குறைவான கலோரிகள் அளவைக்கொண்டு நிறைந்த ஊட்டச் சத்துக்கள் தரக்கூடிய ஐந்து வகை உணவுப் பொருள்களைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
நியாசின், ரிபோஃபிளவின், பான்டோதெனிக் அமிலம் மற்றும் பயோடின் அடங்கிய வைட்டமின் B, செலீனியம், காப்பர் மற்றும் பொட்டாசியம் போன்ற கனிமச் சத்துக்களுடன் மேலும் பல ஊட்டச் சத்துக்கள் நிறைந்தது மஷ்ரூம். இதில் கலோரி அளவு குறைந்து, நார்ச் சத்துக்கள் அதிகளவில் உள்ளன. இதனால் ஜீரணம் நல்ல முறையில் நடைபெறும். எடை அதிகரிப்பில்லாமல் சமநிலையில் பராமரிக்க முடியும். மஷ்ரூமிலிருக்கும் அதிகளவிலான ஆன்டி ஆக்சிடன்ட்கள் பல விதமான ஆரோக்கிய நன்மைகள் தரக்கூடியவை.
உடலுக்குத் தேவையான நுண்ணுயிர்ச் சத்துக்களான வைட்டமின் C, மாங்கனீஸ் மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகளவில் அடங்கியது ஸ்ட்ராபெரி. இதிலிருக்கும் பாலிஃபினால் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தி இதய நோய் வராமல் பாதுகாக்க உதவி புரிகிறது. ஆன்டி ஆக்சிடன்ட்கள் கேன்சர் நோய் உருவாக்கும் செல்களை எதிர்த்துப் போராடும் குணமுடையவை. ஸ்ட்ராபெரியை எந்த நேரத்திலும் ஸ்நாக்ஸாக உண்ணலாம். ஸ்மூத்தி, யோகர்ட் மற்றும் ஓட்மீலில் சேர்த்து உண்ண, கலோரி குறைந்து, ஆரோக்கியம் நிறைந்த உணவு உட்கொண்ட திருப்தி கிடைக்கும்.
ப்ளூ பெரி ஊட்டச் சத்துக்களின் 'பவர் ஹவுஸ்' என அழைக்கப்படுகிறது. இதிலுள்ள ஆன்டி ஆக்சிடன்ட்கள் மற்றும் அன்த்தோசியானின் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. இதிலுள்ள ஆன்டி இன்ஃபிளமேட்டரி குணமானது நோய்களைத் தடுக்கக் கூடியது. வைட்டமின் C, மாங்கனீஸ் மற்றும் நார்ச்சத்துக்கள் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் துணை புரிகின்றன. ப்ளூ பெரி அறிவாற்றல் மற்றும் பார்வைத் திறனை மேம்படுத்த வல்லது; இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் உதவி புரியும். ப்ளூ பெரி பழங்களை தொடர்ந்து உண்ணும்போது இதயத்திற்குச் செல்லும் இரத்த நாளங்களில் உண்டாகும் பிரச்னை மற்றும் வயதான காரணத்தால் ஏற்படும் ஞாபக மறதி போன்றவை குறையும் வாய்ப்புள்ளது. இது ஆரோக்கியமான சருமத்தைத் தரக்கூடியது; செரிமானம் சிறப்பாக நடைபெற உதவுவது; எடை பராமரிப்பிலும் உதவக் கூடியது.
வெள்ளரிக்காய் அதிகளவு நீர்ச்சத்துடன் பலவகை ஊட்டச் சத்துக்களும் நிறைந்தது. இதிலுள்ள சிலிக்கா மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட்கள் ஆரோக்கியமான சருமத்தைத் தரவும் எடையை சமநிலையில் பராமரிக்கவும் உதவுகின்றன. அதிகளவிலான வைட்டமின் K எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும், பொட்டாசியம் இதய நலன் காக்கவும், நார்ச்சத்து செரிமானத்தை சீராக்கி இரத்த சர்க்கரை அளவை சமநிலைப்படுத்தவும் உதவுகின்றன. குறைந்த கலோரி கொண்டதாலும், உடலுக்கு நீரேற்றம் தந்து புத்த்துணர்ச்சியோடு வைப்பதாலும் இதை உணவோடு சேர்த்து பச்சடியாகவும் மற்ற நேரங்களில் ஸ்நாக்ஸ் ஆகவும் உண்ணலாம்.
குடை மிளகாய் (Capsicums)களில் அதிகளவு நுண்ணுயிர்ச் சத்துக்கள் நிறைந்துள்ளன. வைட்டமின் C நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதுடன் ஆரோக்கியமான சருமத்தைத் பெறவும் உதவுகிறது. வைட்டமின் A நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரித்து பார்வைத் திறனையும் மேம்படுத்துகிறது. சிவப்பு குடை மிளகாயில் உள்ள நார்ச்சத்தும் காப்சைசின் (capsaicin) என்றதொரு கூட்டுப்பொருளும் சீரான செரிமானத்துக்கு உதவுகின்றன; மெட்டபாலிசம் சரிவர நடைபெறச் செய்கின்றன; வலிகளை நீக்கி நிவாரணம் பெற உதவுகின்றன.