எளிமையான மனிதர்களே எப்போதும் நிலைப்பார்கள்!

எளிமையான மனிதர்களே எப்போதும் நிலைப்பார்கள்!

ளிமை என்பது எப்போதும் ஒரேமாதிரி இருப்பதில் அடங்கியிருக்கிறது என்பதே உண்மை. சிலர் எந்த பதவி வந்தாலும் மாறாமல் பழகுவார்கள். பணமோ, பதவியோ, பொறுப்புகளோ, விருதுகளோ, அறிவோ அவர்களை ஒருபோதும் மமதை மிகுந்தவர்களாக மாற்றுவது இல்லை. அவர்களின் அணுகுமுறை ஒன்றுபோலவே இருக்கும். எதுவும் நமக்குச் சொந்தமானது அல்ல என்ற புரிதலும், பதவி போன்ற அனைத்தும் மாயை என்கிற தெளிவும் இருக்கிறவர்களால் மட்டுமே எளிமையாக பழக முடியும்.

சிலர் உடைகளில் மட்டும் எளிமையாக இருப்பார்கள். கதர் சட்டை அணிவார்கள். கைகடிகாரம் இல்லாமலும், மலிவான செருப்பை அணிந்திருப்பார்கள். ஆனால், வெளிநாட்டுக் கார்களில் பயணிப்பார்கள். அவர்களை யாரும் எளிதில் நெருங்க முடியாதவர்களாக நடந்து கொள்வார்கள். எளிமை என்பது தோற்றத்தில் மட்டும் இல்லை. அணுகு முறையிலும் இருக்கிறது. சில அதிகாரிகளையும், அதிகாரத்தில் இருப்பவர்களையும் சந்திக்கச் சென்றால் வேறு எந்தப் பணியும் இல்லாமல் இருந்தால் உடனடியாக அழைத்து சந்திப்பார்கள். நம் பிரச்னையை கவனிப்பார்கள். நமக்கும் அவர்களிடத்தில் நம்பிக்கை பிறக்கும்.

சில அதிகார மட்டத்தில் இருப்பவர்களை சந்திக்க முற்பட்டால் அவர்கள் நம்மைக் காக்க வைப்பார்கள். பல நாட்கள் முயன்றாலும் ஒரு நிமிடம் அவர்களைப் பார்த்து பேச இயலாது. அவர்கள் பார்க்க எளிமையாக தோன்றுவார்கள். அதை வைத்து வெளி உலகம் ஒரு முடிவுக்கு வரும். ஆனால், உண்மை வேறு விதமாக இருக்கும்.

எளிமையானவர்கள் மென்மையாகப் பேசுவார்கள். தங்களைப் பற்றி எந்த முன்னுரையும் தர மாட்டார்கள். எல்லாம் தெரியும் என்ற எண்ணம் அவர்களிடம் துளியும் காணப்படாது. எந்த மூலையிலிருந்தும் ஞானக்கீற்றுக்கள் வெளிப்படலாம் என்ற திறந்த மனதோடு திகழ்வார்கள். அவர்களை சந்தித்தவர்களுக்குத் தங்கள் கவலைகள் அகன்றதைப் போன்ற திருப்தியை அவர்கள் வழங்குவார்கள். எளிமையைப் புரிந்துகொள்வதும், அதை நேசிப்பதுமே மேன்மை. ஆடம்பரம் சிம்மாசனத்தைத் தேடி அலைகிறது. எளிமைக்கே மக்களே சிம்மாசனத்தை அளிப்பார்கள்.

நேரம் தவறாமை, அடுத்தவர்களுக்கு ஒதுக்கிய நேரத்தை மதித்தல், மற்றவர் பணத்தில் சிக்கனம் காட்டுதல், தன் பணத்தில் தாராளமாக இருத்தல், தனக்காகச் செய்யாத செலவை அடுத்தவர்களுக்கு செய்தல் போன்ற உயர்ந்த பண்புகள் எளிமையானவர்களிடம் எப்போதும் இருக்கும். எத்தனையோ மொழிகள் இருந்தாலும் எளிமையான மொழிகளே நிலைத்து நிற்பதைப் போன்று, எத்தனையோ மனிதர்கள் பூமியில் வாழ்ந்து போனாலும் எளிமையான மனிதர்களே எப்போதும் நினைந்து போற்றப்படுவார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com