மழைக்காலத்தில் நமக்கு சளி, இருமல், காய்ச்சல் போன்றவை அடிக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த நேரத்தில் நமது உடல் ஆரோக்கியம் மீண்டு வர தூதுவளை கீரை நமக்குப் பல வகைகளிலும் பயன்படுடிகிறது.
கொடி வகையைச் சேர்ந்த இந்தச் செடியை நம் வீட்டிலேயே கூட வளர்க்கலாம். இதற்கு தூதுவளை, தூதுணம் என்றும் பெயர்கள் உண்டு. இந்தக் கீரை அரிய வைத்திய மூலிகை ஆகும். இதனை வள்ளலார், ‘ஞான சாதன மூலிகை’ என்று அழைத்ததிலிருந்து இதன் பெருமையை உணரலாம். தூதுவளை கீரை சற்று கசப்பானது என்பதால் நிறைய பேர் இதை உண்பதைத் தவிர்க்கிறார்கள். ஆனால், இதில் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளன.
இந்தக் கீரையை துவையலாகவோ, மசியலாகவோ, கடைந்தோ, குழம்பு வைத்தோ உண்ணலாம். கஷாயம் வைத்து பருகினால் உடல் நலத்திற்கு நல்லது. தூதுவளைக் கீரையின் இலை, காய், பூ யாவுமே உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. இந்தக் கீரையில் வைட்டமின் ஏ, பி, சியும் இரும்புச் சத்து, சுண்ணாம்புச் சத்து, பொட்டாசியம் என அருமையான சத்துக்கள் அடங்கியுள்ளன.
தூதுவளையை நிழலில் உலர்த்தி பொடி செய்து தேனில் குழைத்து காலை, மாலை இரு வேளை சாப்பிட சளி, இருமல், கபம், இளைப்பு நீங்கும். இந்தக் கீரையை அடை மாவில் சேர்த்தும் சாப்பிடலாம். இந்தக் கீரையை பறித்து எண்ணெய் ஊற்றி வதக்கினால் முட்கள் மசிந்து விடும். இலையை நசுக்கினாலும் முட்கள் நைந்து விடும். அதன் பிறகு இதை நாம் விருப்பம் போல் சமைத்து சாப்பிடலாம். இக்கீரையுடன் வெங்காயம், பூண்டு வதக்கி வைத்து துவையல் செய்தும் சாப்பிடலாம்.
வீட்டில் பொரித்த குழம்பு வைக்கும்போது தூதுவளை கீரையை பொடியாக அரிந்து அதில் சேர்த்து குழம்பு வைத்து சாப்பிடலாம். இந்த இலையை காய வைத்து பொடி செய்து வைத்துக் கொண்டு எருமை மோரில் கலந்து குடித்து வந்தால் இரத்த சோகை தீரும். இரத்த அணுக்கள் உடம்பில் அதிகரிக்கும். தூதுவளை பூவை பறித்து சுத்தப்படுத்தி பசும்பாலில் அவித்து தினமும் உண்டு வர, வாத நோய் குணமாகும்.
தூதுவளைக் கீரையை பறித்து அதனோடு புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலையோடு, உளுத்தம் பருப்பையும் சேர்த்து நல்லெண்ணெயில் வதக்கி துவையல் செய்து மதிய வேளையில் சாப்பிட்டு வந்தால் இருமல், சளி, கபம் நீங்கிவிடும். தூதுவளைக் கீரை நுரையீரல் சம்பந்தமான நோய்களைப் போக்கிவிடும். இந்தக் கீரையை அரைத்து வீக்கம், கட்டிகளின் மேல் பூசினால் அவை வெடித்து விரைவில் குணமாகும். தூதுவளைக் கீரையை வாரம் இரு முறை பயன்படுத்துபவர்கள் என்றும் இளமையோடு இருப்பார்கள்.
இக்கீரை கை, கால் அசதியைப் போக்கி, எலும்பை உறுதி செய்யும். வயிற்று நோய்களை குணமாக்கும், ஞாபக சக்தியை கொடுக்கும், ஜீரணக் கோளாறுகளை அகற்றும், முதுமையை தள்ளிப்போடும். நாம் மிகச் சாதாரணமாக கருதும் இந்த தூதுவளைக் கீரையில் எவ்வளவு மருத்துவ குணங்கள் உள்ளன பார்த்தீர்களா?