மருந்தாகும் மூலிகைகள்!

மருந்தாகும் மூலிகைகள்!

துத்தி இலை: துத்தி இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி, மூலத்தின் மீது வைத்துக் கட்ட, மூல நோய் குணமாகும். துத்தி இலையை பாசிப்பருப்புடன் சேர்த்து சமைத்து உண்ண, மூலச்சூடு மற்றும் மூலம் குணமாகும்.

தும்பை இலை: தும்பைச் செடியை நீரில் போட்டு சிறிதளவு மஞ்சள் சேர்த்துக் கொதிக்க வைத்து ஆவி பிடிக்க, சைனஸ் பிரச்னை குணமாகும். குளிர்காலங்களில் தும்பை இலையை பாசிப்பயறுடன் சேர்த்து உணவாகக் கொள்ள, தும்மல், மூக்கடைப்பு நீங்கும்.

கழற்சி: கழற்சிப் பருப்புடன் கஸ்தூரி மஞ்சள் சேர்த்து அரைத்து கட்டிகளுக்குப் பற்று போட, அவை பழுத்து உடையும் அல்லது கரைந்துவிடும். கழற்சிப் பருப்புடன் மிளகு சேர்த்து உள்ளுக்கு எடுத்துக்கொள், கொழுப்புக் கட்டிகள் கரையும்.

கடுகு: கடுகினை ஒன்றிரண்டாகப் பொடித்து அரை ஸ்பூன் அளவு நீரில் இரண்டு மணி நேரம் ஊறவைத்து தெளிநீரை மட்டும் அருந்த, தொடர் விக்கல் நீங்கும். இதை கொதிக்க வைத்து வடிகட்டி அருந்தினாலும் விக்கல் பிரச்னை தீரும்.

நாயுருவி: நாயுருவியின் வேரைக் காயவைத்து அதனைச் சுட்டு சாம்பலாக்கி பல் தேய்த்து வர, பல் வலி, ஈறுகளில் ரத்தம் வடிதல், பல் ஆட்டம் போன்றவை குணமாகும்.

மாம்பருப்பு: மாம்பழம் மட்டுமின்றி, அதன் பருப்பும் நமக்குப் பெரும் பயனளிக்கிறது. மாம்பருப்பினைப் பொடி செய்து வெந்நீரில் கலந்து குடித்து வர, சீதபேதி எனும் ரத்தப்போக்கு நீங்கும். கழிச்சலுக்கும் இது சிறந்த மருந்தாகும்.

திரிபலா: நோய் தாக்குவதும் சிகிச்சைக்குப் பிறகு குணமாவதும் இயல்பாக நடக்கும் நிகழ்வு. ஆனால், நோய் வராமல் தடுக்கும் காயகல்பமாக திரிபலா சூரணம் பயன்படுகிறது. கடுக்காய், நெல்லிக்காய் மற்றும் தான்றிக்காயின் கூட்டுப் பொருளே திரிபலா சூரணமாகும். திரிபலா சூரணம் பசியின்மை, வயிற்றுப்புண் மற்றும் மலச்சிக்கலுக்கு மருந்தாகிறது.

திரிகடுகு: சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்றும் சம அளவு சேர்ந்ததே திரிகடுகு. திரிகடுகினை தேனுடன் கலந்து உண்ண, தலைவலி, சளி மற்றும் சைனஸ் பிரச்னைகள் தீரும். நுரையீரலின் செயல்திறன் அதிகரிக்கும். நோய்த்தடுப்பு மருந்தாகவும் இது செயல்படும்.

ஒற்றடம்: வாதத்தினால் தோன்றும் மூட்டு வலிகளுக்கு நொச்சி இலை, பழுத்த எருக்கிலை, ஆமணக்கு இலை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று அல்லது மூன்றிலுமே சிறிது விளக்கெண்ணெய் விட்டு வதக்கி, துணியில் முடித்து ஒற்றடம் கொடுக்க, வலி குறையும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com