கண்மணிகளின் கண்களை காப்பாற்றுவோம்!

உலக விழித்திரை புற்றுநோய் விழிப்புணர்வு வாரம் - மே 11 முதல் மே 17 வரை
Retinoblastoma
Retinoblastoma
Published on

ஒரு குழந்தையை அவன் பிறந்த நாள் அன்று புகைப்படம் எடுத்தார்கள். அனைத்து புகைப்படங்களிலும் குழந்தையின் கண்களின் மையத்தில் சிவப்பு நிறத்தில் ஒரு பிம்பம் தெரிந்தது.

அதனைக் கவனித்த குழந்தையின் குடும்ப மருத்துவர், குழந்தையை ஒரு கண் மருத்துவரிடம் பரிந்துரைத்தார். காரணம், அது ரெட்டினோப்ளாஸ்டோமா எனும் கண் புற்று நோயின் அறிகுறி.

*****

மே 11 முதல் மே 17 வரை உலக விழித்திரை புற்றுநோய் விழிப்புணர்வு வாரம். இதன் தொடர்பாக, கல்கி ஆன்லைன் சார்பாக, சென்னை சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனையைச் சார்ந்த, குழந்தைகளின் விழித்திரை புற்றுநோய் நிபுணர் டாக்டர் சுகனேஷ்வரி கணேசன் உடன் ஓர் நேர்முகம். டாக்டர் சொல்வதை கவனத்துடன் படித்து, விழிப்புணர்வு ஏற்படுத்துவோம். கண்மணிகளின் கண்களை காப்பாற்றுவோம்! இனி டாக்டர் சுகனேஷ்வரி...

Dr. Suganeswari Ganesan
Dr. Suganeswari Ganesan

"சங்கர நேத்ராலயாவில் 2024 ஆம் வருடத்தில் மட்டும் 176 குழந்தைகளுக்கு விழித்திரை புற்று நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.

இந்த நோய், ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டால் 90% முதல் 95 % வரை இதனை குணப்படுத்தக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. இதற்கான சிகிச்சை முக்கியமாக கீமோதெரபி மற்றும் லேசர் வடிவத்தில் உள்ளது.

ரெட்டினோபிளாஸ்டோமாவின் மேம்பட்ட நிலைகள் பொதுவாக மூளைக்கும் பின்னர் அவர்களுடைய உடம்பின் பிற கட்டமைப்புகளுக்கும் பரவி இருக்குமேயானால் உயிர் இழப்புக்கும் வழிவகுக்கும்.

'ஆரம்பத்தில் சிகிச்சை அளித்து உயிரைக் காப்பாற்றுங்கள், கண்ணைக் காப்பாற்றுங்கள், பின்னர் பார்வையைக் காப்பாற்றுங்கள்' என்பதுதான் கண் புற்று நோய் சேவையின் குறிக்கோள் ஆகும்.

ரெட்டினொப்ளாஸ்டோமா (Retinoblastoma - RB), என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் கண் புற்றுநோய், கண்ணின் உள்பகுதி விழித்திரையில், குறிப்பாக, குழந்தைகளுக்கு வரும் கண் புற்று நோய் ஆகும். ஆப்பிரிக்க நாடுகளுக்கு அடுத்த இடத்தில் இந்தியாவில் 15,000 குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு இந்த கண் விழித்திரை புற்றுநோய் இருக்கிறது. முன்பு குழந்தையின் உயிரைக் காப்பாற்றுவதற்காக விழித்திரை புற்று நோய் பாதிக்கப்பட்ட கண்ணை அல்லது கண்களை அகற்றுவதே சிகிச்சை ஆக இருந்தது. ஆனால், தற்போதைய மருத்துவ தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் காரணமாக, குழந்தைகளின் உயிரை மட்டுமல்ல, குழந்தைகளின் கண் பார்வையினையும் காப்பாற்றக்கூடிய வாய்ப்பு அதிகரித்திருக்கிறது. ஆனால் இது விழித்திரை புற்றுநோயினை ஆரம்பக்கட்டத்திலேயே கண்டறிவதன் மூலமே சாத்தியம் ஆகும்.

