள் ஏற்படும். இதை அவளால் உணர முடியும். மாதவிலக்குச் சுழற்சி சீராக இருக்காது. மிகவும் அதிக இடைவெளியில் இவை வரலாம். மிக அதிகமான ரத்தப்போக்கு அப்போது இருக்கலாம்.  சில சமயம் அடிக்கடி கூட மாதவிலக்கு உண்டாகலாம். உடல் எடை அப்போது அதிகரிக்கும். Body Mass Index என்பது பொதுவாக 25க்குள் இருக்கும்.  ஆனால் PCOD நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது 25ஐயைவிட அதிகமாக இருக்கும். 

பெண்களுக்குப் பொதுவாக இடுப்புக்குக் கீழேதான் பருமனாக இருக்கும். இதை அத்திப்பழ வடிவம் என்பார்கள். ஆனால் PCODயினால் பாதிக்கப்பட்ட பெண் களுக்கு வயிற்றின் மேற்புறம் அதிகப் பருமனாக இருக்கும். இந்த விதத்தில் எடை உள்ளவர்களுக்கு, அந்த எடையைக் குறைப்பது என்பது மேலும் கஷ்டம்.  தவிர ரோமங்கள் அங்கங்கே தோன்றும்.  இலேசான மீசை, தாடி, கிருதா போன்றெல்லாம் தோற்றம் அளிக்கலாம். இதனால் கருத்தரிப்பதில் சிக்கல்கள் உண்டாகலாம்.

* PCOD எதனால் ஏற்படுகிறது?

டலின் ஹார்மோன் சுரப்பிகளில் பாதிப்பு உண்டாகும்போது இப்படி நேரும். ஆண்ட்ரோஜன் (androgen) என்பது ஆண் தன்மை கொண்ட ஹார்மோன். இது பெண்களிடமும் ஓரளவுக்கு இருக்கும்.  ஆனால் PCODயினால் பாதிக்கப்பட்ட பெண்களின் உடலில் இந்த ஹார்மோன் அதிக அளவில் காணப்படும். கர்பப் பையில் முட்டைகள் வளர்வதை இந்த ஹார்மோன் தடை செய்யும். (முட்டைகள் வளர்ந்து வெளிவந்தால்தான் அவை விந்துவுடன் இணைந்து கரு உருவாகும்).  சிகிச்சை அளிக்கப்பட்டாலொழிய முட்டைகள் கருத்தரிக்கத் தேவையான அளவுக்கு வளராது.  இதன் காரணமாகவும் மாதவிலக்குச் சீராக இல்லாமல் போகும். 

* PCOD - பின் விளைவுகள் என்ன?

PCODயால் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் இன்சுலின் அளவு அதிகமாகக் காணப்படும்.  உற்பத்தியாகும் இன்சுலினை திசுக்கள் போதிய அளவு உறிஞ்சிக் கொள்ளாததால், இன்சுலின் ரத்தத்திலேயே இருக்கும்.  இதனால் நீரிழிவு நோய்கூட உண்டாகலாம்.  கர்ப்பம் அடைவது இதனால் பாதிக்கப்படுகிறது.  நாளடைவில் ரத்தக் கொதிப்பும் அதிகமாகும். சிகிச்சை அளிக்காமல் விட்டால், கர்பப்பையின் உட்படலம் பாதிக்கப்பட்டு கர்பப்பைப் புற்றுநோய் தோன்ற வாய்ப்புண்டு.

 * PCOD - சிகிச்சைகள் உண்டா?

தினசரி வாழ்க்கை முறையில் சில மாறுதல்களை செய்துகொள்ள வேண்டியிருக்கும்.  நாளின் பெரும்பாலான பகுதி ஒரே இடத்தில் உட்கார்ந்தபடியே வேலை என்றால், அதை முடிந்த வரை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும். உணவுப் பழக்கத்திலும் கவனம் தேவை. அதற்காக ஒரேயடியாக எடையைக் குறைப்பதும் விரும்பத்தக்கதல்ல. துரித உணவுகள், ஜங்க் உணவுகள் போன்றவற்றை கணிசமாகக் குறைத்துக்கொண்டாலே, உடல் எடை பெரும்பாலும் குறைந்து விடும்.  மாறாக அதிரடியாக அவர்களின் உணவுப் பழக்கத்தை மாற்றி அமைக்கச் சொன்னால், மன இறுக்கம் ஏற்படலாம்.  மன இறுக்கம் ஏற்பட்டால், உடலில்  உருவாகும் ஸ்டீராய்டுகள் அதிகரிக்கும். இவை அதிகரித்தால் உடலின் எடை இன்னும் அதிகரிக்கும். எனவே கவனத்துடன்தான் இந்த மாறுதல்களைக் கையாள வேண்டும்.

PCOD - நோய்க்குத் தீர்வாக வாழ்க்கைமுறை மாறுதல்கள் மட்டுமே போதுமா?

வாழ்க்கை முறை மாற்றங்களால் விரும்பும் விளைவுகள் உண்டாகவில்லை என்றால் மருந்துகள் உட்கொள்ள வேண்டும்.  தொடக்கத்தில் மெட்ஃபார்மின் போன்ற மாத்திரைகளின் மூலம் உடலில் உள்ள அதிகப்படி சர்க்கரை அளவைக் குறைக்க வேண்டும். பிறகு ஹார்மோன்களை சீரமைக்க வேண்டும்.  இதற்கான மருந்துகளை உட்கொள்ளும்போது உடலில் உள்ள ஆண் ஹார்மோன்கள் குறையத் தொடங்கும்.  மாதவிலக்கு சுழற்சி சீராகும். பொதுவாக மூன்றிலிருந்து  ஆறு  மாதங்களுக்குள் நார்மலாகிவிட வாய்ப்பு உண்டு.

PCOD சிகிச்சைகளின் மூலம் மாதவிலக்கு சுழற்சி போன்றவை சரியாகிவிட்டால்,  திருமணத்துக்குப் பிறகு கருத்தரிக்கும் வாய்ப்பு கெடாது இல்லையா?

மிகப் பெரும்பாலானவர்களுக்குக் கெடாது. அவர்கள் (முக்கால் வாசி பேர்) கருத்தரித்துவிடுகிறார்கள். வெகு நாட்களாக இந்த நோய் இருந்து அதற்குச் சிகிச்சை எடுக்காமல் இருந்துவிட்டு, திருமணத்துக்குப்பின் கருத்தரிக்கவில்லையே என்று வந்தால், சிகிச்சையை தொடக்கத்திலிருந்தே தொடங்க வேண்டி இருக்கும். எனவே, கருத்தரிக்கும் நிலை அந்தப் பெண்ணுக்கு உண்டாக, சற்று அதிக காலம் தேவைப்படும்.  மருத்துவரின் ஆலோசனை மிக அவசியமானது.

(மங்கையர் மலர்  இதழுக்காக (2014) டாக்டர் மாலா ராஜ் அளித்த பேட்டியிலிருந்து தொகுப்பு)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com