தாழை மரம் நீரோடைகளிலும், ஆறுகளிலும், கேட்பாரற்று புதராக வளர்ந்து நறுமணம் பரப்புவதுடன், பெண்களின் மலட்டுத் தன்மை நீக்கும் மருந்தாகவும் விளங்குகிறது.
தாழம்பூ செடியின் வேரை இடித்து சாறு பிழிந்து அதனுடன் வெல்லம் கலந்து உட்கொண்டு வர, வெப்ப நோய்கள் தணியும். தாழம் வேர் கிழங்கை அரைத்து நாட்டு பசும் பாலில் கலந்து வடிகட்டாமலே குடித்தால் தாய்மை ஏற்படுவதுடன் ஏற்கெனவே உருவான கரு கலையும் ஆபத்தையும் தடுக்கும் குணம் உண்டு.
தாழம் இலையின் விழுதை இடித்து சாறு பிழிந்து நெய்யுடன் கலந்து காய்ச்சி 5 மில்லி அளவு உட்கொண்டு வர, நீர்கடுப்பு, நீர்சுருக்கு குணமாகும். தாழம்பூவை துண்டு துண்டாக வெட்டி நீரில் இட்டு காய்ச்சி நன்கு கொதித்து பூவிதழ்கள் வதங்கிய பின் வடிகட்டி தேவையான இனிப்பு கூட்டி பாகுபதமாய் காய்ச்சி வடிகட்டி கொள்ளவும். இதுவே தாழம்பூ மணப்பாகு ஆகும். இதனை ஒரு தேக்கரண்டி எடுத்து நீரில் கலந்து இரு வேளை குடித்து வர, உடல் உஷ்ணத்தைத் தணிக்கும். தாழம்பூ மணப்பாகுவை வெயில் காலங்களில் தினசரி உபயோகித்து வர, அம்மை நோய் வராமல் தடுக்கலாம். தாழம்பூ சரும நோய்களை குணப்படுத்தும்.
தாழம்பூ வேரினைப் பயன்படுத்தி மணப்பாகை செய்து வைத்து கொண்டு ஒரு தேக்கரண்டி எடுத்து நீரில் கலந்து இரு வேளைகள் குடித்து வர, சொறி சிரங்கு, சரும நோய்கள் குணமாகும். தாழம்பூவை நெருப்பு தணலில் காட்டி கசக்கி சாறு பிழிந்து அதில் சில துளிகள் காதில் விட்டால் காது வலி, காதில் தோன்றும் கட்டி ஆகியவை குணமாகும். தாழம்பூ சாம்பலை காயங்களின் மீது பூச புண்கள் குணமாகும். தாழம்பூ வாதம், கபம், மேகம் சார்ந்த பிணிகளை அகற்றும். மேலும், காக்காய் வலிப்புக்கும் இது மருந்தாகிறது.
உடலில் உள்ள அதிக பித்தத்தினால் சில சமயங்களில் பித்த நீர் இரத்தத்தில் கலந்து விடுகிறது. இதனால் இரத்தம் அசுத்தம் அடைகிறது. அசுத்தம் அடைந்த இந்த இரத்தத்தை சுத்தப்படுத்த தாழம்பூவை காயவைத்து பொடி செய்து நீரில் ஊற வைத்து அருந்தினால் இரத்தம் சுத்தம் அடையும். தாழம்பூ பொடியை ஒரு ஸ்பூன் அளவு எடுத்து நீரில் இட்டு கொதிக்க வைத்து அருந்தி வந்தால் நன்றாக பசி எடுக்கும். தாழம்பூ தைலம் நல்லெண்ணெயில் காய்ச்சி எடுக்கப்படுகிறது. இது தலைவலிக்கு நல்லது.
தாழையில் சிவப்பு, வெள்ளை என இரு வகை உண்டு. தாழை மலர் நைட்ரஜன் பற்றாக்குறையில் உள்ளபோது மின்னலுடன் மழை பெய்கையில் தனக்கான ஊட்டச்சத்தை எடுத்துக் கொண்டு உடனடியாக மலர்ந்து விடுகிறது. மற்ற நாட்களைக் காட்டிலும் மின்னலுடன் மழை பெய்த பின்னர் பார்த்தால் அதிக தாழை மலர்கள் மலர்ந்திருக்கும். மின்னலும் தாழை மலர்கள் மலர ஊக்குவிப்பானாக செயல்படுகிறது. இயற்கை வழியில் தாழம்பூ சென்ட் எடுக்கலாம். தாழம்பூவின் மணம் மனிதர்களை மட்டுமல்ல, கொடிய விஷம் கொண்ட பாம்புகளையும் தன்வசம் ஈர்க்கும் சக்தி கொண்டது.