இந்நோய் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளையே மிக அதிக அளவில் பாதிக்கிறது. சராசரியாக குழந்தைகளுக்கு வயது 18 மாதமாக இருக்கும் போது இந்த விழித்திரை புற்று நோய் இருப்பது கண்டுபிடிக்கப்படுகிறது.

Retinoblastoma
Retinoblastoma

விழித்திரை புற்று நோய்க்கான அறிகுறிகள்:

ஒரு குழந்தைக்கு கீழ்க்கண்ட அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அறிகுறிகள் தெரிந்தால் அந்த குழந்தையை ஒரு கண் மருத்துவ நிபுணரிடம் பரிசோதனைக்கு அழைத்துச் செல்வது நல்லது. கண் மருத்துவர் கண்களில் சொட்டு மருந்திட்டு கண்ணின் கருமணியை (பாப்பா – Pupil) விரிய வைத்து கண்ணின் உட்பகுதிகளை தீவிரமாக சோதனை செய்து விழித்திரை புற்று நோய்க்கான அறிகுறிகள் இருக்கிறதா அல்லது வேறு ஏதேனும் கண் நோய்களுக்கான அறிகுறிகள் இருக்கிறதா என்பதை கண்டறிவார்.

  • பாதிக்கப்பட்ட குழந்தையின் கண்கள் சில நேரங்களில் சிவப்பு நிறத்தில் காணப்படலாம். குழந்தைக்கு வலியும் இருக்கும். அந்த கட்டி வளருவதால் புதிய இரத்தக்குழாய்கள் கருவிழியின் மேற்பரப்பில் உருவாகின்றன. இது கருவிழியின் நிறத்தில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இப்படி கருவிழி நிறம் மாறுவது ஹீட்ரொக்ரோமியா என்று சொல்லப்படுகிறது.

  • இரண்டு கண்களும் வெவ்வேறு பகுதியை பார்ப்பது போல தோற்றமளிப்பதும் ரெட்டின்னோப்ளாஸ்டோமாவின் இரண்டாவது மிகப்பொதுவான அறிகுறியாகக் கருதப்படுகிறது. கட்டியானது வளருகின்ற போது, கண்ணின் பார்வையில் குறுக்கிடுவதால், இரண்டு கண்களையும் சரியான பாதையில் இயங்க வைப்பதற்கான தூண்டலை மூளை ஏற்படுத்த முடியாமல் போகிறது. எனவே பாதிக்கப்பட்ட கண் பார்வை உட்புறமாகவோ அல்லது வெளிப்புறமாகவோ திரும்பியவாறு தோற்றமளிக்கிறது.

  • ஈசோட்ரோபியா Esotropia (cross-eyed) எனப்படும் குறுக்குவாட்டாக அமைந்த கண்கள் குழந்தைகளுக்கு இருக்குமேயானால், அதுவும் ஒரு அறிகுறியாகும். கண்கள் உள்புறம் நோக்கி திரும்பியிருப்பது போல காட்சியளிக்கும்.

  • எக்ஸோட்ரோபியா Exotropia (lazy eye) எனப்படும் சோம்பேறிக்கண் போல அமைந்த கண்கள் குழந்தைகளுக்கு இருக்குமேயானால், அதுவும் ஒரு அறிகுறியாகும். கண்கள் வெளிப்பக்கம் நோக்கி திரும்பியிருப்பது போல காட்சியளிக்கும்

  • நோய் அதிகமான நிலையில், கண் இமைகள் சிவப்பாகவும் சற்று வீக்கமாகவும் காணப்படும்.

  • சில நேரங்களில் கண்ணின் சுற்றுப்புறப்பாதையாக இருக்கும் ஆர்பிட்டிலிருந்து கண்கள் வெளியே எட்டிப்பார்ப்பது போலவும் இருக்கும். இது கண்ணில் ஏதோ நோய்த்தொற்று ஏற்பட்டிருப்பது போல தோற்றம் தரும். இதுவும் விழித்திரை புற்று நோயின் அறிகுறியாகும்.

