பெற்றோர் தம் பிள்ளைகளுக்கு தரவேண்டிய பரிசு என்ன தெரியுமா?

பெற்றோர் தம் பிள்ளைகளுக்கு தரவேண்டிய பரிசு என்ன தெரியுமா?
Deepak Sethi

மீபத்தில் பிளஸ் டூ படிக்கும் எனது இரண்டாவது மகளின் வகுப்புத் தோழியும், தோழனும் எங்கள் வீட்டுக்கு வந்திருந்தனர். நான் அவர்களுக்கு லெமன் ஜூஸ் தயாரித்துக் கொண்டிருந்தபோது, பிஸ்கட்ஸ் மற்றும் சில தின்பண்டங்களை அழகாக தட்டுகளில் வைத்து என் மகள் பரிமாறினாள். நான் அவளை மெச்சும் விதமாக தோளோடு அணைத்துக்கொண்டு கன்னம் தட்டிப் பாராட்டினேன்.

அடுத்த நாள் பள்ளியில் இதைப்பற்றிய ஒரு விவாதம் நடந்திருக்கிறது. ‘’உங்க அம்மா உன்னை ஹக் பண்ணாங்களே; இப்பெல்லாம் எங்க அம்மா, அப்பா என்ன ஹக் பண்றதே இல்லை’’ என்று தோழியும், ‘’ஆமா, எங்க வீட்டிலயும் என்னை யாரும் கொஞ்சினதே இல்லை. எனக்கு அம்மா மடியில தலை வெச்சுப் படுக்கணும்னு ரொம்ப ஆசையா இருக்கும். ஆனா, அம்மா கண்டுக்க மாட்டாங்க’’ என்று அந்தப் பையனும் ஏக்கமாகச் சொன்னார்களாம். இதே கருத்தை வகுப்பில் இருந்த பெரும்பான்மையான பிள்ளைகள் கூறியிருக்கிறார்கள்.

அனேகமாக நிறைய வீடுகளில் தம் பிள்ளைகள் வளர்ந்து விட்டார்கள் என்று நினைத்து பெற்றோர் அவர்களைத் தொட்டுப் பேசுவது இல்லை. அதுவும் இரண்டாவது பிள்ளை பிறந்து விட்டால், மூத்த குழந்தைக்கு (இரண்டு வயதுதான் மூத்ததாக இருந்தாலும்) பெரிய மனுஷத்தனம் வந்துவிட வேண்டும் என்று ஏனோ தோன்றிவிடுகிறது. ஆனால், மனதளவில் அவர்கள் என்றும் குழந்தைகள்தான். தங்களை அன்பாக அணைத்து அவ்வப்போது முத்தமிட்டுக் கொஞ்ச வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஆனால், நிறைய பெற்றோர் அதைப் புரிந்துகொள்வதே இல்லை என்பது கசப்பான நிஜம்.

‘வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்.’ படத்தில் கமல் சொல்லும் ‘கட்டிப்பிடி வைத்தியம்’ ஒரு சிறந்த டெக்னிக். பெற்றோரின் அணைப்பு பிள்ளைகளுக்கு பாதுகாப்பு உணர்வையும், ஆறுதலையும், அன்பையும் அளித்து அவர்களின் மனவளர்ச்சிக்கு உதவுகிறது. ஏதாவது சாதித்தால் மட்டும்தான் அவர்களைக் கட்டிப்பிடித்து பாராட்ட வேண்டும் என்பது இல்லை. காலையில் தினமுமே பிள்ளைகளை எழுப்பும்போது கன்னத்தில் தட்டி லேசாக அணைத்து எழுப்பலாம். பள்ளிக்குக் கிளம்பும்போது தோளோடு சேர்த்து அணைத்து ‘ஹேவ் எ குட் டே’ என்று சொல்லி அனுப்பலாம். மாலையில் வீடு திரும்பியதும் அன்போடு அணைத்து வரவேற்கலாம்.

தம் பிரியத்தை மனதுக்குள்ளேயே பூட்டி வைத்துக்கொள்ளாமல், பெற்றோர்கள் அவ்வப்போது பிள்ளைகளை அணைத்து ஆசுவாசப்படுத்த வேண்டும். அதுதான் அவர்கள் குழந்தைகளுக்குத் தரும் சிறந்த பரிசு. நூறு வார்த்தைகள் தராத ஆறுதலை ஒரு அன்பான அணைப்பு தந்துவிடும். தொடுதல் வழியே மிகப்பெரிய ஆற்றலை, மகிழ்ச்சியைக் கடத்த முடியும். உறுதியையும் தன்னம்பிக்கையும் அளிக்க முடியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com