ஆபத்துகளில் உயிர் காக்கும் முதலுதவி!

ஆபத்துகளில் உயிர் காக்கும் முதலுதவி!
Published on

ப்போதும் அனைத்தும் நன்மையாகவே நடைபெறும் என்பது உறுதியல்ல. குழந்தைகள் சைக்கிள் கற்றுக்கொள்ளும்போது சிலர் சரியான முறையில் கற்றுக்கொள்வார்கள். சிலர் எதிர்பாராதவிதமாக தடுக்கி கீழே விழுந்து எலும்பு முறிவு முதல் ரத்தக் காயம் வரை பாதிப்புகளை அடைவதுண்டு. இது ஒரு உதாரணம்தான். இதுபோல் நாம் சற்றும் எதிர்பாராமல் நிகழும் தீ விபத்துகள், வாகன விபத்துகள், இயற்கை சீற்றங்கள் என எத்தனையோ முறைகளில் உடல் பாதிப்புகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

இதுபோன்ற தருணங்களில் பாதிக்கப்பட்டவருக்கு மருத்துவமனை செல்லும் முன் தரும் முதல் சிகிச்சையையே, ‘முதலுதவி’ என்று சொல்கிறோம். முதலுதவி சிகிச்சையினால் பாதிப்பு மேலும் அதிகமாகாமல் தடுக்க முடியும். குறிப்பாக, போர்க்காலங்களில் இந்த முதலுதவியினால் பெரும்பாலானவர்கள் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளதை அறிவோம்.

உயிர்க்காக்க உதவும் இந்த சிகிச்சைக்கான விழிப்புணர்வு பெருக, ‘உலக முதலுதவி தினம்’ செஞ்சிலுவைச் சங்கத்தால் 2000ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டு ஆண்டுதோறும் செப்டம்பர் இரண்டாவது சனிக்கிழமையன்று கொண்டாடப்பட்டு வருகிறது. காயமடைந்த அல்லது நோய்வாய்ப்பட்ட நபர்களின் உயிரைக் காப்பாற்றத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதே முதலுதவி ஆகும்.

முன்னதாக, ஜெனீவாவை சேர்ந்த இளம் வணிகரான ஹென்றி டுனன்ட் என்பவர் 1859ம் ஆண்டு ஜூன் 24ம் தேதி அன்று சோல்பெரினோ போரின்போது பயங்கரமான துயரத்தையும் வேதனையையும் அனுபவித்தார். அந்தப் போரில் பலர் படுகாயமடைந்ததை பார்த்த அவர், நோயாளிகளுக்குத் தேவையான மருத்துவ உபகரணங்களையும் பொருட்களையும் வாங்கியதோடு, தற்காலிக மருத்துவமனைகளைக் கட்டவும் உதவினார். பின்னர் 1863ம் ஆண்டில், அவர் எழுதிய ‘எ மெமரி ஆஃப் சோல்பெரினோ’ என்ற புத்தகம்தான் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் (IFRC) உருவாகக் காரணமாக இருந்தது.

உலக அளவில் இந்த விழிப்புணர்வு பெருகக் காரணமாக இருந்த செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் இதைப்போன்ற சேவை அமைப்புகள் இதற்கான பயிற்சிகளை கற்றுத் தருகின்றன. இந்தப் பயிற்சிகள் முதலுதவி கல்வியின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி அவசர காலத்தில் உயிர்களைக் காப்பாற்றத் தேவையான தன்னம்பிகையையும் தைரியத்தையும் தருவதோடு, பாதுகாப்பான உலகத்துக்கு பங்களிக்கும் வகையில் அவசர நிலைக்குத் தயார் நிலையை ஊக்குவிக்கிறது.

சாதாரணமான உடல் பாதிப்பு காயங்களுக்கு பேன்டேஜ் போடுவது, இரத்தப் போக்கைக் கட்டுப்படுத்துவது போன்ற அடிப்படை முதலுதவிகளை நம் அனுபவத்தினாலேயே பெறலாம். ஆனால், பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடும் ஒருவரின் உயிரைக் காக்க உதவும் முதலுதவிக்கு தகுந்த பயிற்சி தேவை. உதாரணமாக இருதய பாதிப்பினால் துடிக்கிற நபருக்கு இதய இயக்க மீட்பு (CPR) பயிற்சி பெற்றிருந்தால் மட்டுமே முதலுதவி செய்ய வேண்டும். பயிற்சியின்றி தரப்படும் முதலுதவிகளால் நிலைமை மேலும் மோசமாகி விடும் அபாயமுண்டு என்பதை கவனத்தில் கொள்வது அவசியம்.

உலக அளவில் உயிரிழப்புகளை அதிகம் உண்டாக்குவது சாலை விபத்துக்களே. சாலை விபத்துகளில் அந்த விபத்து நிகழ்ந்த சில நிமிடங்களில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லாமல் கவனிப்பாரற்று இறப்பவர்களே அதிகம். ஆனாலும், இதுபோன்ற விபத்துகளில் அடிபட்டவருக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்படும்போது குறிப்பிடத்தக்க அளவில் உயிரிழப்பைத் தடுக்க முடியும்.

முதலில் மருத்துவம் செய்யத் தேவையான வசதிகளை உடைய முதலுதவிப் பெட்டி அனைவர் வீட்டிலும் இருக்க வேண்டியது அவசியம். திடீரென்று ஏற்படும் தீக்காயங்கள் மற்றும் வெட்டுக்கள் போன்ற பொதுவான காயங்களுக்கு சிகிச்சை அளிக்கத் தெரிந்திருக்க வேண்டும். சிறு தீக்காயங்களுக்கு மட்டுமே கிரீம் போன்றவற்றைப் பயன்படுத்த வேண்டும். முக்கிமான விஷயம், வீட்டில் எப்பொழுதும், எந்ரேமும் மருத்துவர்களின் போன் நம்பரும், முகவரியும் அவசரத்துக்கு அனைவரும் பார்க்கும்படி ஒட்டி வைத்திருக்க வேண்டும். இவையெல்லாம் சில உதாரணங்கள் மட்டுமே. முதலுதவி குறித்த பயிற்சியை ஒவ்வொருவரும் தெரிந்து விழிப்புணர்வுடன் இருப்பதே என்றும் நன்மை தரும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com