தற்கொலை எண்ணம் கொண்டவருக்கு உதவும் வழிமுறை!

தற்கொலை எண்ணம் கொண்டவருக்கு உதவும் வழிமுறை!

தற்கொலை எண்ணம் கொண்ட நபருடன் இருப்பவர்கள் என்ன செய்ய வேண்டும்.

பிறப்பு எத்தனை மகத்துவம் நிறைந்தது, அதைவிட இறப்பு மிகவும் கொடுமையானது. இயற்கை இறப்பே ஏற்றுக்கொள்ள முடியாத அளவிற்கு வலியை தரும் நிலையில் தற்கொலைகள் அதை காட்டிலும் கொடுமை நிறைந்தது.

உலக சுகாதார அமைப்பு, உலகம் முழுவதும் 40 வினாடிக்கு ஒருவர் தற்கொலை செய்து கொள்வதாக கூறுகிறது. ஆண்டிற்கு சுமார் 8 லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்வதாகவும், இதைவிட மூன்று மடங்கு அதிகமாக தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதாகவும் தெரிவிக்கிறது.

தற்கொலை முயற்சி எடுபடுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் 15 வயது முதல் 29 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்கின்றனர். மேலும் குடும்பப் பிரச்சனை, பொருளாதார பிரச்சனை, தேர்வில் தோல்வி, சட்டரீதியான பிரச்சனை, குற்றவியல் பிரச்சனை, போதைப் பொருள் பயன்பாடு, உறவுகள் இழப்பு, நம்பிக்கையின்மை ஆகிய காரணங்களால் பெரும்பான்மையான தற்கொலைகள் நடைபெறுவதாகவும் சொல்லப்படுகிறது.

தற்கொலை தற்போது பேராபத்தாக மாறி இருக்க கூடிய நிலையில், தற்கொலை மனநிலை கொண்டவர்களுடன் உடன் இருப்பவர்கள் செய்ய வேண்டியவை குறித்து விரிவாக பார்ப்போம்.

தற்கொலையில் ஈடுபடுபவர் ஏதோ ஒரு பிரச்சனைக்கு உள்ளாகி தவறான மனநிலைக்கு தள்ளப்படுகிறார். முதலில் அவ்வாறு மனநிலை உள்ளவர்களுடைய நிலையை உணர்ந்து அந்த மனநிலை மாறும் வரை காலதாமதம் ஏற்படுத்த வேண்டும். எந்த ஒரு பிரச்சனையும் குறிப்பிட்ட நாட்கள் வரை மட்டுமே அடர்த்தியாக இருக்கும். பிறகு அவை எண்ணத்திலிருந்தே போய்விடும். அதனால் காலம் தாழ்த்துவது மிக முக்கிய நடவடிக்கை.

அந்த கடினமான காலத்தில் பாதிக்கப்பட்டவர்களுடைய உணர்ச்சிகளை முழுமையாக கேட்க வேண்டும். மனநிலையை மாற்ற முயற்சி செய்ய வேண்டும். நேரம் கிடைக்கும் பொழுது நம்பிக்கையான வார்த்தைகள் மாமருந்து.

தற்கொலை எண்ணம் கொண்டவரை தனியாக விடுவதை தவிர்த்து, முழுமையாக அவருக்காகவே நேரம் ஒதுக்க வேண்டும். அந்த சமயங்களில் மனநல பாதிப்பு ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது. எனவே மருத்துவர், மனநல ஆலோசகரை அணுகி உதவலாம். மேலும் தமிழ்நாடு அரசின் சார்பில் 24 மணி நேரமும் மனநல ஆலோசனை வழங்க 104 அவசர உதவி மையம் செயல்பட்டு வருகிறது.

தற்கொலை எண்ணம் கொண்டவருக்கு உதவும் வழிமுறை!
“தற்கொலை தடுப்பு நமது பொறுப்பு!”- சிநேஹா தற்கொலை தடுப்பு மைய நிறுவனர் டாக்டர் லக்ஷ்மி விஜயகுமார்!

தற்கொலை எண்ணம் கொண்டவர்களுடைய எண்ணத்தை மாற்ற வேறு சூழலுக்கு அவரை அழைத்துச் செல்வது நல்ல நடவடிக்கை. குறிப்பாக சுற்றுலா செல்வது, அவருக்கு பிடித்த இடங்களுக்கு அழைத்துச் செல்வது போன்ற நடவடிக்கைகள் பயன் தரும். அதே சமயம் தனியாக விடுவதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக அந்த சமயங்களில் மது போன்ற அனைத்து வகையான போதைப் பொருட்களின் தவிர்ப்பது நல்லது. மேலும் ஏற்பட்டிருக்கக்கூடிய பிரச்சனையின் வீரியம் உணர்ந்து அதற்கான ஆலோசனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் பாதிக்கப்பட்டவரின் உடன் இருப்பவர்கள் மற்றும் குடும்பத்தினர் எப்போதும் விழிப்புடன் கண்காணிக்க வேண்டும். இப்படியான தொடர் நடவடிக்கைகளால் ஏற்படும் காலதாமதம் மனமாற்றத்தை ஏற்படுத்தும் என்று உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.

பிரச்சனை இல்லாத மனிதர்களே இல்லை, பிரச்சனைகள் இல்லாதவர்கள் மனிதர்களே இல்லை என்பதை ஒவ்வொரு நபரும் உணர்ந்து கொண்டால் எல்லாம் கடந்து போகும்.

வாழ்வதற்கு புது நம்பிக்கையை பெற தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-க்கு தொடர்பு கொண்டு பேசலாம். அல்லது தன்னார்வ தற்கொலை தடுப்பு மையமான சிநேகா தொண்டு நிறுவனத்திதை Contact: இ மெயில் help@snehaindia.org, தொலைபேசி மூலமாக +91 44 2464 0050  +91 44 2464 0060  தொடர்புகொள்ளமுடியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com