லஜ்ஜை கெட்ட கீரையில் இத்தனை நன்மைகளா?

லஜ்ஜை கெட்ட கீரை
லஜ்ஜை கெட்ட கீரை
Published on

ஞ்சுகொண்டான் கீரை, நச்சுக்கொட்டை கீரை, நஞ்சுண்டான் கீரை, லஜ்ஜை கெட்ட கீரை என பல பெயர்களால் அழைக்கப்படும் இந்தக் கீரையை அழகுக்காகவே பலரும் வீடுகளில் வளர்க்கிறார்கள். மிகக் குறைந்த பராமரிப்பில், எந்தத் தட்ப வெப்ப நிலையையும் தாங்கி இது வளரும் என்பதும் பலரும் இதை வளர்ப்பதற்கு ஒரு காரணம். முருங்கை மரம் போன்றே இதையும் ஒரு சிறிய கிளை (போத்து) கொண்டோ அல்லது கொட்டை மூலமாக கன்றாக வளர்ந்த பின்போ நடலாம்.

இலைகள் பெரிதாக உள்ள இது, சிறு மரமாக வளர்கிறது. வீட்டின் முன்னால் இவற்றை  வளர்த்தால், அழகிய வெளிர் பச்சை நிற இலைகளுடன் வீட்டிற்கு தனி அழகைத் தரும் என்பதால் நகரங்களிலும் இதை அலங்கார மரமாக வளர்க்கிறார்கள். ஆனால், இந்த மரத்தை வீட்டில் வைத்திருக்கும் பலரும் இதன் மருத்துவ குணம் அறிவதில்லை. இதன் கீரையை சமையலில் சேர்த்துக் கொள்ளலாம் என்பதே இவர்களுக்குத் தெரியாது. ஆம், மற்ற உணவுக் கீரைகள் போல் இதுவும் உண்ணத் தகுந்தது மட்டுமல்ல, இதில் ஏராளமான மருத்துவ நலன்களும் அடங்கியுள்ளன.

இந்தக் கீரையில் வைட்டமின் A, C சத்துகளுடன் இரும்புச்சத்து, தாதுக்கள் ஆகியவையும் அடங்கி உள்ளதால் இது மூட்டு வலி பாதிப்புக்கு நிவாரணம் ஆகிறது. உடம்பிலுள்ள கெட்ட கிருமிகளை அகற்றி விஷத்தை முறிக்கும் திறன் இந்தக் கீரைக்கு உள்ளதால்தான் இந்தக் கீரைக்கு, ‘நஞ்சுண்டான் கீரை’ என்று பெயர் வந்ததாகக் குறிப்பிடுகிறார்கள்.

இதையும் படியுங்கள்:
சிவபெருமானை கல் எறிந்து வழிபட்டு அருள் பெற்ற நாயனார்!
லஜ்ஜை கெட்ட கீரை

உடலில் உள்ள அசுத்த நீரை வெளியேற்றும் ஆற்றலுடன் இரத்தத்தில் உள்ள உப்பின் அளவை சீராகவும் வைக்கவும் இது உதவுகிறது. நுரையீரல் தொற்று மற்றும் பாதிப்புகள் விலகி, சளி பிரச்னைகளையும் நீக்கிவிடும் திறன் இந்தக் கீரைக்கு உண்டு. தேங்கும் சிறுநீர் நன்றாகப் பிரிந்து அதனால் உடலில் ஏற்படும் வீக்கங்களும் குறையும். குறிப்பாக, ஆண்களுக்கு வலிமை தரக்கூடிய கீரையாக இது நம்பப்படுவதால் இதனை, ‘இயற்கை வயாக்ரா’ என்றும் சொல்வார்கள். இதனை லஜ்ஜை கீரை என்று சொல்வதற்குக் காரணம், ‘லஜ்ஜை’ என்றால் வெட்கம். நீர் பற்றாக்குறை காரணமாக அருகில் உள்ள பல மரங்கள் வாடி காட்சி தரும் நிலையில், இந்த மரம் மட்டும் அப்பொழுதுதான் மழை பெய்து துளிர்த்தது போல பச்சை பசேலென எல்லா காலங்களிலும் காட்சி தரும். இப்படி அனைத்துக் காலங்களிலும் தன்னை பசுமையாகக் காட்டிக்கொள்வதனால், லஜ்ஜை (வெட்கம்) கெட்ட தனமாக எனப் பொருள்படும்படி இம்மரத்துக்கு இப்பெயர் வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்தக் கீரையை சுத்தம் செய்து, முக்கியமாக நடுக்காம்புகளை நீக்கி, பொடியாக நறுக்கி தக்காளி, சின்ன வெங்காயம், கொஞ்சம் மிளகு, சீரகம், சிறிது உப்பு சேர்த்து வேகவைத்து அப்படியே சூப்பாகக் குடிக்கலாம். அல்லது  சாதாரண கீரைகளைப் போலவே இதிலும் பொரியல், துவையல், கூட்டு, சாம்பார் வைத்து சாப்பிடலாம். மூட்டு வலிக்கு லட்சக்கணக்கில் செலவு செய்தாலும் நிவாரணம் இல்லை எனப் புலம்புபவர்கள், இனி எங்கேனும் இந்த இலைகளைப் பார்த்தால் பறித்து வந்து பயன்படுத்திப் பாருங்கள். நிச்சயம் மூட்டு வலி குறையும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com