அஸ்வகந்தா ஆரோக்கியமான மூலிகையாகும். அது அடாப்டோஜெனிக் பண்புகளைக் கொண்ட ஒரு பழங்கால மருத்துவ மூலிகை. இதை மழைக்காலத்தில் உட்கொள்வது உங்களுக்கு பல பலனைத் தரும். இது நோய் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டது. மழைக் காலத்தில் இதனை ஒரு துணைப்பொருளாக உட்கொள்ள நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தி நோய்கள் வராமல் தடுக்கலாம்.
அமுக்கிரா கிழங்கை நன்கு இடித்து மாவாக்கி சல்லடை யில் சலித்து எடுத்து அதன் எடைக்கு சமமான அளவு பனங்கற்கண்டு கலந்து ஒரு பாட்டிலில் சேர்த்து வைத்துக் கொண்டு தினமும் காலை, மாலை இரண்டு வேளை ஒரு கிளாஸ் பசும்பாலில் அஸ்வகந்தா பொடியை கலந்து சாப்பிட்டு வர இளமை துடிப்புடன் இருக்கலாம். அதோடு கிடைக்கும் நன்மைகள் பல!
அஸ்வகந்தா அதன் அடாப்டோஜெனிக் பண்புகளுக்கு பெயர் பெற்றது. இது உடல் அழுத்தத்தை நிர்வகிக்க உதவுகிறது. வெதுவெதுப்பான பாலுடன் இதனை உட்கொள்ளும்போது, அது ஒரு இனிமையான மருந்தாக மாறும். இது மன அழுத்தத்தைக் குறைக்கும். மன அழுத்தத்துடன் தொடர்புடைய ஹார்மோன் கார்டிசோலின் அளவை சமநிலைப்படுத்த இந்த மூலிகை நன்கு செயல்படுகிறது. ஹார்மோன் சமநிலையில், குறிப்பாக பெண்களில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாகக் கருதப்படுகிறது.
அஸ்வகந்தா மூலிகையை வழக்கமான முறையில் சாப்பிட்டு வருவது இரத்த குளுக்கோஸ் அளவுகளை குறைக்க உதவுவதாக மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. இதன் காரணமாக இது வகை 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிவாரணம் தருகிறது. உறங்குவதற்கு முன்பு அஸ்வகந்தா பாலை உட்கொள்வது தூக்க முறைகளை ஒழுங்குபடுத்தவும், தூக்கமின்மையை குறைக்கவும் மற்றும் ஒட்டுமொத்த தூக்க தரத்தை மேம்படுத்தவும் உதவும்.
அஸ்வகந்தா நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்புகளைக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. பாலுடன் இணைந்தால், இது வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்ற ஊட்டச்சத்துக்களின் வளமான ஆதாரத்தை வழங்குகிறது. இது ஒட்டுமொத்த நோயெதிர்ப்பு மண்டல ஆரோக்கியத்திற்கு பங்களிக்கிறது. ஒரு வலுவான நோயெதிர்ப்பு அமைப்பு, உங்கள் உடலை நோய்களிடம் இருந்து தடுக்க உதவுகிறது.
தசை வளர்ச்சி மற்றும் தசையின் வலிமையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், இரத்தத்தில் இருக்கக்கூடிய கெட்ட கொலஸ்ட்ரால் அளவுகளை குறைக்க உதவும். அஸ்வகந்தா சாப்பிடும் ஒரு நபரின் கவனிப்பு திறன் மற்றும் நினைவாற்றல் சிறந்த முறையில் இயங்குவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதயம் மற்றும் நுரையீரல் ஆரோக்கியத்தில் அஸ்வகந்தா மூலிகை பெரும் பங்கு கொண்டிருப்பதாக ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எலும்புகளுக்கு உறுதி தரும் சுண்ணாம்பு சத்து மற்றும் வைட்டமின் டி இரண்டுமே அஸ்வகந்தாவில் அதிகமுள்ளது. இதை தினமும் சேர்த்துக்கொள்ள 40 வயதிற்கு மேல் வரும் மூட்டு வலி, எலும்பு தேய்மானம் உட்பட பல்வேறு எலும்பு தொடர்பான நோய்கள் வராமல் தடுக்கலாம். முடக்கு வாதத்தால் அவதிப்படுபவர்கள் 3 வாரங்களுக்கு நாள் ஒன்றுக்கு இரண்டு முறை பாலிலோ அல்லது சுடுதண்ணீரிலோ 5 கிராம் அஸ்வகந்தாவில் பொடியை கலந்து சாப்பிட வலிகள் குறைவது ஆய்வில் தெரியவந்துள்ளது.
அஸ்வகந்தாவில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது பருக்களை அகற்றுவதோடு, சருமத்தில் இருந்து கூடுதல் எண்ணெயையும் குறைக்கிறது. சருமத்தை ஈரப்பதமாக்குவதோடு, ஹைப்பர் பிக்மென்டேஷனையும் குறைக்கிறது. இதற்கு1 டீஸ்பூன் அஸ்வகந்தா பொடியை 2 டீஸ்பூன் தண்ணீரில் கலந்த கலவையை தயார் செய்யவும். இப்போது இந்தக் கலவையை முகத்தில் தடவி 5 நிமிடம் ஊற வைத்து, முகத்தை தண்ணீரில் கழுவவும்.