நோய் கண்டறியப்படும் முறை:

மேற்க்கண்ட அறிகுறிகள் கொண்ட குழந்தைகளுக்கு முழுமையான கண் பரிசோதனை செய்வது அவசியம்.

அத்துடன்,

  • கட்டியின் அளவினை கண்டுபிடிப்பதற்காக அல்ட்ரா சவுண்டு பரிசோதனையும்,

  • மூளைக்கான எம்.ஆர்.ஐ. பரிசோதனை செய்வதன் மூலம் குழந்தைக்கு ரெட்டினோப்ளாஸ்டோமா நோய் கண் மட்டுமல்லாமல் அருகிலுள்ள மற்ற பகுதிகளுக்கும் பரவியிருக்கிறதா? என்பதும் எந்த அளவு பரவியிருக்கிறது என்பதும் கண்டறியப்படுகிறது.

  • குழந்தைகள் இந்த பரிசோதனைகளுக்கு ஒத்துழைப்பதில்லை என்ற காரணத்தாலும், புற்றுநோயினை வகைப்படுத்துவதற்காகவும் (Grouping) ஆபரேஷன் தியேட்டரில் குழந்தைக்கு மயக்க நிலையில் பரிசோதனை செய்யப்படுகின்றது.

இதையும் படியுங்கள்:
World Cancer Day 2024: அச்சுறுத்தும் கர்பப்பை வாய் புற்றுநோய்.. தடுப்பது எப்படி?
Retinoblastoma

சிகிச்சை:

குழந்தைகளுக்கு கண்ணில் ரெட்டினோப்ளாஸ்டோமா எனப்படும் விழித்திரை புற்று நோய் இருப்பது ஊர்ஜிதமானால், நோயின் தீவிரத்தைப் பொறுத்து கீழ்க்காணும் சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன:

  • கீமோதெரப்பி எனப்படும் மருந்து சிகிச்சை,

  • ரேடியோ தெரப்பி எனப்படும் கதிர்வீச்சு சிகிச்சை,

  • க்ரையோதெரபி எனப்படும் குறைந்த வெப்ப நிலையில் வழங்கப்படும் கதிர்வீச்சு சிகிச்சை,

  • ப்ராக்கிதெரப்பி எனப்படும் உள் கதிர்வீச்சு சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.

  • ஒருவேளை கண்ணிலிருந்து மற்ற பகுதிகளுக்கு புற்று நோய் பரவக்கூடிய நிலையிலிருந்தால், நோயாளியை காப்பாற்றுவதற்காகவும், புற்று நோய் மற்ற பாகங்களுக்கு பரவுவதை தடுப்பதற்காகவும் புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட கண்ணை ஆபரேஷன் மூலம் அகற்றி சிகிச்சை வழங்கப்படுகிறது.

  • ரெட்டினோபிளாஸ்டோமா நோயாளிகளைக் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் மரபணு மதிப்பீட்டிற்கு உட்படுத்தப்பட வேண்டும்,

ரெட்டினோப்ளாஸ்டோமாவினால் பாதிக்கப்பட்டவர்கள் பொதுவாக 3 வயதுக்குட்பட்டவர்களாகவே காணப்படுகிறார்கள். எனவே அனைத்து குழந்தைகளும் பிறப்பிலிருந்து தொடங்கி ஆண்டுதோறும் கண் மதிப்பீட்டிற்கு உட்படுத்தப்பட வேண்டும்.

இந்தியாவில் பல குழந்தைகள் மிகவும் தாமதமான கட்டத்தில்தான் மருத்துவ ஆலோசனைகளைப் பெறுகிறார்கள். இது உயிருக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. மருத்துவ வசதியை விரைவில் பயன்படுத்திக்கொள்வதே வெற்றிக்கான திறவுகோல். பிறக்கும்போதே முதல் கண் பரிசோதனையை ஊக்குவிப்பதும், பின்னர் 6வது மாதத்தில் 1 வயதில் கண் பரிசோதனை செய்வதும் சிறந்த நடைமுறையாகும்."

இதையும் படியுங்கள்:
Providing dignity in death - Palliative Care - Vijayasree at Sri Matha Cancer Care
Retinoblastoma

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com