
மருத்துவ குணம் நிரம்பிய மரம் வேப்பமரம் என்றால் அது மிகையல்ல. சிரங்கு முதல் குஷ்டம் வரையிலான நோய்களையும் தலைவலி முதல் விடாத காய்ச்சல் வரை மனிதருக்கு ஏற்படக்கூடிய பல வகை நோய்களையும் குணமாக்கும் ஆற்றல் வேப்பமரத்திற்கு உண்டு. வேப்பமரத்தின் இலை, பூ, காய், பழம், விதை, பட்டை அனைத்துமே மருத்துவ சக்தி நிரம்பியவையாகும் .
வேப்பம்பூ குறிப்பிட்ட காலத்தில் தான் பூக்கும். அதுவும் சித்திரை தமிழ் புத்தாண்டு அன்று நம் ஒவ்வொரு வீடுகளிலும் வேப்பம்பூவை வைத்து பச்சடி தயார் செய்வார்கள். இந்த சித்திரை மாதத்தில் தான் வேப்பம் மரத்தில் வேப்பம் பூ பூத்துக் குலுங்கும். அந்த வேளையில் வேப்பம் பூக்களை சேகரித்து வைத்துக் கொண்டு தேவையான போது பயன்படுத்திக் கொள்ளலாம். வேப்பம்பூ காய்ந்து விட்டாலும் அதன் மருத்துவ குணம் மாறுவதில்லை.
ஜீரண சக்திக்கு
முப்பது கிராம் வேப்பம் பூவை எடுத்து சுத்தம் செய்து கொள்ள வேண்டும். அதனுடன் பதினைந்து கிராம் நிலவேம்பையும் சேர்த்து நசுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு தண்ணீர் ஒரு டம்ளராக ஆகும் வரை சுண்ட காட்சி கொள்ள வேண்டும் . இந்த தண்ணீரை வடிகட்டி வேளைக்கு இரண்டு அவுன்ஸ் வீதம் ஒரு நாளைக்கு மூன்று வேளை குடித்தால் ஜீரண சக்தி அதிகரிக்கும்.
வயிற்று கிருமிகள் நீங்க
குழந்தைகளுக்கு அடிக்கடி வயிற்றில் கிருமிகள் தோன்ற வாய்ப்பு உண்டு. அவ்வேளையில் சிறிதளவு வேப்பம்பூவையும், ஐந்து மிளகையும் வைத்து மை போல அரைத்து அதில் சுண்டைக்காய் அளவு குழந்தைகளுக்கு சாப்பிட கொடுத்தால், வயிற்றில் உள்ள கிருமிகள் மலத்துடன் வெளியேறிவிடும்.
பித்தம் தணிய வேப்பம்பூ துவையல்
வேப்பம்பூவை தேவையான அளவு எடுத்து சுத்தம் செய்து அதை நெய்யில் வதக்கி எடுத்து அதனுடன் உப்பு, புளி மிளகு, சீரகம், கருவேப்பிலை சேர்த்து துவையலாக அரைத்து சாப்பிட்டு வந்தால் பித்தம் தணிந்து விடும்.
பித்த நோய்களுக்கு வேப்பம்பூ ரசம்
வேப்பம் பூவை வதக்கி அதனுடன் புளி, சீரகம், மிளகு சேர்த்து ரசம் வைத்து சாதத்துடன் சேர்த்து அவ்வப்போது சாப்பிட்டு வந்தால், பித்த சம்பந்தமான அனைத்து நோய்களும் குணமாகும் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியையும் தரும்.
கல்லீரல் வீக்கம் கல்லீரல் குறைபாடுகள் சிறுநீரகக் கற்கள் நீங்க
ஒரு கைப்பிடி அளவு வேப்பம்பூ, கடுக்காய், இரண்டு நெல்லிக்காய், இரண்டு தான்றிக்காய், இரண்டு வாழைத்தண்டு சிறிது ஆகிய அனைத்தையும் ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் அரை லிட்டராக சுண்டும் வரை காய்ச்சி இறக்கி ஆற வைக்க வேண்டும். இந்த தண்ணீரை நான்கு மணி நேரத்திற்கு ஒருமுறை நூறு மில்லி அளவில் சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும். இந்த தண்ணீருக்கு சிறுநீரக கற்களை கரைக்கும் ஆற்றலும் உண்டு.
பித்தப்பை கற்கள் கரைய
ஒரு கைப்பிடி அளவு வேப்பம் பூவை எடுத்து ஒரு லிட்டர் தண்ணீர் போட்டு அதனுடன் இரண்டு கடுக்காய் தட்டி போட்டு நன்கு கொதிக்க வைத்து பாதியாக சுண்டச் செய்ய வேண்டும். இந்த தண்ணீரை காலையும், மாலை முக்கால் கப் சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கற்கள் கரைந்து விடும்.
வேப்பம்பூவே லேசாக உலர்த்தி வறுத்து பொடி செய்து பருப்பு சாதத்துடன் கலந்து சாப்பிட்டு வந்தால், வாந்தியும் ஏப்பமும் உடனே நீங்கும். வேப்பம்பூ ஜீரண சக்தியை அதிகமாக்கும். உடலில் உஷ்ணத்தை உண்டு பண்ணும் தேகத்திற்கு பலத்தை ஊட்டும்.
வேப்பம்பூவை தேனில் ஊறவைத்து குல்கந்து தயாரிக்கலாம். இரவில் படுக்கும் முன் ஒரு கொட்டைப்பாக்கு அளவு எடுத்து இதை சாப்பிட்டு வந்தால், உடல் நலம் பெறும் எந்த நோயும் அணுகாது.
வேப்பம்பூ போட்ட நீரை நன்றாக கொதிக்க வைத்து அது ஆவி வரும்போது அதை காதில் பிடித்தால், உடனே காது ரணம் காதில் சீழ் வடிதல் எல்லாம் சரியாகிவிடும்.
வேப்பம்பூவை உப்பு மிளகு சீரகம் போட்டு வறுத்து பொடி செய்து சாதமாக கூட சாதத்தில் கலந்து சாப்பிடலாம் இதை சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்.
வேப்பம்பூவில் உள்ள சக்தி கெட்ட கொழுப்பை அகற்றி உடல் பருமன் போன்ற சிரமத்துக்கு நம்மை ஆளாகாமல் நம் உடலை சீராக வைக்க பேருதவி புரிகிறது.
அதிகப்படியான எண்ணெய் சுரப்பை குணப்படுத்துகிறது. முகப்பரு மற்றும் பருக்களை குறைக்கிறது மற்றும் அரிப்பு பிரச்சனைகளை குணப்படுத்துகிறது.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)