அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணங்கள்!

அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணங்கள்!

ம்மான் பச்சரிசி ஒரு மருத்துவ மூலிகை ஆகும். இதன் பெயரைக் கேட்டதும் இது அரிசி போன்று இருக்குமோ என்று நினைக்க வேண்டாம். இது ஒரு மூலிகையே. இதற்கு, ‘சித்திர பாலாடை’ என்ற பெயரும் உண்டு. வித்தியாசமான பெயரைக் கொண்ட இது வியக்கத்தக்க மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது.

மருத்துவ குணங்கள்: இந்த மூலிகையின் தண்டைக் கிள்ளினால் ஒருவித பால் வரும். அது முகப்பரு, முகத்தில் எண்ணெய் பசை, கால் ஆணி, பித்த வெடிப்பு, இரைப்பு ஆகியவற்றை குறைக்கவும், தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கவும் பயன்படுகிறது. அம்மான் பச்சரிசி பெரும்பாலும் நஞ்சை காடுகளிலும், கிணற்று ஓரங்களிலும், நீர்நிலை மற்றும் ஈரமாக உள்ள இடங்களிலும் சர்வ சாதாரணமாகக் காணப்படும். மழைக்காலங்களில் இது நன்கு தழைத்து வளரும். சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் இதன் பயன்பாடு அதிகம்.

தாய்ப்பால் பெருக: சில தாய்மார்களுக்கு குழந்தைக்குத் தேவையான அளவு தாய்ப்பால் சுரக்காமல் இருக்கும். தாய்ப்பால் போதுமான அளவு சுரக்க அம்மான் பச்சரிசியின் பூக்களை தேவையான அளவு எடுத்து சுத்தம் செய்து, பசும்பால் விட்டு அரைத்து, பசும்பாலிலேயே கலந்து காலையில் மட்டும் பருகி வந்தால் குழந்தைக்குத் தேவையான பால் சுரக்கும்.

பெண்களின் பிரச்னைக்குத் தீர்வு: சில பெண்களுக்கு வெள்ளைப்படுதல் ஒரு பிரச்னையாக இருக்கும். அது நீங்க அம்மான் பச்சரிசி இலையை அரைத்து மோரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் ஐந்து நாட்கள் வரை அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் நின்றுபோகும்.

மரு உதிர: அம்மான் பச்சரிசி பாலை மருவின் மீது தடவி வந்தால் விரைவில் மரு உதிர்ந்து விடும்.

தாது விருத்தி: அம்மான் பச்சரிசி, தூதுவளை இரண்டையும் சம அளவு எடுத்து பாசிப்பருப்பு, உளுத்தம் பருப்பு இவற்றுடன் சேர்த்து கூட்டு வைத்து அதனுடன் தேங்காய் துருவல், நெய் கலந்து சாப்பிட்டு வந்தால் உடம்பில் தாது பலப்படும்.

வளரும் சூழல்: தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஈரமான இடங்களில் இது வளர்கிறது. விவசாய நிலங்களில் களையாக இது வளரும். விதை மூலம் இது இனப்பெருக்கம் அடைகிறது. இதன் இலை, தண்டு, பால், பூ ஆகியவை பயன்படுகின்றன.

நக சுத்திக்கு: இதன் பாலை விரலில் ஏற்படும் நக சுத்திற்கு தடவிர வர, விரைவில் குணமாகும்.

வாதம் போக்கும்: சிவப்பு அம்மான் பச்சரிசி மூலிகைக்கு வாதம், பிரமேகம் ஆகியவற்றைப் போக்கும் குணம் உண்டு. இது தாது விருத்தி செய்வதால் இதனை, 'வெள்ளி பஸ்பம் 'என்றும் கூறுவர்.

பால் காட்டும் வித்தை: இதன் பாலை வைத்துக்கொண்டு ஒரு வித்தை கூட காட்டலாம். ஒரு காகிதத் துண்டில் அம்மான் பச்சரிசி பாலில் ஏதாவது ஓர் உருவம் வரைந்து, உலர்த்தி பின் நண்பர்களிடம் காட்டவும். பின் அனைவரும் அது வெறும் காகிதம் தான் எனக் கூறியதும், அதை தீயில் கொளுத்தி காட்ட வரைந்த உருவம் தோன்றும். இவ்வாறு வித்தை காட்டவும் ஒரு சிறந்த மூலிகையாக இது திகழ்கிறது.

நன்றி: ‘உயிர் காக்கும் மூலிகை வைத்தியம்’

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com