‘லெமன் க்ராஸ்’ என்பது ஒரு வகை புல் இனத்தைச் சார்ந்த மூலிகை தாவரமாகும். இது கூந்தல் மற்றும் சரும அழகை மேம்படுத்துவது மட்டுமின்றி, உடல் நலம் சார்ந்த பல பிரச்னைகளைத் தீர்த்து ஆரோக்கியத்தையும் அளிக்கிறது.
லெமன் க்ராஸ் டீயின் ஆரோக்கிய நன்மைகள்:
ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது: தினமும் எலுமிச்சை டீ குடிப்பதால், உடலில் சிவப்பு இரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று ஆராய்ச்சி உறுதிப்படுத்துகிறது. இதனால் இரத்தசோகை குணமாகிறது.
கொலஸ்ட்ரால், இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது: லெமன் கிராஸில் உள்ள அதிக அளவு பொட்டாசியம் உயர் இரத்த அழுத்தத்தையும், கொழுப்பையும் கட்டுக்குள் வைக்கிறது. இதனால் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் மற்றும் அதீத கெட்ட கொலஸ்ட்ரால் பிரச்னைகள் உள்ளவர்கள் பயனடைகிறார்கள். அவர்களை இதய நோய்களில் இருந்தும் இந்தத் தேநீர் காக்கிறது. மேலும் கல்லீரலின் சுத்திகரிப்புக்கும் உதவுகிறது.
சிறந்த சிறுநீரக செயல்பாடு: லெமன் கிராஸ் டீ குடிப்பது உடலில் டையூரிடிக் விளைவுகளை ஏற்படுத்தும். அதாவது, சிறுநீரகங்கள் வழக்கத்தை விட அதிக சிறுநீரை வெளியிடத் தூண்டுகிறது. இதனால் உடலில் உள்ள தேவையில்லாத உப்புகளும், கழிவுகளும் வெளியேறுகின்றன.
புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கிறது: எலுமிச்சையில் உள்ள சிட்ரஸ் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கும் ஆற்றல் கொண்டது. கீமோதெரபி மற்றும் கதிர்வீச்சின்போது லெமன் கிராஸ் டீ ஒரு துணை சிகிச்சையாக பயன்படுத்தப்படுகிறது.
எடைக் குறைப்பிற்கு உதவுகிறது: லெமன் கிராஸ் டீயில் குறைவான கலோரிகள் உள்ளது. ஆகையால், உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தினமும் லெமன் கிராஸ் டீ பருகலாம். இது பசியைக் குறைத்து வயிறு நிறைந்த உணர்வைத் தருவதால் அதிகமாக சாப்பிடுவதை தடுக்கிறது. இதில் உள்ள பாலிஃபீனால்கள் கலோரிகள் மற்றும் கெட்ட கொழுப்பைக் கரைக்கவும், உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது.
அழகைக் கூட்டும் லெமன் க்ராஸ் டீ: லெமன் கிராஸில் கூந்தல் மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமான வைட்டமின் A மற்றும் C நிறைந்துள்ளன. இவை கூந்தலின் வேர்க்கால்களை பலப்படுத்துகின்றன. இதனுடன் சருமத்தை சுத்தமாகவும் புத்துணர்ச்சியாகவும் வைத்துக்கொள்ள உதவுகின்றன. லெமன் கிராஸ் டீ உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதன் மூலம் முகப்பருக்கள் போன்ற சருமப் பிரச்னைகளை தடுக்கின்றன.
இதில் ஆன்டி ஆக்சிடென்ட்டுகள் நிறைந்துள்ளதால் உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றுகிறது. இதனால் முகமும் உடலும் பளபளப்பாகத் திகழ்கிறது.
லெமன் கிராஸ் டீ எப்படித் தயாரிப்பது?
நன்கு கொதிக்க வைக்கப்பட்ட ஒரு தம்ளர் வெந்நீரில் நறுக்கிய லெமன் கிராஸ் இலைகள் இரண்டு டீஸ்பூன்கள் போட்டு மூடி வைக்கவும். ஐந்து நிமிடம் கழித்து, வடிகட்டி பருகவும்.
நர்சரிகளில் கிடைக்கும் லெமன் கிராஸ் தாவரத்தை வீட்டில் தொட்டியில் கூட வைத்து வளர்த்துப் பயன் பெறலாம்.