

இன்றைய காலத்தில் நாம் பின்பற்றும் மோசமான உணவுமுறைப் பழக்கங்களால், மலச்சிக்கல் என்பது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சந்திக்கும் பிரச்சினையாக மாறி வருகிறது. குறிப்பாக நாம் யாரும் அதிக நார்ச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வதில்லை. கொழுப்பு உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்றவையே மலச்சிக்கலுக்கு முக்கிய காரணமாகிறது. நீண்ட நாட்களுக்கு இந்த மலச்சிக்கல் பிரச்சனையை கண்டுகொள்ளாமல் விட்டால், அது குடலில் பல பாதிப்புகளை ஏற்படுத்தலாம். எனவே தினசரி முறையாக காலையில் எழுந்ததும் காலைக் கடனை முடித்துவிடுங்கள். மலச்சிக்கல் பிரச்சனையை வீட்டில் உள்ள சில பொருட்களைப் பயன்படுத்தியே சரி செய்ய முடியும்.
விளக்கெண்ணெய்: இது அனைவரது வீடுகளிலும் இருக்கும் அருமருந்து என்றுதான் சொல்ல வேண்டும். மலச்சிக்கலை போக்குவதற்கு பல நூறு ஆண்டுகளாக விளக்கெண்ணெய் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது இயற்கையாகவே பிசுபிசுப்பு தன்மை கொண்டதால், மலமிளக்கியாக செயல்படுகிறது. ஒன்று அல்லது இரண்டு டீஸ்பூன் விளக்கெண்ணையை பாலில் கலந்து குடித்து வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும். இதை இரவு தூங்குவதற்கு முன்பு குடிப்பது நல்லது.
கொய்யாப்பழம்: கொய்யாப்பழம் அதிக நார்ச்சத்து நிறைந்த உணவாகும். இதில் இருக்கும் கரையக்கூடிய நார்ச்சத்து ஆசனவாயில் சளி உற்பத்திக்கு உதவி மலச்சிக்கலை போக்குகிறது. எனவே தினசரி கொய்யாப்பழம் சாப்பிடுவது நம்மை மலச்சிக்கல் பாதிப்புகளில் இருந்து விடுபட உதவும்.
சிட்ரஸ் பழங்கள்: விட்டமின் சி அதிகம் நிறைந்த எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற பழங்களை சாப்பிடுவது மூலமாகவும் மலச்சிக்கல் குணமாகும். ஆயுர்வேத மருத்துவத்திலேயே மலச்சிக்கலுக்கு லெமன் ஜூஸ் பரிந்துரை செய்யப்படுகிறது. வெந்நீரில் கொஞ்சம் லெமன் ஜூஸ் மற்றும் உப்பு சேர்த்து காலையில் குடித்தால், நமது குடலை சுத்தப்படுத்தும் கலவையாக செயல்படுகிறது.
திரிபலா பொடி: கடுக்காய், நெல்லிக்காய், தொடுகாய் ஆகிய மூன்றையும் சேர்த்து செய்யப்படும் பொடிதான் திரிபலா. இது ஒரு சிறந்த மலமிளக்கியாகும். மேலும் நமது குடல் செயல்பாட்டை மேம்படுத்த பெரிதும் உதவுகிறது. ஒரு டம்ளர் வெந்நீரில் ஒரு ஸ்பூன் இந்த பொடியை சேர்த்து குடித்தால் மலச்சிக்கல் இருக்கும் இடம் தெரியாமல் மறைந்துவிடும். இதை இரவு தூங்குவதற்கு முன்பு குடிப்பது நல்லது.
அத்திப்பழம்: அத்திப்பழம் சாதாரணமாகவே பழுத்த மற்றும் உலர்ந்த நிலைகளில் கிடைக்கிறது. இதிலும் அதிகப்படியான நார்ச்சத்து இருப்பதால், ஒரு கிளாஸ் பாலில் அத்தி பழங்களைப் போட்டு சூடாக்கி தூங்குவதற்கு முன்பு குடித்து வந்தால், மலச்சிக்கல் பிரச்சனைக்கு நல்ல பலனைக் கொடுக்கும்.
மேலும் ஆளி விதை, உலர் திராட்சை, கீரைகள் போன்ற அதிக நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலமாகவும், மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து விடுபடலாம். மேலே குறிப்பிட்டுள்ள அனைத்துமே இயற்கையானவை என்பதால், இவற்றை சாப்பிடுவதால் உங்களுக்கு எந்த பக்க விளைவுகளும் இருக்காது.