எதிர்மறை சிந்தனைகளை விரட்டுவது எப்படி?

எதிர்மறை சிந்தனைகளை விரட்டுவது எப்படி?

ற்றவர்களுடன் நேரில் பேசுவதைவிட, தங்கள் மனதோடுதான் பலரும் அதிக நேரம் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஏதாவது சிந்தித்தபடியோ நடந்து முடிந்த சம்பவங்களைப் பற்றி  அசை போட்டபடியோ பொழுதைக் கழிப்பதை கிட்டத்தட்ட எல்லோருமே மேற்கொள்கிறோம். இதே மனநிலை நீடித்தால் எதிர்மறை எண்ணங்கள் மனதை ஆக்கிரமித்து விடும். ஏதாவது ஒரு செயலை தொடங்கும்போது அது தவறாக போய்விடுமோ என்ற அவநம்பிக்கை அதிகரிக்கும். தேவையற்ற அச்சங்கள் மனதை உலுக்கும். இன்னும் சொல்லப்போனால் தற்கொலை எண்ணத் தூண்டலுக்கும் கூட அது வழிகோலுகிறது என்றே கூறலாம்.

எதிர்மறை எண்ணங்களை கையாள்வதற்கு முன் அவற்றை அடையாளம் காண்பதும், எந்த மாதிரியான எண்ணங்கள் மனதில் அடிக்கடி எழுகின்றன, அதற்கான காரணம் என்ன? என்பது பற்றி சிந்திக்க வேண்டும். மனதுக்குள்ளேயே சுய விமர்சனம் செய்து தேவையற்ற எண்ணங்கள் எழுவதைத் தடுக்க வேண்டும். அதையும் மீறி எழும் எதிர்மறை எண்ணங்களை போக்குவதற்கான சில வழிமுறைகளை இந்தப் பதிவில் காணலாம்.

வாசிப்பு: எதிர்மறையான சிந்தனையோ, பேச்சுக்களோ வெளிப்படும்போது நேர்மறை எண்ணங்களைத் தூண்டும் உறுதிமொழிகளை எடுக்க வேண்டும். நம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும் வார்த்தைகள், நேர்மறையான விஷயங்களை சுட்டிக்காட்டும் பழமொழிகள், அறிஞர்களின் பொன்மொழிகள் மற்றும் ஏதாவது ஒரு புத்தகத்தை ஆழ்ந்து படித்தல் போன்றவற்றை மேற்கொள்ளலாம்.

பிடித்ததை எழுதலாம்: எதிர்மறை எண்ணங்கள் எழும்போதெல்லாம் கவனத்தை திசை திருப்ப, மனதுக்குப் பிடித்தமான விஷயங்களை நோட்டுப்புத்தகத்தில் எழுதலாம். ஒவ்வொரு நொடியும் கடக்கும்போது அந்த சமயத்தில் நடக்கும் விஷயங்களில் மட்டுமே கவனத்தை செலுத்தலாம். அதுவே பயிற்சியாக மேற்கொண்டு வரலாம். நாளடைவில் கடந்த கால நினைவுகளோ, தேவையற்ற சிந்தனைகளோ மனதை ஆக்கிரமிப்பதற்கு இடம் கொடுக்காது. மனதில் எதிர்மறை எண்ணங்கள் தோன்றுவதற்கும் அனுமதிக்காது.

மனம் விட்டுப் பேசுவது: உடற்பயிற்சி செய்வது உடல் நலத்தை மட்டுமல்ல, மன நலத்தையும் பேணும். உடற்பயிற்சி செய்யும்போது வெளியிடப்படும், 'என்டோர்பின் ஹார்மோன்' இயற்கையாகவே மனநிலையை நேர்மறையாக வைத்திருக்கச் செய்யும் என்று கருதப்படுகிறது. எதிர்மறை எண்ணங்களை எதிர்த்துப் போராடவும் இது உதவும். எதிர்மறை எண்ணங்களைப் பற்றி உங்கள் நண்பர்கள், குடும்பத்தினர், குடும்ப மருத்துவரிடம் பகிர்ந்து கொள்ளலாம். அப்படி மனம்விட்டுப் பேசுவது உணர்ச்சிகளை வெளிப்படுத்தி மனதுக்கு நிவாரணம் அளிக்க உதவும்.

சுயப் பாதுகாப்பு: செய்தித்தாள்கள், தொலைக்காட்சிகள் இணையதளங்களில் எதிர்மறையான செய்திகளைப் படிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எதிர்மறை எண்ணங்களைத் தூண்டக்கூடிய சூழல் நிலவினால் அங்கிருந்து விலகி இருக்கலாம். போதுமான தூக்கம், சரியான நேரத்துக்குச் சாப்பிடுதல், விருப்பமான பொழுதுபோக்குகளில் ஈடுபடுதல் போன்ற சுயப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

அடையக்கூடிய இலக்கு: வாழ்க்கையில் இலக்குகள் என்பது அவசியம். ஆனால், நம்பத்தகாத எதிர்பார்ப்புகளை அவை உருவாக்கினால், எதிர்மறை எண்ணங்களுக்கு வழிவகுக்கும். எனவே, தேவையற்ற மன அழுத்தத்தைத் தவிர்க்க, அடையக்கூடிய இலக்குகளை தீர்மானித்து, அதனை நோக்கி பயணித்தால் எதிர்மறை எண்ணங்கள் பறந்தோடி, நேர்மறை எண்ணங்களுக்கு வழிவகுக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com