நம்முடைய உடல் இயக்கம் சீராக இருக்க வேண்டும் என்றால் அதற்கு தினசரி உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் முறையாக இருக்க வேண்டியது அவசியம். அப்படி உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களில் முக்கியமானது மக்னீசியம். நம்முடைய எலும்புகள் நரம்புகள் தசைகள் ரத்த சர்க்கரை அளவு போன்றவற்றை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது இந்த மக்னீசியம். இந்த பதிவில் நமது உடலில் மக்னீசியம் போதுமான அளவு இல்லை என்றால் எதுபோன்ற பாதிப்புகள் ஏற்படும் எனத் தெரிந்து கொள்ளலாம் வாங்க.
உடல் சோர்வு: உடலில் மக்னீசியம் அளவு குறைவாக இருந்தால் உடல் எப்போதும் சோர்வாகவும் பலவீனமாகவும் இருக்கும். மக்னீசியம் தான் நமது உடலில் ஆற்றல் உற்பத்திக்கு தேவையானது. எனவே நீங்கள் எப்போதும் உடல் சோர்வாக இருப்பது போல் உணர்ந்தால் உங்களுக்கு மக்னீசிய சத்து குறைபாடாக இருக்கலாம்.
பசியின்மை மற்றும் குமட்டல்: அவ்வப்போது செரிமான பிரச்சனை உண்டாக்கி குமட்டல், பசியின்மை போன்றவை ஏற்பட்டால் அது மக்னீசியம் குறைபாட்டின் அறிகுறியாக இருக்கலாம். ஏனெனில் மக்னீசியம் செரிமான மண்டலம் சீராக இருக்க உதவுகிறது. ஒருவேளை மக்னீசியம் குறைவாக இருந்தால், செரிமானம் முறையின்றி நடந்து பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.
தசை வலி மற்றும் தசைப்பிடிப்பு: உடலில் மக்னீசியம் தேவையான அளவு இல்லாதபோது அதன் விளைவாக கடுமையான தசை வலி மற்றும் தசைப்பிடிப்பு உண்டாகக்கூடும். எனவே உங்களுக்கு அடிக்கடி தசைகளில் பிடிப்பு, உடல் வலி, குடைச்சல் போன்றவை ஏற்பட்டால், உங்கள் உடலில் மக்னீசியம் சத்து குறைவாக இருக்கிறது என அர்த்தம்.
முறையற்ற இதயத்துடிப்பு: ஒருவருக்கு இதயத்துடிப்பு சீராக இருக்க வேண்டுமெனில் உடலில் மக்னீசியம் அளவு சரியாக இருக்க வேண்டும். மக்னீசியம் அளவு குறைந்தால் அது ஒழுங்கற்ற இதயத்துடிப்புக்கு வழிவகுக்கும். எனவே உங்களுக்கு திடீரென படபடப்பாக இருப்பது போல் உணர்ந்தால் மக்னீசியம் சத்து குறைபாடாக இருக்கலாம். இதுபோன்ற தருணங்களில் உடனடியாக மருத்துவமனிடம் செல்வது நல்லது.
மேலே குறிப்பிட்டுள்ள அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுங்கள். பின்னர் மக்னீசியம் சத்து அதிகம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். பசலைக்கீரை, பாதாம் பருப்பு, பூசணி விதைகள், சோயா பால், டோஃபு, காராமணி, பீனட் பட்டர் போன்றவற்றில் மக்னீசியம் சத்து நிறைந்துள்ளது. இவற்றை தினசரி உண்டு வந்தால், மக்னீசியம் குறைபாடு பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.